மார்கழி, தை வந்துவிட்டாலே வாசல் தோறும் வண்ண வண்ண கோலங்களால் ஜொலிக்கும். அதுமட்டுமல்லாமல், விஷேச நாட்களிலும், வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும் போதும் வீட்டிற்கே ஒரு கலையை கொடுப்பது இந்கோலங்கள் தான் என்று சொன்னால் அது மிகையாகாது அல்லவா?. இருப்பினும் கோலத்தின் அழகை தூக்கிக்காட்டுவதே கலர் கோலமாவு தான். இதற்காக, நாம் கடைகளில் அதிக விலை கொடுத்த கலர் கோலமாவு வாங்குவோம். இனி காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நம் வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் கலர் கோலமாவை தயார் செய்யலாம். வாங்க, எப்படினு தெரிந்துக் கொள்ளலாம்.
கத்தரிப்பூ நிறத்திற்கு - நீலநிற இங்க்
நீல நிறத்திற்கு - உஜாலா நீலம்
கருப்பு நிறத்திற்கு - கருப்பு நிற இங்க்
பச்சை நிறத்திற்கு - [வேப்பிலை, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா இலை] - தேவைக்கேற்ப
சிவப்பு நிறத்திற்கு - [பீட்ரூட், குங்குமம், தக்காளி, சிவப்பு நிற கேசரி பவுடர்] - தேவைக்கேற்ப
ஆரஞ்சு நிறத்திற்கு - [ஆரஞ்சு நிற கேசரி பவுடர், கேரட்] - தேவைக்கேற்ப
மஞ்சள் நிறத்திற்கு - [தண்ணீரில் குழைத்த மஞ்சள் தூள்] - தேவைக்கேற்ப
பச்சரிசி மாவு - தேவையான அளவு
கோலமாவு - தேவையான அளவு
கலர் கோலமாவு செய்ய முதலில் கோலமாவை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக 1 கப் வெள்ளை கோலமாவு எடுத்தால் அதேபோல் 1 கப் அரிசி மாவு எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் கலந்துக் கொள்ளுங்கள்.
பின்னர், பச்சை நிறத்திற்கு வேப்பிலை, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா இலை இவற்றில் எந்த இலையாக இருந்தாலும் சரி அதை தேவையான அளவு எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைத்து, அதிலிருந்து சாறை மட்டும் பிழிந்து தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக இன்னொரு ஜாரை எடுத்து, ஈரமில்லாமல் துடைத்துவிட்டு அதில் கொஞ்சமாக இந்த அரிசி மாவு, கோலமாவு கலந்த மாவை சேர்த்து அத்துடன் பிழிந்து வைத்திருக்கும் பச்சை சாறை கொஞ்சமாக சேர்த்து ஒருமுறை அரைத்து எடுத்தால் பச்சை நிற கோலமாவு ரெடி. இதை ஒரு பேப்பரில் கொட்டி சிறிது நேரம் நிழலில் காயவைத்து எடுத்துவிடுங்கள்.
அதேபோல், சிவப்பு நிறத்திற்கு குங்குமத்தை, கொஞ்சம் தண்ணீரில் கரைத்து அதை கோலமாவில் சேர்த்து அதையும் இதே போல் மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்தால் சிவப்பு நிற கோலமாவு ரெடி. அதேபோல், பீட்ரூட் அல்லது தக்காளியை அரைத்து சாறு எடுத்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நீல நிறம் வேண்டும் என்றால் உஜாலா நீலத்தை சிறிதளவு கோலமாவில் சேர்த்து அரைத்து எடுத்தால், நீல நிற கலர்கோமாவு ரெடி. இப்படியே உங்களுக்கு என்ன கலர் வேண்டுமோ அதை சுலபமாக தயாரித்துக் கொள்ளலாம்.
ஒரு சில நேரங்களில் மாவு கட்டி கட்டியாக இருப்பது போல் தெரிந்தால், அதை நிழலில் ஆற வைத்து பிறகு மறுபடியும் ஒரு முறை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்தால் கோலம் போடும் பக்குவத்திற்கு கலர் கோலமாவு தயாராகிவிடும். எக்காரணத்திற்காவும் கோலமாவை வெயிலில் காய வைக்க வேண்டாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…