எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் ரீதியாக ஒன் சைடு கேம் ஆடுவதாக, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை மற்றும் பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டது. அதன் படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் பாதி முடிந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் எனக் கூறப்பட்ட இடத்தில், சிறிய சுவர் கூட எழுப்பாமல் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், சமீபத்தில் பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்தார். இரு இடங்களிலும் ஒரே நேரத்தில் கட்டப்படும் எனக் கூறப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை, தற்போது பிலாஸ்பூரில் மட்டும் கட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மதுரை சுந்தரராஜபுரத்தில் நியாயவிலை கடை கட்டிடம் மற்றும் சுப்ரமணியபுரத்தில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அலுவலகம், நிதி அமைச்சரான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், “ஒன்றிய அரசு பணத்தை வைத்து அரசியல் செய்கிறது. மதுரை மற்றும் பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டது. பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்பட்டு விட்டது. ஆனால், மதுரையில் சுவர் கூட கட்டவில்லை. ஒன்றிய அரசு அரசியல் ரீதியாக ஒன் சைடு கேம் ஆடுவது போல தெரிகிறது” என்று கூறினார்.
மேலும், பல திட்டங்களுக்கு பிரதான் மந்திரி என பெயர் வைத்து மாநில அரசின் நிதியை அதிகமாக எடுத்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். மக்களின் நலனுக்காக எதையும் செய்வதாக தெரியவில்லை எனவும், மாநில அரசின் நிதியை உபயோகித்து, பிரதான் மந்திரி என்ற பெயரில் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதனைத் திருத்தியே ஆக வேண்டும். இதனை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…