தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் பரிந்துரைப்படி கூடுதல் டிஜிபி, ஐஜி உட்பட 12 காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தியபோது, போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது.
இந்த வன்முறையில் போராட்டக்காரர்கள் தரப்பைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் மிகவும் சர்ச்சையான நிலையில், தமிழக அரசு சார்பில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் அரசிடம் சமர்ப்பித்த அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், சம்பவம் நடந்தபோது தென் மண்டல ஐஜியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், திருநெல்வேலி சரக டிஐஜி கபில்குமார் சி.சராட்கர், தூத்துக்குடி எஸ்பி.மகேந்திரன், டிஎஸ்பி லிங்க திருமாறன், இன்ஸ்பெக்டர் திருமலை உள்ளிட்ட 17 பேர் வரம்பு மீறி துப்பாக்கி சூடு நடத்தியது தெரியவந்தது.
மேலும் அப்போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக இருந்த வெங்கடேஷ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளான சேகர், சந்திரன், கண்ணன் ஆகியோர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசாரணை ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் பரிந்துரைத்தார்.
இந்நிலையில் தற்போது, 7 காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளதோடு, இதில் நேரடியாக ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் உட்பட 4 காவலர்களை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…