கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விஷவாயு தாக்கியதில் 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மயக்கம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரிக்கப்படும் என ஆய்வு நடத்திய பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியின் காமராஜ் காலனியில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 1,300 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு நேற்று மதியம் 1 மணிக்கு உணவு இடைவேளை விடப்பட்டு, மீண்டும் 2 மணிக்கு வகுப்புகள் தொடங்கியுள்ளது.
வகுப்புகள் தொடங்கி சிறிது நேரத்திலேயே பள்ளியின் 6 வது மற்றும் 7 வது அறையில் உள்ள மாணவர்களுக்கு திடீரென விஷவாயு தாக்கி கண்பார்வை மங்கலாகவும், ஒரு சில மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அடுத்தடுத்து மயங்கி கீழே விழ தொடங்கியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு தகவல் கொடுத்து ஆம்புலன்ஸ் வரவைத்து அதன் மூலம் பள்ளி மாணவர்களை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும், சக்தி என்ற ஒரு மாணவருக்கு பல்ஸ் மிகவும் குறைந்து வருவதால் அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஸ்வேதா என்ற மாணவி மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு நகர காவல்துறை, தீயணைப்புத்துறை, மருத்துவத் துறையினர், மாசுகட்டுப்படு வாரியம், மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், உள்ளிட்ட பலர் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரன் வானவர் ரெட்டி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், முழு தகவலும் விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்களும் மற்றும் உறவினர்களும் மாணவர்களுக்கு என்ன ஆயிற்று என்று பதறி அடித்து ஓசூர் அரசு மருத்துவமனைக்கு படையெடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…