புதன்பகவானின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட இரண்டாவது நட்சத்திரம் கேட்டை. கேட்டையில் பிறந்தவர்கள் கோட்டை கட்டி ஆள்வார்கள் என்ற பழமொழியையும் கேள்விபட்டிருப்போம். கோட்டை கட்டி ஆள்கிறீர்களோ இல்லையோ, கோட்டையில் இருந்து ஆட்சி செய்பவர்களின் நட்பை கொண்டிருப்பீர்கள். தான தர்மங்கள் செய்வதில் வள்ளல். மன தைரியம் சற்று அதிகமாகவே இருக்கும். இயல்பிலேயே நல்ல குணம் கொண்டிருந்தாலும், அடிக்கடி முன்கோபத்தில் வார்த்தைகளை விட்டுவிட்டு பிறகு அதை நினைத்து வருத்தப்படுவீர்கள். நெருங்கிய நண்பர்கள் என்று அதிகம் இருக்கமாட்டார்கள்.
கிடைத்ததைக்கொண்டு திருப்தியடைவீர்கள். யாருடைய உதவியும் இல்லாமல் சுயமுயற்சியால் எதிலும் முன்னேறுவீர்கள். அடிக்கடி எதையாவது கொரித்துக்கொண்டே இருப்பீர்கள். அடிக்கடி மற்றவர்களிடம் உங்களைப் பற்றி நீங்களே தற்பெருமை பேசிக்கொள்வீர்கள். மற்றவர்களிடம் கைகட்டி வேலை செய்யவே பிடிக்காது. மற்றவர்கள் செய்த உதவியை கடைசி வரை மறக்கவே மாட்டீர்கள். உங்களிடம் இருப்பதை யாரேனும் கேட்டால் சற்றும் தயங்காமல் உடனே கொடுத்துவிடும் குணம் படைத்தவராக இருக்கும் கேட்டை நட்சத்திரக்காரர்களே உங்களுக்கு உரிய கோவில் எது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
கேட்டை நட்சத்திர கோயில் [Kettai Natchathiram Kovil]
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் ஜாதகத்தில் உள்ள பிரச்சனைகள் விலக செல்ல வேண்டிய ஆலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிகோயில் என்ற இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில். பெருந்தேவி தாயாருடன் வரதராஜ பெருமாள் மூலவராக அருள்பாலிக்கும் இக்கோயிலுக்கு கேட்டை நட்சத்திரத்துடன் கூடிய செவ்வாய்க் கிழமைகளில் வழிபட்டால் பலன் இரட்டிப்பாக இருக்கும்.
தல வரலாறு:
ராமானுஜர், அவருடைய குருவான பெரிய நம்பிகள் மற்றும் அவருடைய சீடர் கூரத்தாழ்வார் மூவரும் ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்தனர். அப்போது, ராமானுஜர் புகழ் பெறுவதை பிடிக்காத ஒரு சோழ மன்னன், அவரை சிறைப்பிடித்து வரும்படி படைகளை அனுப்பினார். ஆனால் அவர்களுக்கு ராமானுஜரை அடையாளம் தெரியாது. எனவே, சீடர் கூரத்தாழ்வார், ராமானுஜர் போன்று வெள்ளைநிற ஆடை அணிந்துக்கொண்டு நான் தன ராமானுஜர் என்று சொல்லி சோழ படையினருடன் சென்றார். அவருடன் பெரிய நம்பிகளும் அவரது மகள் திருத்துழாயும் சென்றனர்.
அரண்மனைக்கு சென்றபின், பெரியநம்பியிடமும், கூரத்தாழ்வாரிடமும், வைணவத்தை விட சைவம் தான் பெரிய மதம் என்று எழுதித்தரும் படி மன்னன் சொல்ல, அதை அவர்கள் மறுத்துவிட்டார்களாம். அதனால் கோபமடைந்த மன்னன் அவர்கள் இருவரின் கண்களையும் பறிக்கும் படி கூறினான். கூரத்தாழ்வார், தன் கண்களை தானே குத்திக்கொண்டு பார்வையை இழந்தார். பிறகு சோழ வீரர்கள் பெரியநம்பிகளின் கண்களைக் குருடாக்கினர். அவருடைய மகள் திருத்துழாய் பார்வையிழந்த இருவரையும் ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து சென்றார்.
செல்லும் வழியில் பசுபதிகோயில் என்ற இடத்தை அடைந்தபோது, 105 வயதான பெரிய நம்பிகள் கண்களை இழந்ததால் நகர முடியாமல் போராடினார். அப்போது அவருக்கு காட்சி தந்த வரதராஜப் பெருமாள், அவர் தங்கியிருந்த அந்த தலத்திலேயே மோட்சம் வழங்கினார். ஸ்ரீராமானுஜர் பிற்காலத்தில் இக்கோயிலுக்கு வந்து பெரிய நம்பிக்கு தனி சன்னதி எழுப்பியதாக கூறப்படுகிறது.
தல சிறப்பு:
மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்த பெரியநம்பிகளுக்கு இத்தலத்தில் திருநட்சத்திர விழா நடைபெறும். மாதந்தோறும் வரும் கேட்டை நட்சத்திரத்திலும் இவருக்கு பூஜை நடக்கும். கேட்டை நட்சத்திரக்காரர்கள், தங்களுடைய ஜாதக தோஷம் நீங்க இவரிடம் வந்து வேண்டிக்கொள்ளலாம். வழிபாடு செய்யும்போது இவருக்கு வெள்ளைநிற வஸ்திரம், மல்லிகைப்பூ மாலை அணிவித்து, அதிரசம் மற்றும் வடை நைவேத்யம் படைத்து, மருதாணி இலை, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி ஆகிய மூன்றும் சேர்த்த எண்ணெயில் தீபமேற்றி வழிபட்டால் இரட்டிப்பு பலன். இந்த எண்ணெய் கோயிலிலேயே கிடைக்கிறது. குறிப்பாக கண் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கூரத்தாழ்வாரிடம் வேண்டிக் கொண்டால் விரைவில் குணமடையும் என்று நம்பப்படுகிறது.
கோவில் திறக்கும் நேரம்:
ஆலயம் காலை 05.30 மணி முதல் 12.00 மணி வரையிலும், மீண்டும் மாலை 04.30 மணி முதல் இரவு 08.30 மணி வரையிலும் திறந்திருக்கும். எனவே, வெகு தொலைவில் இருந்து செல்ல நினைப்போர் இந்த நேரத்திற்கு ஆலயத்தை சென்றடையும் படி திட்டமிட்டுக்கொள்வது சிறந்தது.
இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கிமீ தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கிமீ தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
தொடர்புக்கு: +91 97903 42581, 94436 50920
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…