Tap to Read ➤

காணும் பொங்கல் பெண்களுக்கு ஏன் ஸ்பெஷல் ?

தென்னிந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் ஓர் பண்டிகை பொங்கல் பண்டிகை.
பொங்கல் பண்டிகையின் கடைசி நாளாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பாரம்பரியம் மற்றும் பழக்கவழக்கங்கள் நிறைந்த பண்டிகையாக பொங்கல் பண்டிகை இருக்கிறது.
பொங்கல் பண்டிகையின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. காணும் பொங்கலில் பல சம்பிரதாயங்கள் மற்றும் கொண்டாட்ட முறைகள் உள்ளன. அவை என்னவென்று இதில் தெரிந்து கொள்ளலாம்.
காணும் பொங்கலுடன் பொங்கல் கொண்டாட்டங்கள் நிறைவடைகின்றன. காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்று அழைப்பார்கள். மேலும் திருவள்ளுவரின் நினைவாக ‘திருவள்ளுவர் தினம்' என்றும் அழைக்கப்படுகிறது.
காணும் பொங்கல் அன்று அனைவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவார்கள். இந்நாளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல், பெரியோரின் ஆசியைப் பெறுவது போன்றவற்றை செய்வார்கள்.
காணும் பொங்கல் பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். இந்நாளில் பொங்கல் வைக்கும் போது, அதில் புது மஞ்சள் கொத்தினைக் கட்டி அதனை எடுத்து, மூத்த தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து சடங்கு செய்வார்கள் . இவ்வாறு செய்வதால், தீர்க்க சுமங்கலியாக வாழலாம் என்பது நம்பிக்கை.
காணும் பொங்கல் அன்று நடைபெறும் மற்றொரு முக்கியமான சடங்கு கும்மிப்பாட்டு. கும்மிப்பாடும் போது, சிறுமியை வட்டத்தின் நடுவில் உட்கார வைத்து பெண்கள் சிறுமியைச் சுற்றி நடனமாடுவார்கள். இதனால் திருமணம் தாமதமாகும் இளம் வயது பெண்களின் திருமணம் விரைவாக நடக்கும் என்பது நம்பிக்கை.
காணும் பொங்கலன்று பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெறும். உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், கோலப்போட்டி, கபடி போன்றவை. இந்த நாளில் தான் ஜல்லிக்கட்டு போட்டியும் நடைபெறும். இவ்வாறாக மகிழ்ச்சியாக விளையாடி பொங்கல் விழாவை சிறப்பாக முடிப்பார்கள்.