வட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு, பவானி ஜமக்காளம் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருவதால், பாரம்பரியமிக்க பவானி ஜமக்காளத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடுமையான நெசவுப் பணி, குறைவான கூலி போன்றவற்றாலும் பவானி ஜமக்காளம் அழிவின் விளிம்பை நோக்கிப் பயணிப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்த விவரங்களைப் பற்றி இதில் காண்போம்.
ஈரோடு மாவட்டம் பவானி நகரமே ஜமக்காள உற்பத்திக்கு மிகவும் பெயர் போனது ஆகும். இங்கு தயாரிக்கப்படும் ஜமக்காள உற்பத்திக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு பாரம்பரியமாக நெசவுத் தொழில் நடைபெற்று வருகிறது.
திருமணம் உள்ளிட்ட அனைத்து சுப காரியங்களிலும் பவானி ஜமக்காளம் நிச்சயம் இடம் பெற்றிருக்கும் ஒன்றாகும். அதிலும், வட மாநிலங்களில் பவானி ஜமக்காளம் என்றாலே தனி ஒரு மதிப்பு உண்டு. ஆனால், போலிகளின் ஊடுருவலால், சிறப்பு மிக்க பவானி ஜமக்காளத்திற்கு மதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
விசைத்தறி ஜமக்காளத்தினால், கைத்தறியில் ஜமக்காளங்கள் செய்யும் தொழிலாளர்கள் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இவர்கள் நெசவு தொழிலை விட்டு பல்வேறு தொழில்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இருப்பினும், விசைத்தறி ஜமக்காளத்தை விட கைத்தறியில் தயாரிக்கப்படும் ஜமக்காளங்கள் மிக நீண்ட காலத்திற்கு உழைக்கக் கூடியவையாக அமையும். ஏனெனில், கைத்தறி ஜமக்காளம் குறைந்தபட்சம் 15 வருட உழைப்பைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
பவானி ஜமக்காளத்தை விசைத்தறியில் நெய்வதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், வட மாநிலங்களில் விசைத்தறிகளில் ஜமக்காளங்கள் தயார் செய்வது அதிகரித்து வருகிறது. வட மாநிலங்களில் இருந்து பவானிக்கு கொண்டு வரும் இந்த விசைத்தறி ஜமக்காளத்தை பவானி கைத்தறி ஜமக்காளம் என்ற பெயரில் விற்பனை செய்வதாக உள்ளூர் பாரம்பரிய நெசவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
40 முதல் 50% வரை விலை மலிவாகக் கிடைப்பதாலும், வாடிக்கையாளர்களால் வித்தியாசத்தைக் கண்டறிய முடியாததாலும், போலிகள் அதிகரித்து, கைத்தறி ஜமக்காளம் விற்பனை சரிந்து வருவதாக நெசவாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு வெளி மாநிலங்களில் சில கவர்ச்சிகள் செய்து பவானி ஜமக்காளம் என்ற பெயரில் பவானி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், நெசவாளர்களுக்கு அரசு வழங்கும் மானியத் தொகையும் கிடைக்காமல் போவதாக உள்ளது.
சாதாரண மற்ற கைத்தறிகளைப் போல அல்லாமல், மண் தரையிலிருந்து நான்கு அடி ஆழம் குழி தோண்டி அமைக்கப்பட்ட தறிகளில் பவானி ஜமக்காளம் தயாரிக்கப்படுகிறது. நாள் முழுவதும் குழியில் இறங்கி, கடுமையாக உழைக்கும் நெசவாளிகளுக்குப் போதிய வருமானம் கிடைக்காததால் நெசவாளர்கள் கவலையில் உள்ளனர்.
இதனால், 40 ஆண்டுகளுக்கு முன் ஆயிரக் கணக்கில் இருந்த கைத்தறி நெசவாளர்களின் எண்ணிக்கை, தற்போது நூற்றுக்கணக்கில் குறைந்து விட்டது. கடுமையான நெசவு பணி, போதிய அளவிலான ஊதியம் இல்லை போன்றவற்றால் வருங்கால தலைமுறையினர் கைத்தறி நெசவுத் தொழிலை நினைத்துக் கூட பார்ப்பதில்லை.
இத்தகைய அழிவின் விளிம்பிற்குச் செல்லக் கூடிய கடுமையான சூழலை எதிர்கொள்ளும் நெசவாளர்களுக்கு உதவும் வகையில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் போலிகளைத் தடுக்கவும், கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கவும் முன் வர வேண்டும் என்பதை பாரம்பரிய நெசவாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…