Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,032.40
179.46sensex(0.24%)
நிஃப்டி22,464.50
62.10sensex(0.28%)
USD
81.57

தலங்கள்

மாங்கல்ய தோஷத்தை போக்கும் பரிகாரக் கோயில் எங்கு உள்ளது? | Mangalya Dosham Pariharam Temple

Nandhinipriya Ganeshan June 07, 2023

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? திருமணம் என்பது ஆண், பெண் இருவர்களின் வாழ்க்கையிலும் திருப்பு முனையை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாகும். அந்த திருப்பு முனை சிறப்பாகவும் இருக்கலாம், அதற்கு மாறாகவும் இருக்கலாம். இருப்பினும், தோஷம் இருப்பவர்களை திருமணம் செய்வதாலும் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். பொதுவாக, நாம் சென்ற ஜென்மத்தில் பிறருக்கு செய்த துன்பம் தான் மற்றொரு ஜென்மத்தில் தோஷமாக வரும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. தோஷங்களில் களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், நாக தோஷம், ராகு, கேது தோஷம், மாங்கல்ய தோஷம் என பல தோஷங்கள் இருக்கின்றன. ஒரு பெண் ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானமான எட்டாமிடத்தில் சனியும் சூரியனும் நிற்பது மாங்கல்ய தோஷம். ஆயுள் ஸ்தானத்தில் நிச சுக்கிரன், சூரியனுடன் நிற்பதும் மாங்கல்ய தோஷம். எட்டாமிடத்தில் சூரியன் செவ்வாயுடன் சேர்ந்து இருந்தாலும் மாங்கல்ய தோஷமே. எட்டாமிடத்தில் சனி நிற்க அதை செவ்வாய் சூரியன், ராகு, கேது பார்ப்பதும் தோஷமே. இதனால் பெண்களுக்கு திருமணமாவதில் தடை நீடித்துக் கொண்டே இருக்கும். இருப்பினும், இந்த தோஷத்திற்கு உரிய பரிகாரக் கோயிலுக்கு செல்வதன் மூலம் தோஷத்தின் தாக்கம் குறைந்து திருமணம் பாக்கியம் கிடைக்கும். அதோடு, திருமணமான பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர். சரி வாங்க மாங்கல்ய தோஷத்தை போக்கும் பரிகார கோயில் எங்குள்ளது, அதன் சிறப்புகள் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம். திருமங்கலக்குடி தலம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் ஆடுதுறைக்கு வடக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த திருமங்கலக்குடி தலம். இங்கு எழுந்தருளியிருக்கும் இறைவன் பெயர் பிராணநாதேஸ்வரர். இவரை 'மங்களநாத' என்றும் அழைப்பார்கள். மங்களாம்பிகை உடனாய பிராணநாதேஸ்வரர் திருக்கோயில் 'பஞ்ச மங்கள் ஷேத்திரம்' என்றும் அழைக்கப்படுகிறது. ஏனென்றால், ஊரின் பெயர் திருமங்கலக்குடி என்றும், அம்பாளின் பெயர் மங்களாம்பிகை என்றும், தல விநாயகரின் பெயர் மங்கள விநாயகர் என்றும், கோவில் விமானம் மங்கள விமானம் என்றும், மற்றும் தீர்த்தம் மங்களம் தீர்த்தம் என்றும் இருப்பதால், இந்த தலம் 'பஞ்ச மங்கள் ஷேத்திரம்' என்றானது. தல வரலாறு: எமனுடன் போராடி தன் கணவன் சத்தியவான் உயிரை மீட்டாள் சாவித்திரி. ஆனால் இன்னொரு பெண்ணோ இறைவனுடன் போராடி தன் கணவனை மீட்டாள். அதுவே இக்கோயிலின் தல வரலாறாகும். முதலாம் குலோத்துங்க சோழனிடம், அலைவாணர் என்ற அமைச்சர் இருந்தார். சிவபெருமானின் தீவிர பக்தனான இவர் தான் வணங்கும் சிவபெருமானுக்கு தான் வசிக்கும் திருமங்கலக்குடியில் ஒரு ஆலயம் ஒன்றை அமைக்க நினைத்தார். ஆனால், அதற்கு நிறையப் பணம் தேவைப்பட்டது. இதற்காக, அவர் தவறு என்று தெரிந்தும் சிவபெருமானின் மீதுள்ள அளவில்லா பக்தியால், தனது அரசனின் அனுமதியின்றி கஜானாவுக்கு செல்ல வேண்டிய வரி பணம் முழுவதையும், கோயில் கட்டுவதற்காக செலவழிக்கத் தொடங்கினார். கோயிலும் கட்டி முடிக்கப்பட்டது. இந்த விஷயம் எப்படியோ அரசனுக்கு தெரியவர, உடனே அலைவாணரின் தலையை துண்டிக்கும்படி ஆணையிட்டார். ஆனால், அதற்கு முன்பாகவே அமைச்சர் தன் உயிரை தானே மாய்த்துக் கொண்டார். கணவனின் முடிவை அறிந்த அவரது மனைவி, அவர் கட்டிய கோவிலில் உள்ள இறைவனிடமும், இறைவியிடமும் கண்ணீர் பெருக கதறி அழுதாள். தனது கணவனுக்கு உயிர்ப்பிச்சை தருமாறு இறைவனிடம் மன்றாடினாள். அவளுடைய பிராத்தனையை கேட்டு மனமிறங்கிய இறைவனும், இறைவியும் இறந்து போன அலைவாணரை மீண்டும் உயிர்பிழைக்க செய்தனர். விதவையான அமைச்சர் மனைவிக்கு மங்கல்ய பாக்கியத்தை திருப்பிக் கொடுத்ததால், அம்மன் 'ஸ்ரீ மங்கள நாயகி' என்றும், தன் பக்தனுக்கு மீண்டும் பிராணனை அருளி உயிர்ப்பித்ததால் இறைவன் 'ஸ்ரீ பிராணநாதேஸ்வரர்' என்றும் போற்றப்படுகிறார்கள். கோயிலில் உள்ள தெய்வங்கள்: இக்கோயிலில் சிவன், பார்வதி தேவி சன்னதிகள் தவிர, விநாயகர், முருகன், கஜலட்சுமி, பைரவர், சிவகாமியுடன் கூடிய இரு நடராஜர், சந்திரசேகரர், அகஸ்திய லிங்கம், நால்வர், ஹரதத்தர், மெய்க்கண்டார் ஆகியோரின் சன்னதிகளும், சிலைகளும் மாடவீதியில் காணப்படுகின்றன. இங்கு நவக்கிரகம் இல்லை. நடைபாதையில், 11 சிவலிங்கங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. கருவறையை சுற்றியுள்ள இடத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, ரிஷ்பரூதர், பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோரின் சிலைகளைக் காணலாம். மேலும், நடராஜர் சன்னதியில் மரகத (மரகத) லிங்கம் உள்ளது. இன்னொரு சிறப்பு என்னவென்றால், இக்கோயிலில் மிகவும் அரிதான புனித நதியான காவிரிக்கு சிலை உள்ளது. கோயிலின் சிறப்பு: பார்வதி தேவி, காளி, பூமாதேவி, ஆகாசவாணி, சூரியன், மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் அகஸ்தியர் முனிவர்கள் இங்குள்ள சிவனை வழிபட்டதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மேலும், சிவபெருமானின் இரு கண்களாகக் கருதப்படும் சூரியன், சந்திரம் இருவரும் சூரிய தீர்த்தம் மற்றும் சந்திர தீர்த்தம் என இரண்டு புனித தீர்த்தம் வடிவில் இருக்கின்றன. இந்தக் கோயிலின் தல விருட்சமாக கோங்கு, வெள்ளெருக்கு ஆகிய மரங்கள் இருக்கின்றன. இக்கோயில் மங்களநாயகி அம்பாளின் வலது கையில் எப்போதும் தாலிக்கயிறு இருக்கும். அம்பாளை வழிபடும் பெண்களுக்கு தாலிக்கயிறு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்றும், ஏற்கனவே திருமணமானவர்கள் நீண்ட ஆயுளுடன் தீர்க்க சுமங்கலியாக செழிப்புடம் வாழ்வார்கள் என்றும் நம்பப்படுகிறது. வழிபாடு: பக்தர்கள் இங்கு 11 ஞாயிற்றுக்கிழமைகள் சிவனை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஏனென்றால், 11 ஞாயிற்றுக்கிழமைகள் அர்ச்சனை செய்து வந்தால், நவக்கிரக தோஷம், பூர்வஜென்ம தோஷம் அனைத்தும் விலகும். அதேபோல், மங்களாம்பிகைக்கு ஐந்து வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டால் மாங்கல்ய தோஷமும், களத்திர தோஷமும் அகலும். வழிபாட்டிற்கு பிறகு, இக்கோயிலின் புனித மரமான வெள்ளெருக்கு இலையில் தயிர் சாதம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், முற்பிறவியில் ஏற்பட்ட பாவங்கள் மற்றும் சாபங்கள் நீங்கும் என்ற நம்பிக்கையுடன் அமாவாசை நாளில் அகஸ்திய லிங்கத்திற்கு பூஜை நடத்தப்படுகிறது. கோவில் நேரங்கள்: காலை 06:30 முதல் மதியம் 12:30 வரை மற்றும் மாலை 04:00 முதல் இரவு 08:30 வரை. கோவில் முகவரி: ஸ்ரீ பிராண நாதேஸ்வரர் கோவில், திருமங்கலக்குடி அஞ்சல், திருவிடைமருதூர் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம். தமிழ்நாடு - 612 102. தொலைபேசி: +91 0435 247 0480. செல்லும் வழி: கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ள ஆடுதுறையை அடைந்து, அங்கிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் சென்றால், திருமங்கலக்குடியை அடையலாம்.

தீராக் கவலைகளைத் தீர்த்தருளும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில்..! | Tiruchengode Arthanareeswarar Temple

Gowthami Subramani June 01, 2023

திருச்செங்கோடு புகழ்பெற்ற ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் தலத்தினைப் பற்றி அறியாதோர் எவருமிலர். திருஞானசம்பந்தர் அவர்களால் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். அர்த்தநாரீஸ்வரர், பாகம்பிரியாள், செங்கோட்டு வேலவர் என ஒவ்வொரு கடவுளுக்கும் தனி சந்நிதி அமைந்து, பிரம்மாண்டமான அமைப்பைக் கொண்ட தலமாகும். இந்த அற்புதப் புகழ் பெற்ற, திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வரலாறு, சிறப்புகள், அமைவிடம் மற்றும் இன்னும் பல சுவாரஸ்யமானத் தகவல்களைக் காணலாம்.

வியக்க வைக்கும் மதுரை மீனாட்சி அம்மன் சிலை ரகசியம்.. | Madurai Meenakshi Amman statue Sectres in Tamil

Nandhinipriya Ganeshan May 22, 2023

மதுரை என்று சொன்னதுமே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில்தான். நவகிரங்களில் புதன் தலமாக விளங்கும் இக்கோயில் வருடத்தில் 274 நாட்களும் திருவிழா கோலமாக தான் காட்சியளிக்கும். தமிழ்நாட்டின் பல முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் இந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் அமைப்பும், அதன் வரலாற்று சிறப்பம்சங்களும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கிறது. கயற்கண்குமாரி, அபிராமவல்லி, கோமகள், கற்பூரவல்லி, குமரித்துறையவள், பச்சைதேவி, சுந்தரவல்லி, அபிஷேகவல்லி, தடாதகை, மாணிக்க வலி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவில், மும்முலைத்திருவழுதி மகள் என்றெல்லாம் அழைக்கப்படும் அன்னை மீனாட்சி அம்மனின் சிலையின் மகத்துவத்தை இப்பதிவில் பார்க்கலாம். மதுரை மீனாட்சி அம்மன் சிலை ரகசியம்: மதுரை மீனாட்சி அம்மனின் திருமேனி சிலை முழுவதும் பச்சை மரகதக் கல்லில் செய்யப்பட்டதாகும். இதனால், கருவறை பக்கத்தில் மேளம், நாதஸ்வரம் போன்ற இசைக் கருவிகளை இசைக்க மாட்டார்கள். பொதுவாக, கல் என்றாலே கடினமானதாக தான் இருக்கும். ஆனால், மரகத கல் மிக மென்மையானது. அந்த கல்லால் மேளம் நாதஸ்வரம் போன்ற இசைக் கருவிகளின் ஒலி அதிர்வுகளை கூட தாங்கிக் கொள்ள முடியாது. அப்படி, ஒலி அதிர்வுகளை கூட தாங்க முடியாத மரகதக்கல்லை எந்த ஒரு தொழில்நுட்ப கருவியோ வசதியோ இல்லாமல், வெறும் உளியை கொண்டு செதுக்கி இருக்கிறார்கள் நம் சிற்பிகள். இதிலிருந்து நமது சிற்பிகள் எவ்வளவு திறமைசாலிகள் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். அன்னையின் வலது கால் சற்று முன்னோக்கி இருப்பது போன்று அமைந்திருக்கும். இதற்கு காரணம் பக்தர்களின் அழைப்பிற்கு உடனே ஓடி வந்து அருள்புரியக்கூடியவள் என்று அர்த்தம். அன்னையின் வலது கையில் கிளியை ஏந்தி, அது காதில் பேசுவது போன்று அமைந்திருக்கும். ஏனென்றால், கிளி தான் பேசுவதை திரும்பத் திரும்ப பேசக்கூடியது. அதனால் பக்தர்களின் வேண்டுதலைத் திரும்ப திரும்ப அன்னையிடம் கூறி, அவர்களின் குறையை விரைவாக நிறைவேற்றும் பொருட்டு கையில் கிளி வைத்துள்ளார். இது நம்பமுடியாத அழகாகவும், தனது ஒளிரும் கண்களால் அம்மன் உயிருடன் இருப்பதைப் போல தெரியும் காட்சிகள் அனைத்தும் தெய்வீகமானது. பார்வதி மூன்று மார்பகங்களுடன் பிறந்ததால் இக்கோயிலில் அம்மன் தெய்வத்தை மூன்று மார்பகங்களுடன் காணலாம். அனைத்து சிவ ஆலயங்களும் முக்தியைத் தரக்கூடியது. முக்திக்கான வழியைத் தரும். ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் குடிகொண்டிருக்கும் மதுரைக்கு வந்தாலே முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆலயத்தில் வழிபடுவதால் முக்தி மட்டுமல்ல, அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருப்பதி ஏழுமலையான் தங்க கோபுர வீடியோ.. அதிர்ச்சியில் தேவஸ்தானம்.. | Tirumala Ananda Nilayam

Nandhinipriya Ganeshan May 09, 2023

ஆந்திராவில் அமைந்துள்ள பிரபல திருப்பதி ஏழுமலையான் கோயிலின் தங்க கோபுரம் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி கோயிலில் திருமலை-திருப்பதி தேவஸ்தான விதிமுறைகளின்படி, கோயிலுக்குள் மின்சார மற்றும் மின்னணு சாதனப் பொருட்கள் மற்றும் இதர பொருட்களை எடுத்துச் செல்வதும், அதன் மூலம் வீடியோ எடுப்பதும் குற்றமாகும். அதேபோல், வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திலிருந்து இரண்டு கட்ட சோதனைகளுக்குப் பிறகு தான் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். அங்கு சோதனைக் கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், நேற்று முன்தினம் கோயிலுக்கு சென்ற பக்தர் ஒருவர் தன்னுடைய செல்போனை பயன்படுத்தி கோயிலின் ஆனந்த நிலையம் எனப்படும் தங்க கோபுரம் மற்றும் கருவறைக்குச் செல்லும் வழி உள்ளிட்டவற்றை வீடியோ எடுத்துள்ளார். எடுத்ததோடு மட்டுமல்லாமல் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலானதையடுத்து கோயிலுக்குள் சென்ற பக்தர் கையில் எப்படி கேமரா வந்தது? கோயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அலட்சியமா? என பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் வெடித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் திருப்பதி திருமலை தேவஸ்தானம் நிர்வாகத்திற்குத் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் உடனடியாக கோயில் பாதுகாப்பு அமைப்புகளின் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பதிவு செய்தவர் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வீடியோ எடுத்தவர் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோயிலுக்குள் இருக்கும் சிசிடிவி கேமராக்கள் பதிவுகள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வீடியோ எடுத்த நபரை கண்டுபிடிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், வீடியோ எடுத்த நாளன்று திருமலை திருப்பதி கோயிலில் கனமழை பெய்ததாகவும், அப்போது 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டிருந்த நேரத்தை பயன்படுத்தி கொண்டு அந்த நபர் செல்போனை உள்ளே எடுத்துச் சென்றிருக்கலாம் எனவும் தேவஸ்தானம் யூகித்துள்ளது.

நோய்களும், செய்த பாவங்களும் விலக திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவில்..! | Thirukattupalli Agneeswarar Temple

Gowthami Subramani May 04, 2023

திருக்காட்டுப்பள்ளி உள்ள அக்னீஸ்வரர் தீயாடிப்பர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். இந்த கோவில் ஆனது, திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் போன்றோரால் பாடல் பெற்ற சிவ ஆலயமாகும். இந்த திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவில் வரலாறு, தலத்தின் சிறப்பு, செல்லும் வழி உள்ளிட்டவற்றை இதில் காணலாம்.

மங்கல பாக்யம் அருளும் திருவீழிமிழலை கோவில்.. எப்படி செல்லாம் முழு விவரங்களும் இங்கே.. | Thiruveezhimizhalai Temple

Gowthami Subramani April 30, 2023

திருவீழிமிழலையில் உள்ள வீழிநாதர் கோவில் திருமண பாக்கியம் அருளும் சிறப்பு மிக்க கோவிலாகும். திருவாரூர் மாவட்டத்தின் குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலையில் உள்ள இக்கோவில் சிவாலயங்களில் முக்கிய கோவிலாக உள்ளது. சோழவள நாட்டின் காவிரி நதியின் தென்கரையில் இருக்கக் கூடிய தேவார பாடல் பெற்ற 61 ஆவது தலமாக இத்தலம் உள்ளது. இந்த கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

மாசி மகம் தினத்தில் நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டியவை.! | Things to Do in Masi Magam in Tamil

Gowthami Subramani March 03, 2023

மாசி மகம் சிறப்பு தினத்தில் கும்பகோணம் குளத்தில் நீராடி குளிப்பது வழக்கம். இந்த தினத்தில், குளத்தில் நீராட முடியாதவர்கள் தங்கள் வீடுகளிலேயே அருகில் உள்ள நீர் நிலைகளில் நீராடுவதன் மூலம், மகாமகம் குளத்தில் நீராடி பலனைப் பெறலாம். இந்த சிறப்பான நாளில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதன் மூலம் ஏழு தலைமுறை பாவங்களைப் போக்கக் கூடியதாகும். இந்த தினத்தில் நீராடுவது மட்டுமல்லாமல், தானங்கள் கொடுப்பதும் விசேஷமான ஒன்றாகும். அந்த நேரத்தில் 20 வகையான தானங்களை வழங்கலாம் எனக் கூறுவர்.

ஏழுஜென்ம பாவங்களை போக்கும் மகாமகக் குளத்தின் சிறப்பு.. | Kumbakonam Mahamaham Kulam Significance in Tamil

Nandhinipriya Ganeshan March 03, 2023

கும்பகோணம் நகரின் பிராதன கோயிலாக இருப்பது ஆதிகும்பேஸ்வரர் கோயில். சம்பந்தர், அப்பர் போன்ற சைவைக்குரவரகளால் பாடப்பெற்ற சிறப்புடைய சிவாலயமாகும். காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இக்கோயில் 1300 ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலின் திருக்குளமாக இருப்பதான் மகாமக குளம். மாசி மகக்குளம் கும்பகோணம் நகரின் மையத்தில் 6.2ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய புனித குலங்களுள் இதுவும் ஒன்றாகும்.

சிறப்பு வாய்ந்த கும்பகோணம் மாசி மகம்.. | Masi Magam Kumbakonam Mahamaham History in Tamil

Nandhinipriya Ganeshan March 03, 2023

மாசி மகம் என்றாலே நம்மில் பலருக்கும் மனதிற்கு எட்டுவது கும்பகோணம் மாசி திருவிழா தான். அப்படி அங்கு மட்டும் ஏன் அவ்வளவு சிறப்பு தெரியுமா? வாங்க தெரிந்துக் கொள்வோம். உலகத்தில் இருக்கும் உயிர்களை உருவாக்கும் விதைகளை அமிர்தம் நிறைந்த குடத்தில் போட்டு வைத்திருந்தார் பிரம்மா. வேடனாக வேஷம் பூண்டு வந்த சிவன், அம்பு கொண்டு அக்குடத்தை சாய்த்து அதிலிருந்து உயிர்களை உருவாக வைத்தாராம். குடமான கும்பத்தை, சிவன் தன் அம்பால் சேதமாக்கி வைத்த இடம் என்பதாலே இது கும்பகோணம் என்று அழைக்கப்பெறுகிறது. பிரம்மன் வைத்திருந்த அந்த குடத்தில் இருந்து விழுந்த ஒரு துளி அமிர்தமே இங்கு குளமாகி பாவம் போக்கி வருவதாகவும் புராண கதைகள் கூறுகின்றன. 

ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள்.. மெய்சிலிர்க்க வைக்கும் மர்மத்தின் உச்சம்.. | 8 Ancient Shiva Temples in Straight Line

Nandhinipriya Ganeshan February 16, 2023

இன்றைய காலக்கட்டத்தில் கட்டிடக் கலைக்கு எத்தனையோ தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. ஆனால், நமது முன்னோர்கள் எந்தவொரு தொழில்நுட்ப வசதியும் இல்லாமல், நம்மால் சிந்தித்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு கட்டிட கலைகளில் சிறந்து விளங்கியுள்ளார். அதற்கு நம் நாட்டில் உள்ள கோவில் கட்டிட கலைகளே சாட்சி. ஆமாங்க, இந்த உலகத்தில் ஆன்மிகத்திற்கும், கோவில் கட்டிடக் கலைக்கும் இந்தியாவிற்கு நிகரான நாடுகள் எதுவும் இல்லை. அப்படி, உலகமே வியந்து பார்க்கும் ஒருவிஷயம் என்னவென்றால், இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத் கோவிலில் இருந்து ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவில் வரை 7 சிவன் கோவில்களுமே ஒரே தீர்க்க ரேகையில் அமைந்திருப்பது தான்.