ஐடி நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்கு இந்தியாவில் மொத்தமாக 1,55,000 புதிய பணியாளர்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது.
புதிய, முன் அனுபவம் இல்லாத நபர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் விதமாக, முன்னணி ஐடி நிறுவனங்கள் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
அதன் படி, இன்ஃபோசிஸ் நிறுவனம் வரும் 2023 ஆம் ஆண்டின் நிதியாண்டில் 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், பணியமர்த்த உள்ள 40,000 பேரும் முன் அனுபவம் இல்லாத புதியவர்கள் என்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டின் நிதியாண்டில் சுமார் 50,000 புதியவர்களை பணியில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் வெளியேறுபவர்களின் விகிதம் 27.1 ஆக குறைந்துள்ளது. பல்வேறு ஐடி சார்ந்த நிறுவனங்கள், கொரோனாவுக்கு பிந்தைய வாழ்க்கை, மூன்லைட்டிங் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் நிறுவனங்களிலிருந்து ஊழியர்கள் வெளியேறி வருகின்றனர்.
இதனை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு பெருந்தொகையும் ஐடி துறை சார்ந்த நிறுவனங்கள் செலவழித்து வருகின்றன. டிசிஎஸ், ஹெச்சிஎல், விப்ரோ, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் ஊழியர்கள் வெளியேறும் விகிதத்தை 20% அதிகமாக கொண்டுள்ளது.
தற்போது, இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 3,45,218 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் முன் அனுபவம் இல்லாத நபர்களை வேலைக்கு எடுப்பதன் மூலம் பல்வேறு வகையில் நன்மை கிடைப்பதாக அமைகின்றன. மேலும், முன் அனுபவம் உள்ளவர்கள் பணியை விட்டு வெளியேறுவதாலும், அவர்களுக்கு வரக்கூடிய பல சிக்கல்களைத் தடுக்கும் வகையிலும் புதியவர்களை பணியில் சேர்க்க ஐடி நிறுவனங்கள் அதிக அளவில் ஆர்வம் செய்து வருகின்றன.
கடந்த 2022 நிதியாண்டில் விப்ரோ நிறுவனம் சுமார் 14,000 புதியவர்களை வேலைக்கு எடுத்துள்ளது. இதில், 70% பேர், வளாக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இதே போல, ஹெச்சிஎல் நிறுவனத்தில் மொத்தம் 2,19,325 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட புதியவர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை, முன் அனுபவம் இல்லாத நபர்களை இந்த அளவிற்கு ஹெச்சிஎல் பணியில் சேர்த்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல, இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமாக விளங்கும் டிசிஎஸ் தனது நிறுவனத்தில் 45,000 முதல் 47,000 வரையிலான ஊழியர்களை பணியில் சேர்க்க திட்டமிட்டது. அதன் படி, செப்டம்பர் மாதம் வரை 35,000 ஊழியர்களை பணியில் சேர்த்துள்ளது.
இவ்வாறு அனைத்து நிறுவனங்களும் 2023 ஆம் ஆண்டின் நிதியாண்டில் மொத்தம் 1,55,000 புதியவர்களை பணியில் சேர்க்கும் எனக் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…