திருவள்ளூரை அடுத்து மூலக்கரையில் இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட புங்கத்தூர் பகுதியை சேர்ந்த பூவரசன் ( வயது 24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வெல்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒரு மனைவி மற்றும் ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். பூவரசன் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் ராமதண்டலம் என்ற கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் உறவினர் வீட்டு விஷேசத்திற்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்துள்ளார். பின்னர் சரியாக 8 மணியளவில் திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் மூலக்கரை என்ற பகுதியில் ரத்த வெள்ளத்தில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அது, பூவரசன் என தெரியவந்தது. அவர் விபத்தில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகப்பட்டனர். ஆனால் அவரது இருசக்கர வாகனம் ஸ்டாண்ட் போடப்பட்டு ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது. எனவே சந்தேகமடைந்த போலீசார் அவர் மர்ம நபர்களால் அடித்து கொல்லப்பட்டாரா அல்லது விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…