அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு புழல் சிறை நிர்வாகம் விசாரணைக் கைதிக்கான எண்ணை அறிவித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, திடீர் நெஞ்சுவலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இன்று 2வது நாளாக சிகிச்சை பெற்றுவருகிறார்.
அவருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிபதி வரும் 18ம் தேதி வரை நீதிமன்றக் காவல் அளித்து நேற்று உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, அவருக்கான பாதுகாப்பு பொறுப்பை நேற்றிரவு 10 மணி முதல் புழல் சிறைத்துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். அதன்படி, சிறைத்துறையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசார் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்றுவரும் வார்டின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவத்தினரின் பாதுகாப்பு உடனடியாக விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு புழல் சிறையில் கைதி எண் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவருக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜிக்கு புழல் சிறையில் விசாரணைக்கைதி 1440 என்ற எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது விசாரணைக் கைதிக்கான பதிவேடு எண் - 001440 என்ற எண் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளதாக புழல் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…