கோவையின் முதல் தனியார் பெண் பேருந்து ஓட்டுநராக பிரபலமடைந்த ஷர்மிளா, இன்று திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். திமுக எம்.பி. கனிமொழி, பேருந்தில் ஷர்மிளாவை சந்தித்துப் பேசிய ஒரு சில மணி நேரத்தில் ஷர்மிளா பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் தனியார் பேருந்தின் ஓட்டுநராக இளம்பெண் ஷர்மிளா அண்மையில் பணியில் சேர்ந்தார். இதையடுத்து, அவர் குறித்த செய்திகள் சமூகவலைதளங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகி மிகவும் பிரபலமடைந்தார். இதைத் தொடர்ந்து, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துவந்தனர்.
இந்நிலையில், இன்று திமுக எம்.பி. கனிமொழி, ஷர்மிளாவை பேருந்தில் ஏறி பயணித்தபடியே சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். இந்த சந்திப்பு நிகழ்ந்த ஒரு சில மணி நேரத்தில் பேருந்து ஓட்டுநர் பணியிலிருந்து ஷர்மிளா நீக்கப்பட்டார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஷர்மிளா, திமுக எம்.பி.கனிமொழி, இன்று தன்னை சந்திக்க வருவதை முன்கூட்டியே பேருந்து உரிமையாளரிடம் தெரிவித்துவிட்டதாகவும், அப்போது அவர் எதுவும் பேசாமல் இருந்துவிட்டு, தற்போது விளம்பரத்திற்காக ஆட்களை பேருந்தில் ஏற்றுவதாகக் குற்றம்சாட்டி, தன்னை பேருந்து உரிமையாளர் பணிநீக்கம் செய்திருப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.
திமுக எம்.பி கனிமொழி சந்திப்புக்குபின், ஷர்மிளா பணி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னணி குறித்த தெளிவாக தகவல்கள் இதுவரை வெளியாகவிலை. இருப்பினும், இந்த சம்பவம் கோவையில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…