தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், பாரம்பரிய விளையாட்டாகத் திகழும் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கென தனிச்சிறப்பு உண்டு. மதுரை, திருச்சி, பழனி என வெவ்வேறு பகுதிகளில், பொங்கல் பண்டிகையின் போது அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு விளையாட்டுக்களில் ஜல்லிக்கட்டு தான் முதலிடத்தில் நிற்கும். இளைஞர்கள் காளைகளை விரட்டிச் சென்று, அதன் திமில் மீது தொங்கிய படி குறிப்பிட்ட தூரம் வரை செல்வார்கள். இது போல ஜல்லிக்கட்டுக்கென பல்வேறு விதிகள் உள்ளன. இந்த ஜல்லிக்கட்டு விதிமுறைகளைக் கையாண்டு வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசுத் தொகை வழங்கப்படும்.
ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்பு, விளையாட்டில் கலந்து கொள்ளும் காளைகளை மருத்துவர்கள் பரிசோதனை செய்வர். இவ்வாறு அனைத்து மாடுகளும் கால்நடைப் பராமரிப்புத் துறை மருத்துவர்கள் மூலம், கட்டாய பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். அதன் பிறகு, உடல்நலத்தினைப் பரிசோதனை செய்து எந்த பிரச்சனைகளும் இல்லை எனும் போதிலே, அவை போட்டியில் கலந்து கொள்ள முடியும். இல்லையெனில், போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது.
இதில், மாட்டிற்கு மது கொடுக்கப்பட்டுள்ளதா என்பதும் பரிசோதிக்கப்படும். இவ்வாறு கொடுக்கப்பட்டிருந்தால் அவற்றை அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு, தகுதி பெற்ற மாடுகள் வாடிவாசல் வரையில் கொண்டு செல்லப்பட்டு, அதன் மூக்கணாங்கயிற்றை அதன் சொந்தக்காரர் அவிழ்த்து, மாட்டினை போர்க்களத்தில் இறங்கச் செய்ய வேண்டும். அதே போல, மாடுகளுடன் போட்டியில் களமிறங்கும் வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும்.
இவ்வாறு தனித்தனியே தகுதி தேர்வு நடத்தப்பட்டு, தகுதி சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர்களும், காளைகளும் பங்கேற்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதலில், போட்டியாளர்களான இருவருக்கும் மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு, அவர்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் இடத்தில் அனுமதிக்கப்படுவர்.
ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் மைதானமானது, குறைந்தபட்சம் 50 சதுர அடி பகுதியாக இருக்க வேண்டும். இந்த குறிப்பிடப்பட்ட 50 அடி அளவிலான பகுதியிலேயே மாடுபிடி வீரர்கள் மாட்டினைப் பிடிக்க வேண்டும்.
மாடுகள், களத்தில் அதாவது போட்டி நடக்கும் இடத்தில் நுழையும் போது, அதன் முன்னே நிற்பதற்கு வீரர்களுக்கு அனுமதி இல்லை. அதாவது வழியை மறித்து நிற்க அனுமதி இல்லை. மாடுகள், வெளியான 30 விநாடிகளுக்குப் பிறகு அல்லது அவை துள்ளிக்குதிக்க ஆரம்பித்த பிறகு 15 மீட்டர் தொலைவில் தான் அதனைப் பிடிப்பதற்கு வீரர்கள் முயல வேண்டும்.
காளைகள் அல்லது மாடுகளை அடக்கும் வீரர்கள், அவற்றில் வால், கொம்பு, மூக்கனாங்கயிறு போன்றவற்றை பிடிப்பதற்கு அனுமதி இல்லை.
அதே போல, அவற்றில் கால்களை கட்டிப் பிடித்து அவற்றை நகர விடாமல் தடுக்கக் கூடாது. இதை மீறும் நபர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். இதற்காக, முதல் 15 மீ தொலைவு சமதளமாகவே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
இதில் போட்டியாளர்கள், மாட்டின் திமிலை மட்டுமே பிடிக்க வேண்டும். அதே போல, மாட்டின் திமிலை, மாடு எல்லைக்கோடு தாண்டும் வரை பிடித்திருக்க வேண்டும். அவ்வாறு பிடித்திருப்பவர்களே வெற்றியாளராகக் கருதப்படுவார்.
இதில், காளையானது அதனைப் பிடிக்கக் கூடிய போட்டியாளர்களை எல்லைக்கோடு தாண்டும் முன்பே தூக்கி வீசி விட்டாலோ அல்லது எல்லையைத் தாண்டும் வரை எவரும் பிடிக்கவில்லை எனும் சமயத்திலோ காளையே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
அதே சமயம், காளையை ஒரு வீரர் மட்டுமே பிடிக்க வேண்டும். களத்தில் உள்ள வீரர்கள் அனைவரும் பிடித்தால், காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
குறிப்பாக, காளையை துன்புறுத்தவோ, அல்லது அடிக்கவோ கூடாது.
இவை அனைத்தும், ஜல்லிக்கட்டு போட்டியின் விதிமுறைகள். இந்த விதிமுறைகளைக் கையாண்டு எந்த ஒரு வீரர் சரியான முறையில் காளையை அடக்குகிறாரோ அவரே வெற்றியாளராகக் கருதப்படுவார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…