பொங்கல் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சர்க்கரை பொங்கல் மற்றும் கரும்பு. பொங்கலுக்கு கரும்பு முக்கியமானது.
செங்கரும்பு மற்றும் நாட்டு கரும்பு வைத்து சூரியன் மற்றும் மாடுகளை வணங்குவார்கள்.
கரும்பை சுவைக்காமல் பொங்கல் பண்டிகையை யாரும் கொண்டாடுவதில்லை.
பொங்கல் வைக்கும்போது கரும்பை பொங்கல் பானைக்கு அருகில் வைத்து வழிபடுவார்கள்
கரும்பு ஏன் பொங்கலுக்கு இன்றியமையாததாக இருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
கரும்பை சுவைப்பதில் ஒரு தத்துவம் அடங்கியுள்ளது, அது என்னவென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
கரும்பின் எல்லாப் பகுதியும் இனிப்பாக இருப்பதில்லை. நுனிக் கரும்பு லேசான இனிப்புடன் அதிக அளவில் உப்புக் கரிக்கும், நடுக்கரும்பு கொஞ்சம் இனிப்பாக இருக்கும்,
ஆனால், அடிக் கரும்புதான் நன்றாக இனிப்பாக இருக்கும்.
வாழ்க்கையில் அனைவரும் முன்னேற கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். கடின உழைப்பு நுனிக்கரும்பை போன்றது ஆரம்பத்தில் இனிமை தராது.
ஆனால், கடினமாக உழைத்தால் போகப்போக அடிக் கரும்பின் இனிப்பைப் போன்று வெற்றியை பெறலாம்.
கரும்பின் வெளிப்புறம் கடினமாகவும், கரடுமுரடாக மற்றும் முட்கள் கொண்டதாக இருக்கும். இந்த கரும்பை உடைத்து சுவைப்பது கொஞ்சம் சிரமம் தான்.
ஆனால், அதை செய்யும் போது தான் இனிமையான கரும்பு சாறு கிடைக்கும்.
வாழ்க்கையில் எத்தனை கடுமையான பிரச்சனைகள் வந்தாலும் அவற்றைக் கடந்து செல்ல வேண்டும்.
அந்தக் கரடுமுரடான பாதையை கடந்து சென்றால்தான் இனிமையான வாழ்க்கையை பெற முடியும். இவையே கரும்பு சொல்லும் தத்துவம்.