வரலாறும், கற்பனையும் கலந்த பொன்னியின் செல்வன் புதினத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு பெரும்பாலானோர் ஆவலுடன் உள்ளனர். கல்கியின் வரலாற்றுப் படைப்பாக விளங்கும் இந்தப் புதினத்தின் பெயரைக் கேள்விப்படாதோர் எவரும் இலர். சோழர்களின் வரலாற்றைப் பறைசாற்றும் பொன்னியின் செல்வன் முழுக்கதையையும் படித்தவர்களுக்கும், கேட்டவர்களுக்கும், கேள்விப்பட்டவர்களுக்கும் மனதில் எழும் கேள்வி நந்தினி- வீர பாண்டியன் உறவுமுறையைப் பற்றித் தான். நந்தினி, வீரபாண்டியனுக்கு மனைவியா..? இல்லை மகளா..?
பொன்னியின் செல்வன் கதையில் இடம்பிடித்திருக்கும் நந்தினியின் கதாபாத்திரத்தில், கருத்திருமனும் முக்கிய பங்காற்றுகிறான். ஏனெனில், நந்தினி பற்றிய பல ரகசியங்களையும் தெரிந்தவன் கருத்திருமன். இவன் பல ஆண்டுகளாக சிறையில் இருந்தான். ஆழ்வார்க்கடியான், வீரபாண்டியனின் மகள் நந்தினி என்பதை கருத்திருமன் வழியாக கூறுவான். ஆழ்வாக்கடியான் கருத்திருமனிடம், “உண்மையைச் சொல்..! மதுராந்தகன் யாருடைய மகன்” என்று கேட்டான். இதற்கு கருத்திருமன் கூறியதாவது,”இது என்ன கேள்வி? செம்பியன் மாதேவியின்….. இல்லை, இல்லை, நெஞ்சை அமுக்காதே..! என் உயிர் போய்விடும்..! ஊமை மந்தாகினியின் மகன்” எனக் கூறினான்.
பின், ஆழ்வார்கடியான் விடாமல், கருத்திருமனிடம்,”மதுராந்தகனின் தகப்பன் யார்? உண்மையைச் சொல்.! இல்லையென்றால் உயிரோடு தப்ப மாட்டாய்” என்று மிரட்ட, இதற்கு கருத்திருமன் மிக மெல்லிய குரலில் இதற்கான பதிலைச் சொன்னான்.
நந்தினியின் பிறப்பு நடந்தது சோழ நாட்டின் அரண்மனைக்கு அருகில். இவளுடைய தாய் ஊமையான மந்தாகிணி ஆவாள். இவர்கள் இருவரும் ஒரே மாறி இருப்பதால், இவர்கள் இருவரும் தாய், மகள் என்பதில் சந்தேகம் இருக்காது. அதே போல, மதுராந்தகனின் தாயும் மந்தாகிணி என்பதைக் கூறியிருப்பான்.
இந்த இடத்தில் கருத்திருமன், மதுராந்தகன் மற்றும் நந்தினி இவர்களின் தந்தை பாண்டிய மன்னன் தான் என்று தெளிவாகக் கூறியிருப்பான். ஆனால், அந்த பாண்டிய மன்னன் யார் என்பதை கருத்திருமன் யாரிடமும் சொல்லிருக்க மாட்டான். முதலில், கருத்திருமன் மதுராந்தகனையும், நந்தினியையும் தன் பிள்ளைகள் எனக் கூறியிருப்பான். ஆனால், ஆழ்வார்க்கடியான் அவனைத் தாக்கிய பின்பே, அவர்களின் தந்தை பாண்டிய மன்னன் என்று கூறுவான். இதிலிருந்து, மதுராந்தகன் மற்றும் நந்தினி இருவரின் தந்தையுமே பாண்டிய மன்னனே. ஆனால், அது வீர பாண்டியனா என்ற சந்தேகம் எழுகிறது.
இந்த மொத்தக் கதையிலிருந்து, நந்தினியும், ரவிதாசனும் கூறிய கூற்றின் படி வீர பாண்டியனுக்கு நந்தினி காதலியாகவோ, மனைவியாகவோ இருந்திருக்கலாம். கருத்திருமன் கூறியதாவது, ஒரு பாண்டிய மன்னன் மந்தாகிணியை விரும்பியிருக்கிறான் என்றும், அவனுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.
ஒரு வேளை, வீர பாண்டியன் இறப்பதற்கு முன்னாள் நந்தினியைப் பார்த்திருந்தால், அவனின் நினைவுக்கு வந்திருப்பது மந்தாகிணியைத் தான் இருக்கும். ஏனெனில் மந்தாகிணியும், நந்தினியும் பார்க்க ஒரே மாறி இருப்பார்கள். அதே போல சுந்தர சோழனிற்கும் இது போலவே தோன்றியிருக்கும். ஆனால், வீர பாண்டியனுக்கு மந்தாகிணியின் நினைவு வரவே, அந்த குழப்பத்திலும், பதற்றத்திலும், நீ என் காதலி, என் மனைவி என்று சொல்லியிருக்கலாம். அப்படி பார்த்தால் கூட வயது வித்தியாசம் இருக்கிறது.
இதுவே, நந்தினிக்கு வீர பாண்டியன் தனது தந்தை எனத் தெரிந்திருந்தாலும், வீர பாண்டியனை ஆதித்த கரிகாலனிடமிருந்து காப்பாற்ற, தனது காதலன் எனக் கூறியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஒரு வேளை தந்தை எனக் கூறாமல் காதலன் எனக் கூறினால், மனம் இரங்கி ஆதித்த கரிகாலன் கொல்ல மாட்டான் என நினைத்தும் அவள் அப்படி கூறியிருக்கலாம். ஆனால், அதன் பிறகும் ஆதித்த கரிகாலன், வீர பாண்டியனைக் கொன்று விட்டான். இந்த விரக்தியில் தான், அந்த பொய்யையே நந்தினி கடைசி வரை மீண்டும் காப்பாற்றிருக்க வேண்டும்.
ஒரு முறை நந்தினியும், மணி மேகலையும் பேசிக் கொண்டிருக்கும் போது, இது போன்ற சூழ்நிலை உனக்கு வந்தால் அதாவது, உன் கண் முன்னே உன் காதலனைக் கொன்றால் நீ என்ன செய்வாய் என மணிமேகலையைப் பார்த்து நந்தினி கேட்கிறாள். இதற்கு, நான் கொன்று விடுவேன் என்று மணிமேகலை கூறுகிறாள். இவ்வாறு பல்வேறு கதாபாத்திரங்களின் படியும் கதைகளின் படியும் பார்க்கும் போது, வீரபாண்டியனின் மகளாகவே நந்தினி இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதே போல, வீரபாண்டியனின் காதலியாகவோ, மனைவியாகவோ நந்தினி இருப்பதற்கு குறைவான வாய்ப்பே உள்ளது.
இது கதையின் யூகங்களில் குறிப்பிடப்பட்ட ஒன்றாகும். ஆனால் இதற்கான பதில் ஒருவருக்கு மட்டுமே தெரியும். அவரே பொன்னியின் செல்வன் நாவலை எழுதிய கல்கி. அவர் அவ்வாறு விடையைக் கூறாமல் இருந்ததால் தான், நம்மில் எத்தனையோ பேரை பொன்னியின் செல்வன் நாவலைப் படிக்க வைத்தது. இவரின் கற்பனைக் கதை மூலமாக, நம்மை அந்த சோழ நாட்டிற்கே அழைத்துச் சென்றாலும் அது மிகையாகாது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…