கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய மழை வெளுத்து வாங்கி வருகிறது.
குறிப்பாக அந்தியூர் பகுதியில் மட்டும் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பர்கூர் மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வரட்டுப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேலும் அந்தியூர் பெரிய ஏரி, கெட்டிச் சமுத்திரம் ஏரி, எண்ணமங்கலம் ஏரி, கரும்பாறைபள்ளம் ஏரி, தண்ணீர் பள்ளம் ஏரி, வேம்பத்தி ஏரி, பிரம்மதேசம் ஏரி ஆகிய 7 ஏரிகளும் முழுமையாக நிரம்பியுள்ள நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அந்தியூரில் இருந்து ஆதிரெட்டியூர் வழியாக வெள்ளித்திருப்பூர், சென்னம்பட்டிக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்தியூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (அக்டோபர் 17) திங்கட்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். எனினும் கல்லூரிகளுக்கு எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…