கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்பன் கடவுளின் நாமம் எங்கெங்கும் ஒலிப்பதைக் காணலாம். ஐயப்பனின் அருளைப் பெற, மாலையிட்டு வணங்கி துதித்து சபரிமலை யாத்திரையைத் துவங்குவர். நாம் வேண்டும் அனைத்து நலன்களையும் அளிக்கும் ஐயப்ப பகவானின் நாமத்தை நாள்தோறும் உச்சரித்து, விரதம் இருந்து வழிபடலாம். இத்தகைய நற்பலன்களைத் தரக்கூடிய ஐயப்பனுக்கு விரதம் இருந்து வழிபடும் முறைகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
சபரிமலை ஐயப்பனை வேண்டி 48 நாள்கள் அதாவது ஒரு மண்டலம் முழுவதும் ஐயப்பனுக்கு மாலையணிந்து வழிபடுவர். அதன் படி, மாலையணிந்த நாள் முதல் கோவிலுக்குச் சென்று வரும் வரை பக்தர்கள் கண்ணும் கருத்துடன் எந்த வித தீய செயல்களுக்கும் இடம் கொடுக்காமல் நல்ல முறையில் விரதம் இருந்து வழிபட்டு ஐயப்பனின் அருள் பெறுவர். இதில், பக்தர்கள் விரதம் இருக்கும் முறைகளையும், அதனை கடைபிடிக்கும் வழிமுறைகளையும் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
பக்தர்கள் 48 நாள்கள் அல்லது ஒரு மண்டலம் மாலையணிந்து வழிபடுவர். அதன் படி, கார்த்திகை மாதத்தின் முதல் நாள் ஐயப்பனுக்கு மாலையணிவது சிறந்தது ஆகும்.
இந்த சமயத்தில், நாள், கிழமை எதுவும் பார்க்க வேண்டியது இல்லை. குறைந்தபட்சம் 41 நாள்கள் விரதம் மேற்கொண்டு சபரிமலை யாத்திரையைத் துவங்கலாம்.
ருத்திராட்சை அல்லது துளசிமணி மாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாக மாலை வாங்கி அத்துடன் ஐயப்ப திருவுருவப் பதக்கம் ஒன்றினை இணைத்து, பல முறை முறையாக விரதம் இருந்து, பெருவழிப் பாதையில் சென்று வந்த பழமலை ஐயப்பன்மார் ஒருவரை குருவாக ஏற்று அவரின் கரங்களினால் திருவிளக்கு முன்பாகவோ, திருக்கோவில்களிலோ குருநாதரை வணங்கி மாலையணிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாலை அணிந்த பின், தனது குருநாதருக்கு தங்களால் இயன்ற குரு தட்சணையை வழங்கி அடி வணங்கி பக்தர்கள் ஆசி பெற வேண்டும்.
பிறகு, ஐயப்பனை நினைத்து வேண்டி மாலை தரித்த நேரத்திலிருந்து குருசாமியை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அவரது சொற்களை ஏற்று, மனக் கட்டுப்பாட்டுடன் பணிந்து நடந்து விரதத்தைக் கையாண்டு யாத்திரையை இனிதாக்க வேண்டும்.
ஐயப்பனுக்கு மாலையிடும் பக்தர்கள், நீலம், கருப்பு, காவி உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒரு நிறத்தில் உடைகள் அணிய வேண்டும்.
பணி தொடர்பான சில காரணங்களினால் அணிய இயலாவிடினும், பஜனையில் கலந்து கொள்ளும் போதும், யாத்திரையின் போதும், முழுவதுமாக கட்டாயம் இந்த வண்ண ஆடைகளை உடுத்துவது அவசியம் ஆகும்.
குறிப்பாக காலை, மாலை என இரு வேளைகளிலும் (சூரிய உதயத்திற்கு முன்பும், சூரிய அஸ்தமனத்திற்கு பின்பும்) தவறாமல் குளிர்ந்த நீரில் நீராடி ஐயப்பன் திருவுருவப் படத்தை வைத்து வணங்க வேண்டும்.
தினந்தோறும் ஆலய வழிபாடும், பஜனைகளில் கலந்து கொண்டு ஐயப்பனை வணங்குவதன் மூலம் மனதில் பேரின்பம் நல்கும்.
படுக்கை, தலையணைகளைத் தவிர்த்து, சிறு துணை மட்டும் தரையில் விரித்து படுத்துக் கொள்ள வேண்டும். மேலும், காலணிகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
திரைப்படங்கள் பார்ப்பது, விளையாடுவது, வேடிக்கை பார்ப்பது, பொய் உரைப்பது, சூதாடுவது, போதையூட்டும் பொருள்களை உபயோகப்படுத்துவது, புகைப்பிடிப்பது உள்ளிட்டவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
பிரம்மச்சரிய விரதத்தை தவறாமல் ஒழுங்குடன் கடைபிடிப்பது விரதத்தின் முக்கியமான ஒன்றாகும்.
மற்ற ஐயப்பன்மார்களிடம் உரையாடுதலைத் தொடங்கும் முன்பும், விடைபெறும் போதும் “சாமி சரணம்” என்று சொல்ல வேண்டும். இது ஐயப்பனை வணங்கி போற்றுதல் காரணமாக கூறப்படுகிறது.
விரதம் இருக்கும் போது, அசைவ உணவு உண்ணுதல் முற்றிலும் இருக்கக் கூடாது.
சபரிமலை யாத்திரை பயணம் தொடங்கும் போது “போய் வருகிறேன்” என யாரிடமும் சொல்லிக் கொள்ளக் கூடாது.
பக்தர்கள் மாலை அணிந்த பிறகு, அவர்கள் மற்றவர்களை அழைப்பதற்கு உச்சரிக்கும் வார்த்தைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது ஆண்களை “ஐயப்பா” எனவும், பெண்களை “மாளிகைபுறம்” எனவும், சிறுமிகளை “கொச்சி” எனவும், சிறுவர்களை “மணிகண்டன்” எனவும் குறிப்பிட்டே அழைக்க வேண்டும்.
மாலையணிந்த பின், குடும்பத்தில் நெருங்கியவர்கள் காலமானால், அதன் காரணமாக துக்கம் நிகழ்வதனால், அந்த வருடன் யாத்திரையை மேற்கொள்ளக் கூடாது.
இது போன்ற பல்வேறு விரத கட்டுப்பாடுகளை மேற்கொண்டு பக்தர்கள் புனிதமான யாத்திரையைத் தொடங்கி ஐயப்பனின் அருளைப் பெறலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…