உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி சம்பாவத் இடைத்தேர்தலில் 55,025 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் தனது போட்டியாளரான காங்கிரஸின் நிர்மலா கஹ்டோரியை தோற்கடித்தார்.
கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் உத்தரகாண்டில் ஆளும் பாஜக மீண்டும் வெற்றி பெற்றாலும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்தது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சி தலைமை மீண்டும் புஷ்கரையே முதல்வராக்கியது.
இதனால் முதல்வர் பொறுப்பேற்று ஆறு மாதத்திற்குள் மீண்டும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் புஷ்கர் சிங் தாமி இருந்த நிலையில், பாஜகவின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான கைலாஷ் கெஹ்டோரி சம்பாவத், தாமி மீண்டும் எம்எல்ஏவாக தேர்வாவதற்கு ஏதுவாக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து சம்பாவத் தொகுதியில் போட்டியிட்டு புஷ்கர் சிங் தாமி வெற்றி பெற்று தனது முதல்வர் பதவியை காப்பாற்றிக் கொண்டுள்ளார்.
மோடி வாழ்த்து
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற புஷ்கர் சிங் தாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அவர் இன்னும் கடினமாக உழைப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
"சம்பாவத்தில் இருந்து சாதனை வெற்றி பெற்ற உத்தரகாண்டின் ஆற்றல்மிக்க முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு வாழ்த்துக்கள்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
"உத்தரகாண்ட் முன்னேற்றத்திற்காக அவர் இன்னும் கடினமாக உழைப்பார் என்று நான் நம்புகிறேன். பாஜக மீது நம்பிக்கை வைத்ததற்காக சம்பாவத் மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் நமது காரியகர்த்தாக்களின் கடின உழைப்பைப் பாராட்டுகிறேன்" என்று பிரதமர் மற்றொரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…