மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம்மில் இருந்து 500 ரூபாய் எடுக்க முயன்ற ஒருவருக்கு இன்ப அதிர்ச்சி ஏற்படும் வகையில் 2,500 ரூபாய் கிடைத்த தகவல் தீயாய் பரவியதில் அந்த ஏடிஎம்மில் மக்கள் கூட்டம் மொய்க்க ஆரம்பித்துவிட்டது.
குறிப்பிட்ட அந்த ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்ற நபர் முதலில் ரூ.500 எடுப்பதற்காக என்டர் செய்தபோது 500 ரூபாய்க்கு பதிலாக 2,500 ரூபாய் வந்துள்ளது. இதனால் ஆனந்த அதிர்ச்சியடைந்த அவர், மீண்டும் 500 ரூபாய் எடுக்க முயன்றபோது மீண்டும் 2,500 ரூபாய் பெற்றார்.
இது நாக்பூர் நகரத்திலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள கபர்கெடா நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியின் தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரத்தில் கடந்த புதன்கிழமை நடந்தது.
இதற்கிடையே இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியதில், சிறிது நேரத்தில் பணம் எடுக்க ஏடிஎம் மையத்திற்கு வெளியே ஏராளமானோர் திரண்டனர்.
பின்னர், ஒரு வங்கி வாடிக்கையாளர் உள்ளூர் போலீசாருக்கு இது குறித்து தகவல் கொடுத்த நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஏடிஎம் மையத்தை மூடிவிட்டு வங்கிக்கு தகவல் கொடுக்கப்பட்டது என்று கபர்கெடா காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏடிஎம் மையத்தில் கூடுதல் பணம் வந்ததாக முதலில் கூறப்பட்டாலும், 100 ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்வதற்கான ஏடிஎம் ட்ரேயில் ரூ.500 ரூபாய் நோட்டுகள் தவறாக வைக்கப்பட்டிருந்ததால் தான் இது நடந்ததாக பின்னர் தெரியவந்தது.
எனினும், இது தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் தற்போதுவரை வங்கி தரப்பில் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…