சனிபகவானின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட இரண்டாவது நட்சத்திரம் அனுஷம். செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்க, மற்றவர்களை காட்டிலும் மாறுபட்ட சிந்தனை கொண்டவர்களாகவே இருப்பீர்கள். பெற்றோரிடம் அன்பு செலுத்துவதில் உங்களுக்கு நிகர் நீங்களே. கடைசிவரை அவர்களை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர். அமைதியின் சிகரமான நீங்கள் உண்மையை மட்டுமே பேசவேண்டும் என்று நினைக்கும் குணம் கொண்டவர். இருப்பினும், உங்களை யாராவது வம்பிற்கு இழுத்தால் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவீர்கள். யார் தவறு செய்தாலும், அவர்கள் எத்தகைய உயர்நிலையில் இருந்தாலும் தட்டிக் கேட்கத் தயங்கவே மாட்டீர்கள். தெய்வபக்தி என்பது சற்று அதிகமாகவே இருக்கும். இறக்க குணம் உங்க பிறவிலேயே உங்களுடன் பிறந்துள்ளது.
தன்னம்பிக்கை கொஞ்சம் குறைவு; ஆனால், ஆழ்ந்த அறிவு உண்டு. அழகான தோற்றமும் கலையுணர்வும் கொண்ட நீங்கள் எந்த விஷயத்திலும் பொறுப்புடன் செயல்படுவீர்கள். நீங்கள் ஆண்களாக இருந்தால் பெண்களாலும், பெண்களாக இருந்தால் ஆண்களாலும் விரும்பப்படுவீர்கள். எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது முடித்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பீர்கள். சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்ப வாழப் பழகிக்கொள்வீர்கள். வாழ்க்கையில் எத்தனை ஏற்ற இறக்கங்கள் வந்தாலும் அதனால் மனம் சோர்ந்து போக மாட்டீர்கள். எப்போதும் எளிமையாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். அனைவரிடமும் எவ்வித பாகுபாடுமின்றி ஒரே மாதிரி பழகும் நல்லுள்ளம் படைத்த அனுஷம் நட்சத்திரக்காரர்களே உங்களுக்கு உரிய கோவில் எது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அனுஷம் நட்சத்திர கோயில் [Anusham Natchathiram Kovil]
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் ஜாதகத்தில் உள்ள பிரச்சனைகள் விலக செல்ல வேண்டிய ஆலயம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் திருநின்றியூர் அல்லது திரிநின்றஊர் என்ற இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில். சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கும் இந்த மகாலட்சுமிபுரீஸ்வரர் கோயிலுக்கு வாழ்க்கையில் ஒருமுறையாவது சென்று வருவதன் மூலம் வாழ்க்கையில் நிச்சயம் நல்ல மாற்றங்கள் நிகழும்.
தல வரலாறு:
ஜமதக்னி மகரிஷியின் மனைவி ரேணுகா. இவர் குளத்தில் சென்று தண்ணீர் எடுத்து வருகையில் ரேணுகா கந்தர்வன் ஒருவனின் அழகை நீரில் கண்டு வியந்தால். இதை அறிந்த மகரிஷி ரேணுகாவின் தலையை வெட்டும்படி மகன் பரசுராமரிடம் கட்டளையிட்டார். பரசுராமனும் தாய் என்று கூட பாராமல் தாயின் தலையை துண்டாக்கினான். அதன்பிறகு தந்தையிடம் வரம் பெற்று தாயை உயிர்ப்பித்தான். தாயைக்கொன்ற தோஷம் நீங்குவதற்காக இத்தலத்தில் அவன் வழிபட்டு மன அமைதி பெற்றான். ஜமதக்னியும் தான் அவசரத்தில் செய்த செயலுக்கு வருந்தி இங்குள்ள சிவனை வணங்கி மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அப்போது சிவன் இருவருக்கும் காட்சி தந்தார். மகாலட்சுமியும் இத்தலத்தில் சிவனை வழிபட்டு அருள் பெற்றதால், இங்குள்ள சிவன் மகாலட்சுமீஸ்வரர் என்றும், அம்மன் உலகநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
தல சிறப்பு:
சோழ மன்னன் ஒருவர் தினமும் சிதம்பரம் நடராஜரை தரிசித்து வருவதற்காக, இந்த ஆலயம் அமைந்திருக்கும் வழியாகவே சென்று வந்துள்ளார். ஒருசமயம் அவர் இத்தலத்தை கடந்து சென்றபோது, காவலாளிகள் கொண்டு சென்ற திரி அணைந்து விட்டது. அதனை மீண்டும் எரிய வைக்க முயற்சி செய்தும் முடியாமல் போய்விடுகிறது. ஆனால், அவர்கள் இத்தலத்தை கடந்து சென்றபோது திரி தானாகவே எரியத் துவங்கியது. இது தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இதற்கு என்னதான் காரணம் என்று மன்னன் சிந்திக்க, அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு நாள் அப்பகுதியில் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த இடையனிடம் இக்கோயிலில் மகிமையான நிகழ்ச்சிகள் நிகழுமா எனக் கேட்டார்.
அதற்கு அவன், மன்னரே! இந்த பகுதியில் லிங்கம் ஒன்று உள்ளது. அதில் நான் மேய்க்கும் பசுக்களில் சில தானாகவே பால் சொரிகின்றது என்றான். உடனே மன்னன் அப்பகுதிக்கு சென்று சிவலிங்கத்தை கண்டு, அதை வெளியே எடுக்க முயற்சி செய்தார். அப்போது தோண்டும்போது ரத்தம் வெளிப்பட்டது. எனவே, அந்த இடத்திலேயே அனுஷம் நட்சத்திர தினத்தில் கோயில் எழுப்பி வழிபட்டார். மேலும், திரி அணைந்த தலம் என்பதால், 'திரிநின்றியூர்' என்றும், மகாலட்சுமி வழிபட்டதால் 'திருநின்றியூர்' என்றும் பெயர் பெற்றது.
நவக்கிரகத்தில் உள்ள சூரியனும், சந்திரனும் ஒருவரையொருவர் நேரே பார்த்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பு. எனவே, அமாவாசை நாட்களில் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். சிவலிங்கத்தின் பாணத்தில் தற்போதும் கோடரி வெட்டிய தழும்பு இருக்கிறது. மேலும், பரசுராமர் வழிபட்ட சிவன் பிரகாரத்தில் பரசுராமலிங்கமாக இருக்கிறார். இக்கோயிலை சுற்றி மூன்று குளங்கள் இருக்கின்றன. பிரகாரத்தில் செல்வ விநாயகருக்கு சன்னதி ஒன்று உள்ளது. அனுஷம் நட்சத்திரத்தன்று இவருக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. கடன் தொல்லை உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால் தீர்வு ஏற்படும் என்பது நம்பிக்கை. மற்றொரு சிறப்பு வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர் வலது புறம் திரும்பிய் மயில் வாகனத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு சிவனுக்கு மாதுளம்பழ முத்துக்களால் அபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷம்.
திருவிழாக்கள்:
இக்கோயிலில் ஆனித்திருமஞ்சனம், சிவராத்திரி, திருக்கார்த்திகை ஆகியவை இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
கோவில் திறக்கும் நேரம்:
ஆலயம் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மீண்டும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். எனவே, வெகு தொலைவில் இருந்து செல்ல நினைப்போர் இந்த நேரத்திற்கு ஆலயத்தை சென்றடையும் படி திட்டமிட்டுக்கொள்வது சிறந்தது.
இருப்பிடம்: மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கிமீ தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
தொடர்புக்கு: +91 4364 279 423 / +91 94861 41430.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…