ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் இன்று காலை பை-பாஸ் அறுவை சிகிச்சை தொடங்கி நடைபெற்றுவருகிறது. 4 மணி நேரம் வரை இந்த அறுவை சிகிச்சை நடைபெறும் எனத் தெரிகிறது.
சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வசிக்கும் அரசு இல்லம், கரூர் இல்லம், தலைமைச்செயலகத்தில் உள்ள அவரின் அறை உள்ளிட்ட இடங்களில் கடந்த 13-ந் தேதி 18 மணி நேரம் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. அதைத் தொடர்ந்து, 14-ந் தேதி அதிகாலை 2 மணி அளவில் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக அவரை அமலாக்கத்துறையினர் காரில் ஏற்றியபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை சோதனை செய்த மருத்துவர்கள் ரத்தக்குழாயில் 3 இடங்களில் அடைப்பு இருப்பதை உறுதிசெய்தனர்.
அதைத்தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக உயர்நீதிமன்ற அனுமதியின்பேரில், அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று காலை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் இன்று காலை பை-பாஸ் எனப்படும் இருதய அறுவை சிகிச்சை தொடங்கி நடைபெற்றுவருகிறது.
மருத்துவர் ரகுராமன் தலைமையிலான மருத்துவக்குழு அவருக்கு சிகிச்சை செய்துவருகின்றனர். காவேரி மருத்துவமனையின் 7-வது தளத்தில் ஸ்கை-வியூ என்ற அறையில் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்த அறுவை சிகிச்சையானது 2 முதல் 4 மணி நேரம் வரை நடைபெறும் எனத் தெரிகிறது.
அமலாக்கத்துறையின் காவல் இன்னும் 3 நாட்களில் முடியவுள்ள நிலையில், தற்போது செந்தில் பாலாஜிக்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை இன்று மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த அறுவை சிகிச்சைக்குப் பின் 3 நாட்கள் செந்தில்பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவிலும், 7 நாட்கள் மருத்துவ கண்காணிப்பிலும் இருப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்த அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு மற்றும் செந்தில்பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு ஆகியவற்றின் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…