திருவாரூர் மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் நடந்த தகராறில் மகனுக்காக மற்றவர்கள் காலில் விழுந்த தந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய அப்பகுதியில் போராட்டம் நடக்கிறது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறை பூண்டி அருகே திருத்துறைப்பூண்டி அருகே பிச்சனகோட்டகத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் நடராஜன் என்பவரது மகன் நாகூர்மீரானுக்கும், அஞ்சுகண்ணு என்பவரது மகன் கலைசெல்வனுக்கும் அடிதடி தகராறு ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் பஞ்சாயத்துக்கு இந்த விவகாரம் சென்ற நிலையில், பஞ்சாயத்தால் விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.10,000 த்தை கட்டமுடியாத 65 வயது அஞ்சுகண்ணுவை, நாகூர் மீரான் மற்றும் சிலரது காலில் விழ வைத்ததாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த அஞ்சுகண்ணு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார்.
அஞ்சுக்கண்ணுவை அவமானப்படுத்தி உயிரிழக்க வைத்தவர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், தற்போதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், திருத்துறைப்பூண்டி அண்ணா சிலை அருகே இரண்டாவது நாளாக இன்று மீண்டும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அஞ்சுகண்ணுவின் மகன் கலைசெல்வன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
எனினும் துரிதமாக செயல்பட்ட போலீசார் அவரை தடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…