2021-22 ஆம் ஆண்டிற்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) வைப்புத்தொகைக்கு 8.1 சதவீத வட்டி விகிதம் வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் கடந்த நாற்பதாண்டுகளில் மிகவும் குறைவானது.
முன்னதாக, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2021-22க்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 2020-21 இல் வழங்கப்பட்ட 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்து அதற்கான முன்மொழிவை மத்திய அரசின் தொழிலாளர் அமைச்சகத்திற்கு சமர்ப்பித்திருந்தது. தொழிலாளர் அமைச்சகம் ஒப்புதலுக்காக நிதி அமைச்சகத்திற்கு முன்மொழிவை அனுப்பியது.
இந்நிலையில், நேற்று வெளியிடப்பட்ட EPFO அலுவலக உத்தரவின்படி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் EPF திட்டத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் 2021-22 ஆம் ஆண்டிற்கான 8.1 சதவீத வட்டி விகிதத்தை வரவு வைக்க மத்திய அரசின் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு வட்டி விகிதத்தை அங்கீகரித்த நிலையில், 2021-22 நிதியாண்டிற்கான நிலையான வட்டி விகிதத்தை EPF கணக்குகளில் EPFO வரவு வைக்கத் தொடங்கும்.
1977-78ல் EPF வட்டி விகிதம் 8 சதவீதமாக இருந்ததற்கு பிறகு தற்போது தான் மிகக் குறைவான வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…