கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பாறசாலை மூறியன்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜன். இவருடைய மகன் ஷாரோன் ராஜ். 23 வயதான இவர் பி.எஸ்சி ரேடியாலஜி படித்து வந்தார். இவர் களியக்காவிளையை அடுத்த ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், கடந்த 14-ஆம் தேதி அன்று நண்பர் ஒருவருடன் ஷாரோன் ராஜ் காதலி வீட்டுக்கு சென்றிருக்கிறார். நண்பர் வீட்டின் வெளியில் நிற்க, ஷாரோன் ராஜ் மட்டும் காதலியின் வீட்டுக்குள் சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் வெளியே வந்தார். தொடர்ந்து நண்பருடன் அவர் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது நண்பரிடம் தனக்கு வயிறு வலிப்பதாக ஷாரோன் ராஜ் கூறியுள்ளார். ஏன் என்று நண்பர் கேட்டதற்கு, காதலி வீட்டில் கசாயம், குளிர்பானம் குடித்ததாக கூறியுள்ளார்.
ஆனால் வலி தொடர்ந்து அதிகரித்ததால் வீட்டுக்கு கூட அவரால் செல்ல முடியாமல் போனது. இதையடுத்து அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. இதையடுத்து ஷாரோன் ராஜ் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி ஷாரோன் ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் அவருடைய தந்தை ஜெயராஜன் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து போலீசில் புகார் அளித்த ஜெயராஜன் மகனின் காதலி தான் குளிர்பானத்தில் எதையோ கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் திடீரென வயிற்று வலியால் மகன் பலியானது குறித்து ஜெயராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
என்னுடைய மகன் ராமவர்மன் சிறையைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணுக்கு ராணுவ வீரருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று திருமணம் நடைபெற இருந்தது. இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தால் முதல் கணவர் இறந்து விடுவார் என ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார்.
மூடநம்பிக்கையால் எனது மகனை கட்டாயப்படுத்தி அவனது காதலி வீட்டிற்கு அழைத்துள்ளார். இதனை நம்பி சென்ற ஷாரோன் ராஜிக்கு குளிர்பானத்தில் திராவகம் கலந்து கொடுத்து கொன்றுவிட்டனர். புகார் கொடுத்தும் போலீசார் விசாரணை முறையாக நடத்தவில்லை என்று கூறினார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் பேசுகையில், 'ஷாரோன் ராஜின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை. இருப்பினும் ஜெயராஜன் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஷாரோன் ராஜின் உடல் மீண்டும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகளின்படி அடுத்தக்கட்ட விசாரனை மேற்கொள்ளப்படும்' என்று தெரிவித்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…