Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57

கல்வி

NEET எழுதாமல் மருத்துவர் ஆவது எப்படி? | Medical Courses Without NEET in Tamil

Nandhinipriya Ganeshan June 25, 2023

நம்மில் பலருக்கும் சிறு வயது முதலே, 'டாக்டர்' ஆக வேண்டும் என்ற கனவு இருந்திருக்கும். ஏனென்றால், மருத்துவர்கள் என்பவர்கள் ஒரு உயிருக்கு மறுபிறவி கொடுக்கும் கடவுளாக பார்க்கப்படுகிறார்கள். அதனால் நானும் டாக்டர் ஆக வேண்டும் என்று வெறித்தனமாக படிப்பார்கள். ஆனால், தற்போது டாக்டராக வேண்டுமென்றால் நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எப்படியோ நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மாணவர்களின் மருத்துவ கனவு வெறும் கனவாக மட்டுமே போய்விடுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் தற்போதை காலக்கட்டத்தில் மருத்துவம் என்பது பணக்காரர்களின் படிப்பாக மாறிவிட்டது. இருப்பினும், மருத்துவ துறையில் பணிபுரிய வேண்டும் என்று விரும்புவோருக்கு நீட் தேர்வு இல்லாத பல மருத்துவம் சார்ந்த படிப்புகளும் இருக்கின்றன. இந்த படிப்புகளுக்கு கட்டணமும் குறைவாக தான் இருக்கும். இப்போது, சுகாதாரத் துறையில் தேவை அதிகரித்து வருவதால் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். மருத்துவராக இருந்தால் மட்டும் தான் மக்களுக்கு சேவை முடியும் என்று கிடையாது. எனவே, நீட் இல்லாத மருத்துவ படிப்புகளின் பட்டியலை பார்க்கலாம். ➥ நர்சிங் நீட் இல்லாத சிறந்த மருத்துவப் படிப்புகளில் ஒன்றாக நர்சிங் (Nursing) படிப்பு விளங்குகிறது. நோயாளிகளை கவனிப்பதில் இருந்து மருத்துவ நிபுணர்களுக்கு உதவுவது வரை அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படும் பணியாக நர்சிங் உள்ளது. இந்த படிப்பை படிக்க 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அவசியம். இளங்கலை பட்டப்படிப்புக்கு 8000 முதல் 30,000 வரை கட்டணம் செலுத்த வேண்டும். ➥ பிசியோதெரபி 4½ வருட இளங்கலைப் படிப்பான பிசியோதெரபி (Physiotherapy), உடல் இயக்கம் சார்ந்த நோய்களுக்கு எளிய உடற்பயிற்சிகள் மூலம் தீர்வு காணும் ஒரு படிப்பு ஆகும். இந்த படிப்பில் சேர மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த படிப்பிற்கான பாடநெறி ஆறு மாத கட்டாய மருத்துவப் பயிற்சியின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. ➥ சைக்காலஜி உளவியல் சம்பந்தப்பட்ட படிப்பு தான் சைக்காலஜி (Psychology). அதாவது, ஒருவரை வெளிப்புற பார்வையாக அல்லாமல், அவரின் உள்திறன் நினைவுகளை அறிய முயற்சிக்கும் கல்வியாகும். சுருக்கமாக, சொல்வதென்றால் நமக்கு மன ரீதியான ஏதாவது பிரச்சனை இருந்தால் உடனே சைக்காலஜிஸ்ட்டை பாருங்கள் என்று சொல்வார்கள். அதுதான் இது. மன ரீதியாக என்ன பிரச்சனை என்பதை அறிந்து அவற்றை மாற்றுவதாகும். இந்த படிப்பில் சேர 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். படிப்பு காலம் மூன்று ஆண்டுகள். ➥ உணவியல் நிபுணர் மனித உடல் சரியாக வேலை செய்வதற்கு மிக முக்கியமான தேவைகளில் ஒன்று சரியான உணவு மற்றும் ஊட்டச்சத்து தான். இவை யாருக்கு எப்படி கொடுக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தும் படிப்பு தான் இது. பொதுவாக, இவர்களை உணவியல் நிபுணர் (Nutrition and Dietetics) என்று சொல்வார்கள். 3 ஆண்டுகள் பயிற்றுவிக்கப்படும் இந்த படிப்பை படிப்பதற்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். படிப்பு முடிந்ததும் உணவியல் நிபுணராக பயிற்சி கொடுக்கப்பட்டு பட்டம் வழங்கப்படும். ➥ கால்நடை மருத்துவம் கால்நடை மருத்துவம் (Veterinary Medicine) என்பது விலங்குகளின் ஆரோக்கியத்தையும் நலனையும் பேணுவதே இவற்றின் முக்கியமான கடமையாகும். 5 ஆண்டுகள் படிக்க வேண்டியிருக்கும். 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ➥ ஆப்டோமெட்ரி மருத்துவ துறையில் பணிப்புரிய வேண்டும் நினைப்போருக்கு மற்றொரு சிறந்த படிப்பு இந்த ஆப்டோமெட்ரி (Optometry). இந்த படிப்பில் கண்களின் சக்தி மாறுபாடு என்ன என்பதை பற்றியும், அதற்கு தகுந்த மருத்துவம் என்ன என்பதை பற்றியும் கற்றுக்கொடுக்கப்படும். இவர்களை ஆப்டோமெட்ரிஸ்ட் என்று அழைப்பார்கள். இந்த படிப்பில் சேர 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அவசியம். ➥ பி.பார்ம் நான்கு ஆண்டுகால படிப்பான பி.பார்ம் (B.Pharm), மருத்துவ துறையில் மற்றொரு சிறந்த படிப்பாகும். இந்த படிப்பை முடித்தால் மருந்தாளுனர் (Pharmacist), விரிவுரையாளர், ஆராய்ச்சியாளர் போன்ற பிரிவுகளில் பணியாற்றலாம். இந்தியாவில் டிப்ளமோ இன்பார்மசி (டிபார்ம்), இளங்கலை மருந்தியல் (பிபார்ம்), மாஸ்டர் ஆஃப் பார்மசி (எம்.பார்ம்), மருந்தியல் அறிவியல் முதுகலை (MS Pharm) மற்றும் மருந்தியல் முதுகலை தொழில்நுட்பம் (MTech Pharm), மருந்தியல் மருத்துவர் (PharmD)என பல்வேறு விதமான பார்மசி படிப்புகள் இருக்கின்றன. நீட் இல்லாத மற்ற மருத்துவம் சார்ந்த படிப்புகள்: ➥ பி.எஸ்சி டயாலிசிஸ் டெக்னாலஜிஸ் (B.Sc Dialysis Technologies) ➥ பி.எஸ்சி கார்டியாக் டெக்னாலஜி (B.Sc Cardiac Technology) ➥ பி.எஸ்சி பையோலஜி (B.Sc Biology) ➥ பி.எஸ்சி பைடெக்னாலஜி (B.Sc Biotechnology) ➥ மருத்துவ ஆராய்ச்சியாளர் (Medical Researcher)

மாணவர்கள் தொழில்முனைவோர்களாக மாற வேண்டும்..! - மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் அறிவுரை!

Baskaran June 19, 2023

வேலூர்: மாணவர்கள் அரசு வேலை மட்டும் நம்பாமல் ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டங்களிலும் தொழில்களை துவங்கி தொழில் முனைவோர்களாக வேண்டுமென மத்திய இணை அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள  திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் 17ஆவது பட்டமளிப்பு விழா, தமிழக ஆளுநரும், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என் ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர், வி.கே சிங், மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர். இவ்விழாவில், 417 முனைவர் பட்டங்கள் பெற்றவர்கள்  உள்பட 564 மாணவ மாணவியர்களுக்கு நோடியாக பட்டங்களை ஆளுநர் ஆர்.என் ரவி வழங்கினார். மொத்தமாக 1, 13,275 மாணவ மாணவியர்கள் பட்டங்களை பெற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வி கே சிங், பட்டங்களை பெற்றுள்ள மாணவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். கல்லூரி படிப்பை முடித்துள்ள நீங்கள் உலகில் பல சவால்களை எதிர்த்து போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நம் நாட்டின் வளர்ச்சியின் பாதையில் மாணவர்களின் பங்கு அதிக அளவில் இருக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் இலக்கினை அடைய கடுமையான உழைப்பை பயன்படுத்த வேண்டும். தொழில் முனைவர்களாக மாறினால் தங்களின் வாழ்க்கை பிரகாசிக்கும். தொழில் முனைவோர்களாக போடும் இளைஞர்களுக்கு மத்திய அரசு பல்வேறு வகைகளில் உதவிகளை அளித்து வருகிறது அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மத்திய அரசு பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களை நம்பியுள்ளது. இந்தியா மற்ற நாடுகளை விட  சுய தொழில் துவங்குவதில் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 61 வகையான தொழில்களுக்கு 132 நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது. கொரோனா காலத்திற்குப் பின்பு இந்தியாவின் பொருளாதாரம் 6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே மாணவர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். படித்த இளைஞர்கள் அனைவரும் அரசு வேலை நம்பி இருக்க வேண்டாம். ஒட்டு மொத்தமாக நான்கு சதவீதம் அளவிற்கு அரசு துறையில் வேலை வாய்ப்புகள் உள்ளது. மீதமுள்ள 96 சதவீதம் தனியார் வேலை வாய்ப்புகள் உள்ளது. 2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் 428 சுயதொழில் நிறுவனங்களில் இருந்தன. அதன் பிறகு மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையால், தற்பொழுது 80 ஆயிரம் சுய தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளது. எனவே இளைஞர்கள் சுயதொழில் துவங்க முன்வர வேண்டும் .இதற்கு மத்திய அரசு தேவையான உதவிகளை அளித்து வருகிறது. ஸ்டார்ட் அப் இந்தியா ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டங்களிலும் தொழில்களை துவங்கி தொழில் முனைவர்களாக மாறலாம் அதற்கான நிதியினையும் மத்திய அரசு வழங்கி வருகிறது' இவ்வாறு, அவர் தெரிவித்தார். 

தமிழ்வழி பொறியியல் படிப்பின் மாணவர் சேர்க்கை இடங்கள் 60 ஆக அதிகரிப்பு - அமைச்சர் பொன்முடி தகவல்!

Saraswathi June 16, 2023

அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் நடத்தப்படும் பொறியியல் பாடப்பிரிவுகளின் மாணவர் சேர்க்கைக்கான மொத்த இடங்களின் எண்ணிக்கை 40ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் மற்றும் பல்வேறு துறைகளின் இயக்குனர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழகத்தின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அரசு பணிகளில் தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் காரணமாக, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தற்போது இரண்டு பாடப்பிரிவுகள் தமிழ் வழியில் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 40 இடங்கள் மாணவர் சேர்க்கைக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பாடப்பிரிவுகளையும் தமிழ் வழியில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதுவரை, 70 பாடப்பிரிவுக்கான புத்தகங்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மீண்டும் 23ஆம் தேதி இது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்படும், என்றார்.

ஒரே நேரத்தில் மருத்துவ கலாந்தாய்வு - அமைச்சர் தகவல்!

Baskaran June 15, 2023

சென்னை: மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடைபெறும் போது, தமிழகத்திலும் கலந்தாய்வு நடைபெறும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சுகாதாரத் துறை சார்பில் கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் பார்வையிட்ட அமைச்சர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கலந்தாய்வு அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 54,374 மாணவர்களிடம் பேசி உள்ளோம். 177 பேர், மன அழுத்த நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. அவர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். தேர்ச்சி பெறாத மாணவர்களை தொடர்புகொண்டு பேசி வருகிறோம். 65823 பேர் தேர்ச்சி பெறவில்லை. இவர்களின் விவரங்களை கேட்டுள்ளோம். வந்த தும் அவர்களிடம் பேசுவோம். இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழகத்திற்கு முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. பிரபஞ்சன், மிகப்பெரும் சாதனை படைத்திருக்கிறார். முதல் 10 இடங்களில் 4 பேர் இடம்பிடித்திருக்கின்றனர்.  இவர்கள் தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள் நீட் பயிற்சி சிறப்பாக அளிக்கப்படுவது இதன்மூலம் தெரியவந்துள்ளது. வரும் காலத்தில் இன்னும் சாதிப்பார்கள். கடந்த ஆண்டைப்போல் மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடக்கும். ஒரே நேரத்தில் அகில இந்திய கலந்தாய்வு, மாநில கலந்தாய்வு நடக்கும். அடுத்த வார இறுதிக்குள் ஆன்லைன் பதிவு துவங்கும். நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் சாதித்தாலும், நீட் விலக்கு என்பது தொடர்ந்து வலியுறுத்துவோம். கடந்த வாரம் மத்திய உயர்கல்வித துறை நீட் தேர்வு விலக்கு தொடர்பாக சில விளக்கங்களை கேட்டு இருக்கிறது . இரண்டு மூன்று தினங்களில் விளக்கம் அளிக்கப்படும். தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எம்பிபிஎஸ் படிப்பில் இந்த ஆண்டு கூடுதலாக 450 இடங்கள் கிடைத்திருக்கின்றன என்றும்,சென்னை கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு எம்பிபிஎஸ் படிப்பில் 50 இடங்கள் கிடைத்திருக்கின்றன என்றும், ஒட்டுமொத்தமாக 500 இடங்கள் கூடுதலாக கிடைத்திருக்கின்றன என்றும், புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு 50 இடங்கள் கூடுதலாக கிடைத்திருக்கின்றன என்றும் தெரிவித்தார்.

12ஆம் வகுப்பு மறுகூட்டல் மதிபெண் விவரம் வெளியீடு: 830 மாணவர்கள் மதிப்பெண்களில் மாற்றம்

Baskaran June 15, 2023

சென்னை: பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டலில் 830 மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் மாற்றம் இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 8ஆம் தேதி வெளியானது. இதைத்தொடர்ந்து மறுக்கூட்டலுக்கு மாணவர்கள் மே 30ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வு இயக்கம் அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பித்த நிலையில் நேற்று முடிவுகள் வெளியாகின.மதிப்பெண் மாற்றம் குறித்து விண்ணப்பித்தவர்கள் பதிவெண் பட்டியல் மட்டும் www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களில் விடைத்தாளில் எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மறுமதிப்பீட்டில் 830 மாணவர்களின் மதிப்பெண்கள் மாற்றம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் மாணவிகளை விட மாணவர்கள் தான் மறுக்கூட்டலில் அதிகம் மதிப்பெண் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 1-5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு- பாடப்புத்தகங்களை இன்றே வழங்க அரசு உத்தரவு!

Saraswathi June 14, 2023

தமிழகத்தில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையான மாணவ-மாணவியருக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. வகுப்பு தொடங்கிய முதல் நாளே மாணவர்களுக்கான  பாடப் புத்தகங்களை விநியோகிக்க  அரசு உத்தரவிட்டுள்ளது.   கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜூன் 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. ஆனால், தமிழகத்தில் கோடை வெயிலின் உக்கிரம் குறையாத நிலையில், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், கல்வியாளர்களும், பெற்றோர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.  அதைத் தொடர்ந்து, முதலமைச்சருடன் நடத்தப்பட்ட ஆலோசனையின்படி, முதலில் ஜூன் 5ம் தேதி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வெயிலின் தாக்கம் குறையாக நிலையில், பள்ளிகள் திறப்பானது  7ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.   அதன்படி, கடந்த 12ம் தேதி  6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அதைத் தொடர்ந்து, இன்று, 1 முதல்  5 ஆம் வகுப்பு வரையான மாணவ-மாணவியருக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. வகுப்புகள் தொடங்கப்படும் முதல் நாளான இன்றே அனைத்து மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புத்தகங்களோடு,  இலவச உபகரணங்களையும் மாணவ-மாணவியருக்கு இன்றே வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இளங்கலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை - அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்.. | Bachelor Degree Admission 2023

Saraswathi June 12, 2023

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான 2ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் செயல்பட்டுவரும் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல வகையான பாடப்பிரிவுகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் 8ம் தேதி முதல் 22ம் தேதி வரை பெறப்பட்டன. அதன்படி, இளங்கலை படிப்புகளில் சேர்வதற்காக 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டது. இதையடுத்து, மே 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு பிரிவு மாணவர்கள், முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகள், தேசிய மாணவர் படையை சேர்ந்தவர்கள் ஆகியோருக்கான சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. அதில், 3 ஆயிரத்து 363 மாணவ, மாணவிகள் தங்களுக்கான இடங்களைத் தேர்வு செய்தனர். அதைத் தொடர்ந்து, ஜூன் 1ம் தேதி பொதுப்பிரிவு மாணவ-மாணவியருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. கடந்த 11 நாட்களாக நடைபெற்ற கலந்தாய்வில், சுமார் 40,287 மாணவ-மாணவியருக்கு இடம் கிடைத்துள்ளது. அதில், மாணவர்கள் 15,034 பேர், மாணவியர் 25,253 ஆவர். இவர்களில் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் 10,918 மாணவிகள் இடம்பெற்றுள்ளனர். முதல் கட்டக் கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அதில் நிரப்பப்பட்ட இடங்கள் போக மீதமுள்ள இடங்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. வரும் 20ம் தேதியுடன் இன்று இந்தக் கலந்தாய்வு நிறைவடைந்து, ஜூன் 22ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைப்பு.. | Tamil Nadu School Opening Date 2023

Nandhinipriya Ganeshan June 06, 2023

தமிழகத்தில் இந்தாண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. எப்போதும் மே மாதம் அக்னி நட்சத்திரம் முடிந்ததும் வழக்கமாக வெயில் சற்று குறையும். ஆனால், தற்போது அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் சற்று தாமதம் நீடித்து வருகிறது. எப்போதும் கோடை விடுமுறை முடிந்ததும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். அதன்படி தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்புக்கு, ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால் வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் 7 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், வெயிலின் தாக்கம் இன்னும் குறையாத காரணத்தால் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி வைப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று காலை ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி, 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12ஆம் தேதியும், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை வரும் 14ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. உங்க மதிப்பெண்ணை எப்படி சரிபார்ப்பது? | TN SSLC 10th Results 2023 How to Check

Nandhinipriya Ganeshan May 19, 2023

தமிழ்நாட்டில் 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 முதல் 20 வரை நடைபெற்றது இதில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்தநிலையில், மே 19 இன்று காலை 10 மணிக்கு 10ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் முடிவுகளை தமிழ்நாடு அரசுத் தேர்வு இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு, 91.39% தேர்ச்சி சதவீதம் மற்றும் 8,35,614 மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு 10வது பொதுத்தேர்வு முடிவுகள் 2023 அதிகாரப்பூர்வ இணையதள போர்ட்டல் tnresults.nic.in, dge.tn.gov.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in இல் ஆன்லைன் பயன்முறையில் பதிவேற்றப்படும். எனவே, மாணவர்கள் தேவையான விபரங்களை உள்ளிட்டு தங்களது மதிப்பெண்களை சரிபார்த்து கொள்ளலாம்.

பொறியில் பட்டபடிப்பிற்கான கவுன்செலிங் சேர்க்கை இன்று முதல் தொடக்கம் | TNEA Counselling 2023

Priyanka Hochumin May 05, 2023

தமிழகத்தில் மொத்தம் 440 பொறியில் கல்லூரிகள் உள்ளன. இதில் கவுன்சலிங் அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்வதற்காக 1.5 லட்சம் சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, தங்கள் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ளவும், குறைந்த செலவில் படிக்கவும் இந்த கவுன்சலிங் உங்களுக்கு உதவியாக இருக்கும். இன்று தொடங்கி வரும் ஜூன் 4, 2023 ஆம் தேதி வரை தாராளமாக விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.500/- வசூலிக்கப்படுகிறது. இதில் பட்டியல் இனமக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் பகுதியைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.250/- செலுத்த வேண்டும்.