12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லைக கொடுத்ததாக சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரரும், பிரபல இயக்குனர் ஷங்கரின் மருமகனுமான ரோஹித் தாமோதரன், மன உளைச்சல் காரணமாக சிறிது காலத்திற்கு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி முன்னாள் கவர்னர் கிரண்பேடி, துத்திபட்டில் இயங்கி வந்த கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான மைதானம் மூடப்பட்ட காலத்தில் இளங்கோவடிகள் அரசு பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி நடந்து வந்தது.
அப்போது பயிற்சியாளர் தாமரைக் கண்ணன் என்பவர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் பேரில் மற்றொரு பயிற்சியாளர் ஜெயக்குமார், கிரிக்கெட் சங்கத் தலைவர் தாமோதரன், செயலாளர் வெங்கட், கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்த ரோஹித் உள்ளிட்ட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவர்களில் கிரிக்கெட் சங்க தலைவர் தாமோதரனின் மகன் ரோஹித், பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த பாலியல் புகாரால் சர்ச்சையில் சிக்கியிருந்த நிலையில் ரோஹித் தற்போது கிரிக்கெட்டிலிருந்து சில காலம் தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் சமீபத்தில் நிகழ்ந்த சில சம்பவங்களில் தனக்கு மிகவும் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, இதிலிருந்து மீண்டு வருவதற்காக சில காலம் ஓய்வில் செல்வதாக அறிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…