மதுரை: கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று முதல் வகுப்புகள் தொடங்கியுள்ளது. பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மலர்கள் மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்பு தெரிவித்தனர்.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பொன்முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை முதல் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்த மாணவிகள் தங்களது நண்பர்களை பார்த்து மகிழ்ச்சியில் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, பள்ளிக்கு வருகை தந்த மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியைகள் கைகளில் பூக்கள் கொடுத்தும், கற்கண்டு உள்ளிட்ட இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும், சிறப்பாக பள்ளி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பரிசு கோப்பைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்த மாநகராட்சி பள்ளியில் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவியான நாக கீர்த்திகா என்ற மாற்றுத்திறனாளி மாணவி தேர்ச்சிபெற்று 12 வகுப்புக்கு வந்த நிலையில் புதிதாக தனது பள்ளிக்கு வருகை தந்த மாணவிகளுக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து நன்றாக படிக்க வேண்டும் , கல்விக்கு எதுவும் தடையில்லை என அறிவுரை வழங்கி வாழ்த்து தெரிவித்து வரவேற்றது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
பள்ளி திறப்பைத் தொடர்ந்து, பள்ளியில் தேவையான குடிநீர், கழிப்பறை கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழுவினர் ஒவ்வொரு பள்ளிகளிலும் நேரடியாக ஆய்வுகள் மேற்கொண்டனர். கோடை வெயிலின் தாக்கம் மதுரையில் தற்போதும் அதிகரித்து வரக்கூடிய நிலையில் குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதற்கும், மின்சாரம் தடை இன்றி கிடைப்பதற்குமான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேபோன்று மதுரை மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இன்று காலை முதல் மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கு உற்சாகமாக வருகை தந்தனர். இதனிடையே, மதுரை புறநகர் பகுதிகளில் சில பள்ளிகளின் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதால் அதனை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…