காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 90வது ஆண்டாக இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அணையிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீரை திறந்துவிட்டார்.
தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாவட்டங்களில் ஆண்டு தோறும் குறுவை, தாளடி, சம்பா என்ற 3 பருவங்களும் நெல் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. இதற்கான தண்ணீர், சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படுகிறது. அந்த வகையில், ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். கடந்த 89 ஆண்டுகளில் இதுவரை 18 முறை மட்டுமே திட்டமிட்டபடி ஜூன் 12ம் தேதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், 90வது ஆண்டாக மேட்டூர் அணையில் இருந்து, தொடர்ந்து 4 -வது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு ஜூன்12ம் தேதியான இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் வலது கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, அணையின் மேல்மட்ட மதகுகளை இயக்கி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து விட்டார். அப்போது, காவிரி அன்னையைப் போற்றும் வகையில், ஆற்றில் மலர்களை தூவி முதலமைச்சர் வணங்கினார்.
தண்ணீர் திறப்பைத் தொடர்ந்து, முதல்கட்டமாக காவிரி ஆற்றில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 10 ஆயிரம் கன அடி வரை டெல்டா பாசனத்திற்கான தேவையைப் பொறுத்து நீர்திறப்பு அதிகரிக்கப்படும். இந்த நிகழ்ச்சியில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே. பன்னீர்செல்வம், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…