தமிழ்நாடு - புத்தாண்டு கொண்டாட்டமும் அதன் கட்டுப்பாடுகளும்
புத்தாண்டு 2023 கொண்டாடுவது தொடர்பாக தமிழ்நாடு காவல் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதை கட்டாயம் பொது மக்கள் கடை பிடிக்க வேண்டும். இது தொடர்பாக தமிழ்நாடு காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பை பார்க்கலாம்.
புத்தாண்டை முன்னிட்டு வரும் 31.12.2022 இரவு பொது இடங்கள் மற்றும் சாலைகளில் கூட்டம் கூடுவது கூடாது. வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டு விழாவை கொண்டாடி மகிழ்வது சிறந்தது.
31.12.2022 அன்று மாலை சுமார் 90,000 காவல் துறையினர் மற்றும் 10,000 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதன் மூலம் வாகன சோதனை தமிழகம் முழுவதும் நடைபெறும்.
31 ம் தேதி நள்ளிரவு வாகனங்களில் தேவை இன்றி, சுற்றுவதை தவிர்க்க வேண்டும். மேலும், நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் எந்த வித புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் அனுமதி இல்லை.
முதல் நாள் இரவும் 31.12.2022, 01.01.2023 புத்தாண்டு நாளிலும் கடற்கரைகளில் பொது மக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட அனுமதி இல்லை .
மது அருந்தியவர்கள் வாகனம் ஓட்ட கூடாது. அதே போல் அதி வேகமாகவும், கவனக் குறைவாகவும் வாகனங்களை ஓட்ட கூடாது. மீறினால் கைது செய்யப்படுவார்கள். மேலும் அவர்களது வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.
வாகனங்களில் நீண்ட தூரம், இரவில் பயணிக்க இருப்பவர்கள் 3 மணி நேரத்துக்கு ஒரு முறை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி, தேநீர் குடித்த பின்னரே பயணத்தை தொடர வேண்டும். இதற்காக இரவு முழுவதும் நெடுஞ்சாலைகளில் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளன.
வழிபாட்டு தலங்களில் காவல் துறையால் முறையாக பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. அங்கு குழப்பம் விளைவிக்க முயற்சி செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
வெளியூர்களுக்கு செல்பவர்கள், அருகில் இருக்கும் காவல் நிலையங்களில் தகவல் தெரிவிக்க வேண்டும். இதற்காக வீட்டின் அருகே காவல் துறையினர் ரோந்து செல்ல ஏற்பாடு செய்யப்படும். இதனால் திருட்டு சம்பவங்கள் தவிர்க்கப்படும்.
கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டை கொண்டாடுபவர்கள், காவல் துறையின் அனைத்து நிபந்தனைகளையும் கடைப் பிடிக்கப்பட வேண்டும். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய ரோந்து வாகனம் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் கண்காணிக்கப்பட உள்ளனர்.
பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உள்ளனர் இந்த நபர்கள் குறித்த தகவலை காவல்துறைக்கு 100 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு தகவல் தரும் பொது மக்களின் ரகசியம் காக்கப்படும்.