கன்னியாகுமரி: மீன்பிடி தடைக்காலம் முடிந்து சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டுச் சென்றன.
கன்னியாகுமரி மாவட்டம் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குத்தளமாகக் கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இதன் மூலம் சுமார் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மீன்பிடி தொழில் மூலம் பயனடைந்து வருகின்றர்.
ஆண்டுதோறும் ஏப்ரல் 15முதல் ஜூன்14 வரை மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த காலகட்டங்களில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் தங்களது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள். இந்தாண்டுக்கான மீன்பிடி தடைகாலம் கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு முடிவுற்ற நிலையில் 15 ஆம் தேதி முதல் கடலுக்குச் செல்ல விசைப்படகு மீனவர்கள் ஆயத்தமானார்கள்.
ஆனால் தென்தமிழகம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் ஆகிய பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 வரை வேகத்தில் காற்று வீசும் எனவும் இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் மீன்பிடி தடைக்காலம் முடிந்தும் கடந்த நான்கு நாட்களாக மீன்வளத் துறையின் உத்தரவின்படி கன்னியாகுமரி பகுதி விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்தனர்.
இந்நிலையில் காற்றின் வேகம் சற்று குறைந்ததை அடுத்து இன்று அதிகாலை முதல் கன்னியாகுமரி சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 350 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றன. 65 நாட்களுக்கு பிறகு கடலில் மீன் பிடிக்க ஒன்றின் பின் ஒன்றாக விசைப்படகுகள் அணிவகுத்து சென்றது பார்ப்போரை வியப்படைய செய்தது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…