Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

27 ஆண்டுகள் சிறை.. 171 கோடி அபராதம்.. கோவை கோர்ட் அதிரடி தீர்ப்பு!!

Sekar August 26, 2022 & 15:59 [IST]
27 ஆண்டுகள் சிறை.. 171 கோடி அபராதம்.. கோவை கோர்ட் அதிரடி தீர்ப்பு!!Representative Image.

பாசி என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.930 கோடி மோசடி செய்த வழக்கில் இருவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.171.74 கோடி அபராதமும் விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

திருப்பூரில், கடந்த 2011இல் செயல்பட்டு வந்த பாசி டிரேடிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற ஆன்லைன் நிதி நிறுவனம், அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை காட்டி பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்தனர். ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றினர். 

இது குறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில், பின்னர் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கையில், மொத்தம் 58,571 பேரிடம், சுமார் 930 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அசாமில் தலைமறைவாக இருந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் மோகன்ராஜ், அவரது தந்தை கதிரவன் மற்றும் கமலவள்ளி ஆகியோர், சிபிஐயால் 2011இல் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

2013 பிப்ரவரியில் வழக்கில் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக சாட்சி விசாரணை நடந்து வந்தது. கோவையிலுள்ள டான்பிட் சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட இருந்தது. 

இதற்கிடையே, முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க தயாராக இருப்பதால், தீர்ப்பளிக்க தடை விதிக்க கோரி, மோகன்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த பிப்ரவரியில், இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இடைக்கால தடை விதித்தது. எனினும் சிபிஐ மேலுமுறையீடு செய்ததை அடுத்து , தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து, கோவை டான்பிட் கோர்ட் நீதிபதி ரவி இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். நீதிபதி ரவி தனது தீர்ப்பில், "மோகன்ராஜ் மற்றும் கமலவள்ளி ஆகிய இருவருக்கும் தலா 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 171.74 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. 

வழக்கு விசாரணையின்போது மொத்தம் 1,402 பேரின் சாட்சி விசாரணை மட்டுமே கோர்ட்டில் சமர்பிக்கப்பட்டது. எனவே, அபராத தொகையை சாட்சி விசாரணை அளித்தவர்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும். மொத்தம் 58,000க்கும் மேற்பட்டவர்களிடம் 930 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது.

ஆனால் மற்றவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிபிஐ விசாரிக்கவில்லை. எனவே, ஏற்கனவே சாட்சி அளித்தவர்களை தவிர்த்து மற்றவர்கள் புகார் கொடுக்க வரும் பட்சத்தில், அதனையும் சிபிஐ விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும்." என உத்தரவிட்டார். 

குற்றம் சாட்டப்பட்டவர்களில் மற்றொருவரான மோகன்ராஜின் தந்தை கதிரவன் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்