டெல்லியில் கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் வெள்ளக்காடாக மாறியுள்ள டெல்லியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாட்டால் டெல்லி உள்ளிட்ட வடமேற்கு மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. டெல்லியில் வரலாறு காணாத வகையில், கடந்த 41 ஆண்டுக்குப் பிறகு கனமழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 153 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால், டெல்லியின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
பலத்த மழையால், மின்சாரம் ,இணையதள சேவை முடங்கியதோடு, சில இடங்களில் வீடு இடிந்து விழுந்தன. நிலச்சரிவும் ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பல இடங்களில் வெள்ள நீர் செல்ல வழியின்றி தண்ணீர் தேங்கி நிற்பதால் டெல்லியின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
மழை பாதிப்புகளை சீர்செய்யும் பணியில் டெல்லி அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், டெல்லி மட்டுமின்றி காஷ்மீர், இமாச்சலபிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் இன்றும் மழை நீடிக்கும என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதற்கான மஞ்சள் எச்சரிக்கையையும் வானிலை மையம் விடுத்துள்ளது.
கடந்த 1958ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி டெல்லியில் 266 மில்லி மீட்டர் பெய்த மழை இதுவரை அம்மாநிலத்தில் பதிவான அதிகபட்ச மழை ஆகும். இதைத் தொடர்ந்து, கடந்த 1982ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரே நாளில் 169 மில்லி மீட்டர் மழை பதிவானது. பின்னர் 41 ஆண்டுகள் கழித்து தற்போது, டெல்லியில் ஜூலை மாதத்தில் தற்போது 153 மில்லி மீட்டர் மழை பெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…