மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தான், நான் கிடையாது என தேவேந்திர ஃபட்னாவிஸ் இன்று அறிவித்துள்ளார்.
சிவசேனாவின் கிளர்ச்சித் தலைவரான ஏக்நாத் ஷிண்டே இரவு 7 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார். ராஜ்பவனில் கவர்னர் பி எஸ் கோஷ்யாரியை ஃபட்னாவிஸ் மற்றும் ஷிண்டே சந்தித்த பிறகு இந்த அதிரடி அறிவிப்பு வெளியானது.
ஷிண்டே தலைமையிலான சிவசேனா கிளர்ச்சியாளர்களுடன் கூட்டணி வைத்து ஃபட்னாவிஸ் மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்பார் என்று முன்னர் கருதப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் கிடையாது என மறுத்துள்ள ஃபட்னாவிஸ், இன்று ஏக்நாத் பதவியேற்பு விழாவுக்குப் பிறகு, அமைச்சரவை விரிவாக்கம் செய்து, சிவசேனா மற்றும் பாஜக தலைவர்கள் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்று கூறினார்.
கவுகாத்தியில் இருந்து நேற்று இரவு கோவா வந்த ஷிண்டே மற்றும் பிற கிளர்ச்சி எம்எல்ஏக்கள் டோனா பவுலாவில் உள்ள ரிசார்ட்டில் தங்கினர். முன்னதாக, மக்களிடம் தனது சமூக ஊடக உரைக்குப் பிறகு, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜ் பவனுக்கு வந்து தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியிடம் நேற்று வழங்கினார்.
ஃபட்னாவிசுக்கு அமைச்சர் பதவியும் இல்லை
பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தான் முதல்வர் அல்ல எனக் கூறியதே ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் மற்றொரு ஆச்சரியமாக அரசாங்கத்தில் இருந்து தான் விலகி இருப்பேன் என்று கூறினார். இதன் மூலம் அமைச்சர் பதவியைக் கூட அவர் ஏற்க மாட்டார் என்பது தெளிவாகியுள்ளது.
"சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் மற்றும் என்.சி.பி உடனான கூட்டணியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரினர். ஆனால் உத்தவ் தாக்கரே இந்த எம்.எல்.ஏ.க்களை புறக்கணித்து, எம்.வி.ஏ கூட்டணிக்களுக்கு முன்னுரிமை கொடுத்தார், அதனால்தான் இந்த எம்.எல்.ஏக்கள் தீவிர முடிவை எடுத்தனர்" என்று ஃபட்னாவிஸ் கூறினார்.
சிவசேனாவை தாக்கி பேசிய அவர், மக்களின் ஆணையை சிவசேனா அவமதித்து இந்துத்துவா மற்றும் சாவர்க்கருக்கு எதிரானவர்களுடன் அக்கட்சி கூட்டணி அமைத்துள்ளதாக கூறினார்.
"ஒருபுறம், சிவசேனா தாவூத் இப்ராஹிமை எதிர்த்தது. மறுபுறம், தாவூத்துக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் சிறைக்குச் சென்ற நபரை அமைச்சரவையில் வைத்தனர். அவர்கள் சாவர்க்கரை அவமதித்த ஒருவருடன் கூட்டணியில் இருந்தனர்" என ஃபட்னாவிஸ் கூறினார்.
ஷிண்டே கருத்து
மகாராஷ்டிர முதல்வராக விரைவில் பதவியேற்கவுள்ள ஏக்நாத் ஷிண்டே, "நாங்கள் எடுத்த முடிவு பாலாசாகேப்பின் இந்துத்துவா & எங்கள் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு உறுதியளிக்கிறது. எங்களிடம் 50 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்" என்றார்.
"எண்ணிக்கையின்படி ஃபட்னாவிஸ் முதலமைச்சராக இருந்திருக்கலாம். ஆனால் அவர் பெரிய மனதுடன் முதல்வர் பதவியை என்னிடம் கொடுத்துள்ளார், அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்." என்று ஷிண்டே மேலும் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…