தை அமாவாசை சிறப்பு:
பொதுவாக அமாவாசை நாட்களிலும், நினைவு நாட்களிலும் நமது முன்னோர்கள் தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று ஆசீர்வதிப்பார்கள். அமாவாசை நாட்களில் தை அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. உத்திராயணன் காலத்தில் வரக்கூடிய அமாவாசையே தை அமாவாசை. ஆடி அமாவாசையன்று நமது பித்ருக்கள் பூமிக்கு வந்து சுமார் 6 மாதம் தங்கி, தை அமாவாசை நாளில் மனம் குளிர்ந்து நமது வழிபாடுகளை பெற்றுக்கொண்டு மீண்டும் பித்ருலோகம் செல்வார்களாம்.
பூலோகம் வந்து மீண்டும் பித்ருலோகம் செல்லும் இந்த தை அமாவாசை நாளில், புனித நீராடி, அவர்களுக்கு எள்ளும் நீரும் அளித்தால் எண்ணற்ற பலன்களும், தலைமுறைக்கும் புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். 12 மாதங்களில் வரக்கூடிய அமாவாசை நாட்களில் விரதம் இருந்து திதி கொடுக்காதவர்கள் கூட இந்த தை அமாவாசையன்று விரதம் இருந்து திதி கொடுப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதுமட்டுமல்லாமல், தை அமாவாசை நாளில் செய்யும் பித்ரு பூஜைகள் நமது ஏழு தலைமுறைகளை சேர்ந்த நமது முன்னோர்களும் மகிழ்ச்சியடைவர். எனவே, தை அமாவாசை விரதம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.
தை அமாவாசை நேரம் 2023: ஜனவரி 21, 2023 அதிகாலை 04.25 முதல் ஜனவரி 22, 2023 அதிகாலை 03.20 வரை.
தை அமாவாசை வழிபாட்டிற்கான சிறந்த நேரம் 2023: ஜனவரி 21, 2023 காலை 10.30 - மாலை 01.30 மணிக்குள் முன்னோர் வழிபாட்டினை முடித்து, படைத்து விரத்தை முடித்துக்கொள்ளலாம்
தை அமாவாசை விரதம் இருப்பது எப்படி?
அன்றைய தினம் புரோகிதர் மூலமாக தர்ப்பணம் செய்வது மிக சிறப்பு. அப்படி முடியாவிட்டால் பக்தியுடன் மனதார பித்ருக்களை வீட்டிலேயே விரதம் இருந்துக் கூட வழிபடலாம். தை அமாவாசையன்று முன்னோர்களுக்கு சைவ உணவை தான் படைக்க வேண்டும். அவரவர் குலவழக்கப்படி பூஜை செய்து கொள்ளலாம். ஒருவேளை எப்படி பூஜை செய்ய வேண்டும் தெரியாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்.
அமாவாசை நாளுக்கு முன்பாகவே வீட்டை சுத்தம் செய்துவிட வேண்டும். தை அமாவாசை நாளில் அதிகாலை எழுந்து நீராடி, பித்ருக்களின் படங்களை சுத்தம் செய்து தெற்கு திசை நோக்கி வைத்து பூமாலை அல்லது பூக்கள் வைத்து அலங்கரித்துவிடுங்கள். அதுவும் துளசி மாலையாக இருந்தால் கூடுதல் சிறப்பு.
பின்னர், படத்திற்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து ஒரு சொம்பு நிறைய கருப்பு எள்ளுடன் கூடிய தண்ணீரை முன்னோர்களின் படத்திற்கு முன்பாக வைத்துக்கொள்ளலாம். அவரவர் வசதிக்கேற்ப படையல் போட்டுக்கொள்ளலாம். விரதம் இருப்பவர்கள் எதுவும் சாப்பிடமால் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ, அத்தனை இலைகளைபோட்டு சமைத்த உணவுகளை வைத்து அகல்விளக்கேற்றி, தூபம், தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.
பின்னர் தயிர் சாதம் அல்லது பருப்பு சாதத்தில் சிறிது கருப்பு எள்ளை கலந்து காக்கைக்கு வீட்டின் தென்-மேற்கு பாகத்தில் அல்லது தென்-கிழக்கு பாகத்தில் படைத்து வழிபட்டால் நன்மைகள் பெருகும். அதேபோல், காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் சாந்திப்பெற்று நமக்கு ஆசி வழங்குவார்கள்.
இப்படி வழிபாடு முடிந்த பிறகு நீங்களும் விரதத்தை முடிக்கலாம். அன்றைய தினம் முன்னோர்களின் பூஜை அனைத்தும் முடிந்த பின்னரே கடவுள் வழிபாட்டினை செய்ய வேண்டும். மேலும், இந்த நாளில் பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பதும் நல்ல பலன்களை தரும்.
சூரிய வழிபாடு:
அமாவாசை வழிபாடுகளில் சூரிய வழிபாடு மிகவும் முக்கியமானது. அன்றைய தினம் சூரியனை நோக்கி சூரிய நமஸ்காரம் செய்து, சூரிய காயத்ரி மந்திரம் சொல்லி வணங்குவது ரொம்பவே சிறப்பு.
"ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாஸ அஸ்தாய தீமஹி
தன்னோ சூர்ய ப்ரசோதயாத்"
பிதுர்காரனாகிய சூரியன் நாம் செய்யும் தானம், தர்மங்களுக்கான பலன்களை பிதுர்தேவைதைகளிடம் வழங்குவதாக தான் சாஸ்த்திரம் சொல்கிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…