அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளதற்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் , நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.நெஞ்சுவலியால் மயக்கமடைந்த அமைச்சர் செந்தில்பாலாஜி தற்போது ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை, தமிழக அமைச்சர்கள் பலரும் நேரில் சந்தித்து பார்த்துவருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் நடவடிக்கை ஜனநாயகப் படுகொலை என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை சோதனையின்போது அமைச்சர் செந்தில்பாலாஜி எங்கும் ஓடவில்லை என்றபோது, அவரை நள்ளிரவில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துசென்ற அடுத்த நாளே இதுபோன்று நடந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், செந்தில்பாலாஜி அமைச்சர் என்பதைவிடவும், அவர் மாநில அரசின் பொறுப்பில் இருப்பவர் என்றும் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனும், அமைச்சர் செந்தில்பாலாஜி கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்த செல்லும்போது தலைமைச் செயலாளருக்குக்கூட தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியும், அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்திருக்கிறார்கள் என்றும், ஜனநாயகத்துக்கு விரோதமாக ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றும் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, செந்தில்பாலாஜி கைது தொடர்பாக நாகர்கோயிலில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த கைது நடவடிக்கை மத்திய அரசின் அப்பட்டமான அடக்குமுறை என்று விமர்சித்தார். தேர்தல் நெருங்கும்போது இதுபோன்ற பல வேலைகளை மத்திய அரசு செய்யும் என்று கூறிய அவர், அமைச்சர் செந்தில்பாலாஜி விரைவில் குணமடைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…