உத்தரபிரதேசத்தில் கலவரம் மற்றும் கல் வீச்சு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை அம்மாநில நிர்வாகம் புல்டோசர்களைப் பயன்படுத்தியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உத்தரப் பிரதேச அரசாங்கம் 3 நாட்களில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும் இடிப்பதற்கு தடை விதிக்காத உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களை அகற்றுவதில் சட்டத்தின் செயல்முறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் உ.பி அரசுக்கு அது கூறியுள்ளது.
முஸ்லீம் அமைப்பான ஜமியத் உலமா-இ-ஹிந்த் தனது மனுவில், உரிய நடைமுறையைப் பின்பற்றாமல் சொத்துக்களை இடிப்பதாகவும், போதுமான அறிவிப்புக்குப் பின்னரே அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
ஜமியத் உலமா-ஐ-ஹிந்த் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.யு.சிங் மற்றும் நித்யா ராமகிருஷ்ணன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்திடம் கூறுகையில், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் புல்டோசர்களைப் பயன்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக எச்சரித்ததாகவும், சட்டத்தின்படி நோட்டீஸ் வழங்காமல் கலவரத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை அதிகாரிகள் இடித்து மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்தனர்.
நாட்டில் சட்டத்தின் ஆட்சி நிலவுகிறது என்ற உணர்வு குடிமக்களிடையே இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால பெஞ்ச் தனது உத்தரவில் கூறியது. எல்லாம் நியாயமாக இருக்க வேண்டும். சட்டத்தின் கீழ் உரிய நடைமுறைகளை அதிகாரிகள் கண்டிப்பாக பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று அவர்கள் கூறினர்.
மேலும் அடுத்த 3 நாட்களில் அறிக்கை அளிக்குமாறு பிரயாக்ராஜ் மற்றும் கான்பூர் மேம்பாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை மறு விசாரணைக்கு ஒத்திவைத்தது.
இதற்கிடையே டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜஹாங்கிர்புரி பகுதியில் உள்ள கட்டிடங்களை இடிக்கும் விவகாரம் தொடர்பாக ஜமியத் உலமா-இ-ஹிந்த் தாக்கல் செய்த மற்றொரு மனுவில், மத்திய அரசு மற்றும் பிறருக்கு உச்ச நீதிமன்றம் முன்னதாக நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…