ஆந்திராவில் தமிழக சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள தனியார் சட்டக்கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் படித்து வருகின்றனர். இதில் சுமார் 50 பேர், தேர்வை எழுதிய பிறகு, கார்களில் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
ஆந்திரா - தமிழ்நாடு எல்லையில் உள்ள வடமாலைப்பேட்டை என்ற இடத்தில் உள்ள சுங்கச் சாவடியில் பாஸ்டாக் மூலம் பணம் செலுத்துவதில் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது.
அதைத் தொடர்ந்து, சுங்கச்சாவடி ஊழியர்கள் தமிழக மாணவர்கள் வந்த கார் ஒன்றை அடித்து நொறுக்கியதாகக் கூறப்படுகிறது. இதை மாணவர்கள் தட்டிக் கேட்ட போது, அங்கு திரண்ட உள்ளூர் பொதுமக்கள் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக ஒன்று திரண்டு, தமிழக மாணவர்களை தாக்கத் தொடங்கியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரண்டு தரப்பையும் சமாதானப்படுத்தி, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதனால் அங்கு சிலமணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இதற்கிடையே இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…