Eye Infection In Tamil | Contact Lens Side Effects
Implantable Contact Lens Side Effects: உஷார் - காண்டாக்ட் லென்ஸுடன் தூங்கியதால் கண் கருவிழியையே தின்ற பயங்கர கிருமி.
அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்தவர் மைக் க்ரும்ஹோல்ஸ், இவருக்கு வயது 21. இவருக்கு கண் பார்வை மங்கியுள்ளதால் பள்ளிக்காலத்தில் இருந்தே கண்ணாடி அணிந்து வந்துள்ளார்.
கல்லூரியில் சேரும்போது 3 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணாடிக்கு பதிலாக "கான்டாக்ட் லென்ஸ்" அணிந்து இருக்கிறார் மைக் க்ரும்ஹோல்ஸ்.
கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் அதற்கென தனி கவனம் செலுத்த வேண்டும். கான்டாக்ட் லென்ஸ் உபயோகிப்பவர்களுக்கு அது தெரிந்திருக்கும்.
லென்ஸை கண்ணில் மாட்டும் போதும், எடுக்கும் போதும் கைகளை சுத்தப்படுத்த வேண்டும், லென்ஸை அதற்கான சொல்யூஷனில் போட்டு வைக்க வேண்டும்.
இரவில் லென்ஸை கண்ணில் மாட்டிக் கொண்டு தூங்கக் கூடாது போன்ற ஏராளமான விதிமுறைகள் இருக்கின்றன.
இந்நிலையில், மைக் க்ரும்ஹோல்ஸ் 2 வாரங்களுக்கு முன்பு கல்லூரியில் இருந்து வந்தவுடன் லென்ஸை கழட்டி வைக்காமல் சிறிது நேரம் அப்படியே தூங்கி விட்டார்.
அரை மணிநேரம் தூங்கி எழுந்த பிறகு , அவரது வலது கண்ணில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டுள்ளது. லென்ஸ் பயன்படுத்துவோருக்கு வழக்கம் போல் ஏற்படும் சாதாரண கண் எரிச்சல் என்று நினைத்து பெரிதாக எடுத்து கொள்ளவில்லை மைக் க்ரும்ஹோல்ஸ்.
அடுத்த நாள் காலையில் பார்க்கும் போது அவரது வலது கண்ணில் இருந்த கண் கரு விழி காணாமல் போய் வெள்ளையாக மாறி இருந்தது. மேலும், அந்தக் கண்ணில் பார்வையும் பறி போனது.
மருத்துவமனைக்கு சென்ற மைக் க்ரும்ஹோல்ஸை பரிசோதித்த மருத்துவர்கள், மிகவும் அரிதான "அக்கன்தமோய்பா கேராடிட்டிஸ் " எனும் சதையை தின்னும் கிருமி அவரது கரு விழியை சாப்பிட்டுவிட்டதாக தெரிவித்தனர்.
மைக் க்ரும்ஹோல்ஸ், மற்றவர்களுக்கு இந்த கதி ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக சமூக வலை தளங்களில் தனது அனுபவத்தை பகிர்ந்து வருகிறார்.
கண்களில் "கான்டேக்ட் லென்ஸ்" அணியும் பழக்கம் கொண்ட நபர்களுக்கு இந்த செய்தி மிகப்பெரிய எச்சரிக்கை பதிவாக மாறி இருக்கிறது.