தமிழகத்தில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையான மாணவ-மாணவியருக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. வகுப்பு தொடங்கிய முதல் நாளே மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை விநியோகிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜூன் 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. ஆனால், தமிழகத்தில் கோடை வெயிலின் உக்கிரம் குறையாத நிலையில், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், கல்வியாளர்களும், பெற்றோர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதைத் தொடர்ந்து, முதலமைச்சருடன் நடத்தப்பட்ட ஆலோசனையின்படி, முதலில் ஜூன் 5ம் தேதி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வெயிலின் தாக்கம் குறையாக நிலையில், பள்ளிகள் திறப்பானது 7ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.
அதன்படி, கடந்த 12ம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அதைத் தொடர்ந்து, இன்று, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையான மாணவ-மாணவியருக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. வகுப்புகள் தொடங்கப்படும் முதல் நாளான இன்றே அனைத்து மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புத்தகங்களோடு, இலவச உபகரணங்களையும் மாணவ-மாணவியருக்கு இன்றே வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…