கர்நாடக மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் ஆட்சிக்கு வந்தால், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என கர்நாடக காங்கிரஸ் இன்று உறுதியளித்துள்ளது. அந்தத் தொகை அவர்களின் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள அரண்மனை மைதானத்தில் கர்நாடக காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த நா நாயகி நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா இந்த உத்தரவாதத்தை அறிவித்தார். 'க்ருஹ லக்ஷ்மி' என்ற இந்த திட்டத்தின் மூலம் 1.5 கோடி இல்லத்தரசிகள் பயனடைவார்கள் என அக்கட்சி கூறியுள்ளது.
கூட்டத்தில் உரையாற்றிய பிரியங்கா காந்தி, "நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்: பாஜக ஆட்சியில், உங்கள் வாழ்க்கை சிறப்பாகிவிட்டதா? உங்கள் வாழ்க்கையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா? கடந்த சில ஆண்டுகளைப் பார்த்து, வாக்களிக்கும் முன் உங்கள் வாழ்க்கையை மதிப்பீடு செய்யுங்கள்" என்றார்.
மேலும், "உங்களுக்கு கல்வி, அரசு வேலைகள் வேண்டாமா? உங்களுக்காகவும், குடும்பத்திற்காகவும் தேர்வு செய்யும் சுதந்திரம் உங்களுக்கு வேண்டாமா? அரசியலே உங்கள் பலம்" என்றும் அவர் கூறினார்.
மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று கட்சி உறுதியளித்த சில நாட்களில் தற்போது மாதம் ரூ.2000 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் மே மாதத்துக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், ஆளும் பாஜகவை வீழ்த்தியே ஆகவேண்டும் எனும் முனைப்பில் உள்ள காங்கிரஸ், சாத்தியமா என்ற எதையும் ஆராயாமல் தொடர்ந்து வாக்குறுதிகளை அள்ளி வீசுவதாக அரசியல் பார்வையாளர்கள் இந்த அறிவிப்புகள் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…