மாண்டஸ் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நேற்று தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த “மாண்டஸ்” புயலானது மேலும் வலுவடைந்து கடும் புயலாக தென்கிழக்கு சென்னையிலிருந்து சுமார் 260 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது. இன்று தீவிர புயலாக இருந்த மாண்டஸ் வலுவிழந்து புயலாக மாறியது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரி கோட்டாவிற்கு இடையே இன்று இரவு 11 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கரையைக் கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
இதன் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின் படி, சற்று நேரத்திற்கு முன்பிருந்து புயலானது கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. புயலின் வெளிப்புற பகுதியானது மணிக்கு 14 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது.
60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் 65 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசிவருகிறது. அதுவே புயல் கரையைக் கடக்கத் தொடங்கியிருக்கும் மாமல்லபுரத்தில் 80 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…