மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை தினத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. திருவாதிரை தரிசனத்தை ஆருத்ரா தரிசனம் என்றும் கூறலாம். இந்த சுப தினத்தில் விரதம் இருந்து, கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது நன்மையைத் தரும். இந்த தினத்தில் இறைவனை வழிபட்டு நைவேத்தியமாக களி, 7 கறி கூட்டு, திருவாதிரை அடை போன்றவற்றைப் படைக்க வேண்டும். முழு நிலவு இருக்கும் சமயத்தில் சிவபெருமானை வழிபட்டால், சிவ பார்வதியின் அருள் பெற்று, திருமண பந்தத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையுடன் வாழ்வார்கள். இதில் திருவாதிரை அடை எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.
பச்சரிசி – 1 கப்
வெல்லம் – ¾ கப்
தேங்காய் (துருவியது) – ½ கப்
கருப்பு எள் – 1½ டீஸ்பூன்
நெய் – தேவையான அளவு
ஏலக்காய் தூள் - சிறிதளவு
✤ முதலில், பச்சரிசியை எடுத்து அதனை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
✤ பின், அதில் தண்ணீர் வடித்து காட்டன் துணியில் 20 நிமிடம் முதல் அரை மணி நேரம் வரை காய வைக்க வேண்டும். ஈரப்பதம் போன பிறகு, பச்சரியை மிக்ஸியில் போட்டு, ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
✤ பிறகு பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து வெல்லத்தை போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டுக் கொள்ளவும்.
✤ இதில் வெல்லம் நன்றாக கரைந்த பிறகு, அதனை தனியாக வடிகட்டிக் கொள்ளலாம்.
✤ பிறகு, மிக்ஸியில் அரைத்த பச்சரிசி மாவினை வாணலி ஒன்றில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். இதுவும், வெல்லத் தண்ணீரும் சூடு தணிந்த பிறகு, இரண்டையும் கலக்கிக் கொள்ளலாம்.
✤ இதனுடன், தேங்காய் துருவல், எள், ஏலக்காய் தூள் போன்றவற்றை கலந்து கொள்ளவும். இதில் வெல்லத் தண்ணீர் போதாமல் இருந்தால் சிறிதளவு தண்ணீர் விட்டுக் கொள்ளலாம்.
✤ இந்த மாவை நன்றாக பிசைந்து உருண்டை செய்து கொள்ளவும். அடையானது பிரிந்து, விரிசல் விடாமல் வருவதற்கு சப்பாத்திக்கு பிசைவது போல, மாவை பிசைந்து கொள்ள வேண்டும்.
✤ பின், தோசைக்கல்லை எடுத்து அதில் சிறிது நெய் தடவி கொள்ள வேண்டும். சிறிய தட்டு ஒன்றை எடுத்து, அதன் பின்புறம் அடையைத் தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அடையைத் தட்ட வாழை இலை அல்லது தட்டை பயன்படுத்தலாம்.
✤ அடை தட்டும் போது, மிகவும் மெலிதாக இல்லாமலும், மொத்தமாக இல்லாமலும் மீடியம் அளவில் இருக்க வேண்டும்.
✤ தோசை சுடுவது போல, எண்ணெய் பதில் நெய் சேர்த்து அடையைச் செய்யலாம்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த பச்சரிசியால் ஆன திருவாதிரை அடை தயார் ஆகி விட்டது. இதனை திருவாதிரை நெய்வேத்தியமாக படைத்து உண்ணலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…