ஸ்டோரேஜ் சார்ந்த தயாரிப்புகளை மேற்கொள்ளும் மைக்ரான் நிறுவனம், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், புதிய அதிவேக UFS 4.0 ஸ்டோரேஜ் தொழில்நுட்பம், விரைவில் ஸ்மார்ட்போன் பயனர்களுக்குக் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
யூஎஃப்எஸ் 4.0 தொழில்நுட்பத்தால் விரைவாக கோப்புகளை பகிரவும், நிறுவவும் முடியும். இது பல காம்பேக்ட் கேட்ஜெட்டுகளை திறன் உள்ளதாக மாற்றும். பொதுவாக ஸ்மார்ட்போன்கள், டி எஸ் எல் ஆர் கேமராக்கள் போன்றவற்றில் இந்த அதிவேக கோப்பு பகிர்மான தொழில்நுட்பம் இருந்தால், அவற்றின் தரமும் சிறப்பானதாக இருக்கும்.
இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், பெரிய அளவு புகைப்படம், அல்லது வீடியோவை படம்பிடிக்கும்போது, அதனை ஸ்டோரேஜ் மெமரியில் உடனடியாக நிறுவ, வன்பொருளான பிராசஸர் கட்டளையிடும். இப்போது குறைந்த திறன் கொண்ட ஸ்டோரேஜுகள் தெளிவான படங்களை தக்கவைத்துக்கொள்ள திணறுகிறது. இந்த நிலை அதிவேக ஃபிளாஷ் ஸ்டோரேஜ் காலங்களில் மாறும் என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை.
மிக முக்கியமாக, சிசிடிவி எனும் கண்காணிப்பு கேமராக்களில் காணும் காட்சி பதிவு செய்து வைக்கப்படும். அதில் அதிவேக ஸ்டோரேஜுகள் இருந்தால், பதிவு செய்யப்பட்ட காட்சியின் தரம் சிறப்பாக இருக்கும். மீண்டும் அதனை எடுத்து பார்க்கும்போது, உங்கள் கண்ணில் இருந்து தப்பியவை கூட பதிவு செய்யப்பட்டதில் இருந்து தப்பித்திருக்காது.
முந்தைய தலைமுறை சேமிப்பகத்துடன் ஒப்பிடும்போது ரைட்டிங் வேகம் 100 விழுக்காடு அதிகரித்துள்ளது. மேலும் ரீடிங் வேகம் 75 விழுக்காடு அதிகமாக உள்ளது என்று மைக்ரான் தெரிவித்துள்ளது.
மேலும், UFS 4.0 அடிப்படையிலான புதிய ஸ்டோரேஜ் சிப்புகள் 25 விழுக்காடு அதிக ஆற்றல் திறன் கொண்டதாக இருக்கும். மைக்ரானின் UFS 4.0 சேமிப்பகம் 4,300MBps வரை தொடர் ரீடிங் வேகம், 4,000MBps வரை ரைட்டிங் வேகத்தை வழங்கும்.
சில ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு புதிய UFS 4.0 தொழில்நுட்பத்திலான ஸ்டோரேஜ் சிப்களை மைக்ரான் அனுப்பிவைத்துள்ளது. இந்த புதிய சிப்கள் பிளாக்ஷிப் பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் விரைவில் காணலாம் என நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மைக்ரான் நிறுவனம் 256ஜிபி, 512ஜிபி, 1டிபி ஸ்டோரேஜ் சிப்களை மட்டுமே உற்பத்தி செய்கிறது.
மைக்ரான் தற்போது ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுக்கு தகுதி மாதிரிகளை அனுப்பியுள்ளது. அவை வேகம், நம்பகத்தன்மை, அதிர்ச்சி மற்றும் தாக்க எதிர்ப்பு, பிழை விகிதங்கள், சேமிப்பகத்தின் தரத்தை நிர்ணயிக்கும் பிற அளவுருக்களுக்கான சோதனைக்கு உட்படுத்தப்படும்.
இந்த ஆண்டின் இரண்டாம் அரையாண்டின் இதன் உற்பத்தி அதிக அளவில் தொடங்கும் என்று மைக்ரான் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, யுஎஃப்எஸ் 4.0 சிப்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தைகளில் காணலாம் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், நாங்க மட்டும் என்ன சும்மாவா இருக்கோம் என சாம்சங் நிறுவனமும் UFS 4.0 ஃபிளாஷ் ஸ்டோரேஜை வெற்றிகரமாக தயாரித்துள்ளது. இது நிறுவனத்தின் சில தயாரிப்புகளில் விரைவில் இடம்பெறலாம். சாம்சங் அதன் முதன்மை ஸ்மார்ட்போன்களில் இந்த அதிவேக சேமிப்பக சிப்களை பயன்படுத்தலாம் எனத் தெரியவந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…