திருப்பூர்: மோடி நல்லது செய்வார் என மக்கள் நம்பினார்கள் ஆனால் அவர் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மட்டுமே ஆதரவாக செயல்படுகிறார் என திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் குற்றச்சாட்டியுள்ளார்.
திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திருப்பூர் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும் திருப்பூரில் தயாராகும் ஆடைகள் ஐந்து கண்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் உள்நாட்டிலும் பெருமளவில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவின் கடைக்கோடி மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் குடும்பத்துடன் இடம் பெயர்ந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த திருப்பூர் தற்பொழுது கடும் நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும் இதே நிலை தொடர்ந்தால் திருப்பூர் மீண்டும் ஒரு கிராமம் போல மாறிவிடும் என அச்சம் தெரிவித்தார். மோடி வந்தால் தொழில்கள் சிறக்கும் என மக்கள் நம்பினர் ஆனால் அவர் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே உதவி வருகிறார். சிறுகுறு தொழில்கள் தங்களது வர்த்தகத்தை பெரும் நிறுவனங்களிடம் இழந்து வருகின்றனர். அதேபோல பங்களாதேஷ் நாட்டில் இருந்து வரக்கூடிய ஆடைகள் திருப்பூரை காட்டிலும் விலை குறைவாக உள்ளது.
இதனை மத்திய அரசு கவனித்து பின்னலாடை துறைக்கு எவ்வாறு சலுகைகளை வழங்கி ஊக்குவிப்பது என யோசிக்காமல் எதிர்க்கட்சிகளை எப்படி கடித்துக் கொள்ளலாம் என்று யோசித்து வருகிறார் என குற்றம் சாட்டினர். அதேபோல தமிழக அரசும் அதிக அளவிலான வேலைவாய்ப்பை வழங்கும் இத்துறைக்கு பல்வேறு சலுகைகளை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர் தமிழகத்தில் இரவு நேரங்களில் மின்கட்டணம் உயர்வு என்பது போன்ற திடீர் திடீர் அறிவிப்புகள் நொந்த புண்ணில் கோனுசியால் கீறுவது போல உள்ளதாக விமர்சித்தார்.
தமிழகத்திற்கு தேவையான பஞ்சு எட்டில் ஒரு பங்கு மட்டுமே தமிழகத்தில் விளைவதால் பஞ்சு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார் மேலும் தமிழக அரசு திருப்பூரில் உள்ள சிறுகுறு பனியன் உற்பத்தியாளர்களை அழைத்து அவர்களுடன் ஆலோசனை நடத்தி திருப்பூரை நெருக்கடியில் இருந்து மீட்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…