அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு பெரிய நிவாரணத்தை அறிவித்துள்ள மத்திய அரசு, அவைகளுக்கு ரூ.22,000 கோடி இழப்பீடு வழங்க இன்று ஒப்புதல் அளித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது
"உலகம் முழுவதும் எல்பிஜி விலை அதிகரித்து வருகிறது. விலைவாசி உயர்வின் சுமை சாமானிய மக்கள் மீது விழக்கூடாது என்பதற்காக, பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு ஒருமுறை 22,000 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது" என்று அமைச்சரவைக் கூட்டம் நடந்து முடிந்த பிறகு, செய்தியாளர் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய மூன்று எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு ஒரு முறை மானியம் வழங்கப்படும். மூன்று நிறுவனங்களும் உள்நாட்டு எல்பிஜியை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்ட விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்கின்றன.
முன்னதாக ஜூன் 2020 முதல் ஜூன் 2022 வரை, எல்பிஜியின் சர்வதேச விலை சுமார் 300 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், சர்வதேச எல்பிஜி விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களில் இருந்து நுகர்வோரைக் காப்பதற்காக, உள்நாட்டு எல்பிஜியின் நுகர்வோர்களுக்கு செலவு அதிகரிப்பு முழுமையாக வழங்கப்படவில்லை என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
அதன்படி, இந்த காலகட்டத்தில் உள்நாட்டு எல்பிஜி விலை 72 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இது மூன்று நிறுவனங்களுக்கு கணிசமான இழப்புக்கு வழிவகுத்தது.
இந்த இழப்புகள் இருந்தபோதிலும், மூன்று பொதுத்துறை எண்ணெய் விநியோக நிறுவனங்கள் நாட்டில் அத்தியாவசிய சமையல் எரிபொருளின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்துள்ளன. எனவே உள்நாட்டு எல்பிஜி விநியோகத்தில் ஏற்படும் இந்த இழப்புகளுக்கு மூன்று பொதுத்துறை என்னை விநியோக நிறுவனங்களுக்கு ஒரு முறை மானியம் வழங்க அரசாங்கம் முடிவு செய்தது.
அதன்படி, மூன்று எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களுக்கு ஒரு முறை மானியமாக ரூ.22,000 கோடி வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவு இந்தியாவில் எரிபொருள் விலை தொடர்ந்து உயராமல் கட்டுக்குள் வைக்கும் அரசின் முயற்சிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…