Nandhinipriya Ganeshan February 17, 2023
இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் நடித்து வெளியான படம் 'பகாசூரன்'. இப்படத்தை பழைய வண்ணாரப்பேட்டை, ருத்ரதாண்டவம், திரௌபதி என பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் மோகன்.ஜி இயக்கியுள்ளார். இப்படத்தில் சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். நடராஜ், ராதாரவி, ராஜன், மன்சூர் அலி கான், தர்க்ஷ பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். கதையில் தன்னுடைய அண்ணன் மகள் மர்மமான முறையில் தற்கொலையை செய்துக்கொள்ள அதற்கான காரணத்தை தேடுகிறார் மேஜர் நட்டி. அந்த காரணத்தை கண்டு மிரண்டுபோன நட்டி இதேபோன்று பாதிக்கப்பட்ட பெண்களை மீட்க அவர்களின் தந்தையை தேடி அழைகிறார். அதே சமயம் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட தனது மகளின் இறப்பிற்கு காரணமானவர்களை பழிவாங்கும், பீமராசுவாக வரும் இயக்குனர் செல்வராகவன் இருவரும் சந்திக்கும் புள்ளியே பகாசுரன் திரைப்படம். படத்தில் பின்னணி இசை பிரமாதமாக கொடுத்திருக்கிறார் சாம் சி.எஸ். ஆனால், படத்தின் முதலில் வரும் பாடலை தவிர மற்றவை அனைத்தும் ரசிக்கும்படியாக இல்லை. தன்னுடைய முந்தைய படங்களை விட சிறப்பான படத்தையே கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் மோகன்.ஜி. கதை சரியாக இருந்தாலும் படத்தில் வரும் வசனங்கள் ஆங்காங்கே சரியாக இல்லை. பெண்களை பாதுகாக்க வேண்டும் என்றும் சொல்லும் மோகன்.ஜி படத்தில் ஆபாசமான நடனம் பெரிய குறையாக இருக்கிறது. பிற்போக்கான வசனங்கள் இருந்தாலும் படத்தின் முதல் பாதி பரவாயில்லை, ஆனால் இரண்டாம் பாதியில் பாலியல் தொழிலுக்கு ஆதரவாக இருப்பது காதல் என்பது போல சித்தரித்த விதம் சரியாக இல்லை. படத்தில் தந்தை மகள் பாசம் பாடல் இடம்பெற்றிருக்கிறது. பெண்களை ஆபாசமாக படமெடுத்து மிரட்டுபவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்காமல் பெண்கள் சரியாக இருந்தால் இது நடக்காது என வெளிப்படையாக சுட்டிக்காட்டியிருக்கிறார் மோகன்.ஜி. அதேபோல, படத்தின் பல இடங்களில் லாஜிக் குறைபாடுகள் இடம்பெற்றுள்ளன. இருந்தாலும் செல்வராகவனின் நடிப்பு பிரமாதம்.
Nandhinipriya Ganeshan February 17, 2023
தெலுங்கு திரைப்பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரகனி, கென் கருணாஸ், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வாத்தி'. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஒரு சாதாரண ஆள் மக்களுக்கு ஆதராவாக நின்று பெரிய ஹீரோவாக மாறும் கதைக்கு எப்போதுமே வரவேற்பு அதிகமாகவே இருக்கும். தனுஷின் வாத்தி படமும் அப்படிபட்ட கதையை கொண்டது தான்.
Gowthami Subramani February 04, 2023
தமிழ் சினிமாவில் சுவாரஸ்யங்களும், விறுவிறுப்பும் நிறைந்த படங்கள் ரசிகர்களால் அதிகம் விரும்புபவையே. அதன் படியே, கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மாநகரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும், இந்த மாநகரம் படமே நடிகர் சந்தீப் கிஷான் அவர்களைப் பிரபலமடையச் செய்தது.
Nandhinipriya Ganeshan February 04, 2023
ஜாதிய தீண்டாமை, பாலியல் வன்கொடுமை, அப்பா-மகள் பாசம் எனப் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக வெளி வந்திருக்கும் படம் 'பொம்மை நாயகி'. இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் யோகி பாபு நாயகனாக நடித்திருக்கிறார். குழந்தை கதாபாத்திரத்தில் ஸ்ரீமதி நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஷான் இயக்கியுள்ளார். கடலூர் அருகே உள்ள கிராமத்தில் மனைவி, மகளுடன் வாழ்ந்து வருகிறார் வேலு(யோகி பாபு). இவர் கடலூரில் ஒரு டீக்கடையில் வேலைபார்த்து வருபவர். மேலும், யோகி பாபுவின் தாய் இரண்டாம் தாரம் என்பதாலும், அவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், சொந்த அண்ணனாலும், சொந்த ஊர்மக்களாலும் யோகிபாபு பாகுபாட்டுடன் நடத்தப்படுகிறார்.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ளது பதான் திரைப்படம். இந்த படம் புக்கிங் ஓபன் ஆன நிலையிலேயே பல கோடி ரூபாய் வசூலை பிரித்து மேய்ந்துள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பிறகான ஷாருக்கானின் திரை அவதாரம் இது என்பதாலும் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிப்பதாலும் வெறித்தனாமாக புக்கிங் செய்துள்ளனர் ரசிகர்கள். ஹிந்தி திரையரங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய ரசிகர்களும் படத்துக்காக மிகப் பெரிய வரவேற்பைத் தந்திருக்கின்றனர். கடந்த 2018ம் ஆண்டு ஷாருக் நடிப்பில் வெளியான ஜீரோ திரைப்படம் மிகப் பெரிய தோல்விப் படமாக அவரது சினிமா வாழ்க்கையில் அமைந்தது. அதன்பிறகு நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து கொடுக்கவேண்டும் என அவர் தாமதம் செய்தது, கொரோனா உள்ளிட்ட பிரச்னைகளால் 4 ஆண்டுகள் கழித்து இந்த படம் வெளியாகியிருக்கிறது. இதே ஆண்டில் இன்னும் இரண்டு படங்கள் ரிலீசாக இருக்கின்றன. உலகம் முழுக்க 7500 திரையரங்குகளில் ஷாருக்கான் திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனால் முதல் காட்சியிலேயே கோடிகளில் பல மடங்காக வசூல் பெருகிக் கொண்டிருக்கும். அத்துடன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி திரைகளிலும் பெரிய படங்கள் எதுவும் வரவில்லை என்பதால் சரியான நேரத்தில் திட்டமிட்டு இந்த படத்தை ரிலீஸ் செய்துள்ளனர். கேஜிஎஃப் 2 படத்தை எப்படி பாராட்டினார்களோ அதைவிட இரு மடங்கு இருப்பதாக படத்தை பிரம்மித்து கூறி வருகின்றனர் ரசிகர்கள். ஷாருக்கானின் எண்ட்ரியே வெறித்தனமாக இருக்கிறது. தீபிகா, ஜான் ஆப்ரஹாம் நடிப்பும் வேறு லெவலில் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.
சின்ன வயதிலிருந்தே சினிமா மீது மோகம் கொண்டு அதில் கைதேர்ந்த கலைஞனாக ஆகிவிட வேண்டும் என ஆசைப் படும் கதாநாயகன். அதற்காக என்ன என்ன செய்கிறார் என்பதுதான் கதை. படத்தின் கதைக்களம் 1952ல் ஆரம்பிக்கிறது. கதாநாயகன் பெயர் சாமி ஃபேபல்மேன். சிறு வயதில் இவரை இவரது பெற்றோர் சினிமாவுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அதுதான் அவர் தன் வாழ்க்கையில் பார்க்கின்ற முதல் படம். படத்தின் முக்கியமான காட்சியில் அதிவேகமாக வரும் ரயில் அங்கு ரயில்வே கிராஸிங்கில் மாட்டிக் கொண்ட காரை அடித்து தூக்கி எறிவது போன்ற ஸ்டண்ட் சீக்குவன்ஸை பார்த்து மிகவும் பரவசமடைகிறார். இந்த சீன் எப்படி உருவாக்கியிருப்பாங்க என யோசிக்க ஆரம்பித்து சினிமா மீது காதலை வளர்த்துக் கொள்கிறார். முதல் முறை படத்துக்கு சென்றவரை அப்பாவும் அம்மாவும் படம் எப்படி இருக்கு? இந்த ஃபீல் எப்படி இருக்கு என கேட்கிறார்கள். அதற்கு அவரிடம் பதில் இல்லை வாயடைத்துப் போய்விட்டார் கதாநாயகன். ஆனால் வீடு போய் சேர்ந்ததும் தனக்கு பொம்மை காரும் டிரெய்னும் வேணும் என அடம்பிடிக்கிறார். அந்த காட்சியை தான் மீண்டும் உருவாக்கப்போவதாக கூறுகிறார். அப்பாவுடைய கேமரா ஒன்றில் இதை படம்பிடிக்க திட்டமிடுகின்றனர். இப்படியாக சினிமாவை கற்றுக் கொள்ள முயற்சிக்கிறார் ஹீரோ. அப்பாவுக்கு நியூஜெர்ஸியிலிருந்து அரிசோனாவுக்கு பணி இட மாறுதல் கிடைக்கிறது. இதனிடையே கதையிலும் மாற்றம் நிகழ்கிறது. சிறுவனான ஹீரோ இளைஞனாக மாறுகிறார். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி ஷார்ட் பிலிம்ஸ் எடுக்கிறார். தன் சினிமா கனவை நினைவாக்க மீண்டும் மீண்டும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இப்படி மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தேடித் தந்ததா? அவர் சினிமா உலகில் நல்ல பெயரை எடுத்தாரா? தான் கொண்ட லட்சியக் கனவை ஜெயித்தாரா என்பதுதான் படத்தின் கதை.
ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் வெளியானது. அதிகாலை 1 மணிக்கே படத்தை திரையிட்டுள்ள நிலையிலும் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து உற்சாகம் மிகுந்து காணப்படுகின்றனர். மிகப் பெரிய வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கும் அஜித்குமார், நேரடியாக விஜய்யுடன் மோத தயாரான படம் துணிவு. கண்டென்ட் மீதுள்ள நம்பிக்கையால் நேருக்கு நேர் மோதி ஜெயிக்க முடியும் என்கிற நம்பிக்கை இருப்பதனால்தான் இந்த படத்தை ஒரேநாளில் ரிலீஸ் செய்ய சம்மதித்திருக்கிறார். நிச்சயம் வாரிசு படத்தை விட துணிவு கதை சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. படத்தை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ஆரம்பம் முதலே டிவிட்டரில் டிவீட் செய்து இதனை அறிவித்து வருகின்றனர். அஜித்குமாரின் அறிமுக காட்சியில் விசில் சத்தம் காதைப் பிளக்க ஒரு சில நிமிடங்களுக்கு காதில் எந்த வசனமும் விழாமலே இருக்கிறது. ரசிகர்களுக்கான படம் முதல் பாதி என இயக்குநர் ஹெச் வினோத் சொன்ன மாதிரியேதான் துவங்கியிருக்கிறது. படம் துவங்கி சில நிமிடங்களிலேயே அமர்க்களமான காட்சிகளால் ரசிகர்கள் உற்சாகத்திலேயே மிதந்து வருகின்றனர்.
தில் ராஜூ தயாரிப்பில் வம்சி படிப்பள்ளி இயக்கியுள்ள படம் வாரிசு. தளபதி விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இவர்களுடன் குஷ்பு, சரத்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படம் அறிவிக்கப்பட்ட போது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லாமலேயே இருந்தது. ஆனால் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மூலம் கொஞ்சம் ரசிகர்களை கவர்ந்தனர். ஆனாலும் படம் பெரிய அளவில் பிரபலம் ஆகவில்லை. வழக்கமான விஜய் படங்கள் போல இருக்காது என்றே பலரும் நினைத்தனர். இதனால் தளபதி 67 படத்தை பார்த்துக் கொள்ளலாம் என முடிவுக்கு வந்தனர். ஆனால், ரஞ்சிதமே பாடல் வெளியாகி பட்டித் தொட்டியெல்லாம் பிரபலமாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாடும் பாட்டாக ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து தீ தளபதி, சோல் ஆஃப் வாரிசு என பாடல்கள் வெளியாகி பட்டையைக் கிளப்பியது. பின் இசை வெளியீட்டு விழாவில் அத்தனை பாடல்களும் வெளியானது. இதன்மூலம் ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் படம் ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து தொடர்ந்து விளம்பரங்கள் மூலம் ரசிகர்களின் மனதை தொட பல்வேறு வகையான வித்தைகளை கையாண்டது படக்குழு. ரயில், பேருந்து, விமானம் என விளம்பரங்கள் பட்டையைக் கிளப்பியது. இப்படியான பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று அதிகாலை 4 மணிக்கு வாரிசு திரைப்படம் வெளியாகி இருக்கிறது. படத்தை பார்த்தவர்கள் படம் வேறு லெவலில் இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அஜித், விஜய் சேர்ந்து நடித்த ஒரே படமான ராஜாவின் பார்வையிலே படம் இன்று மீண்டும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த படம் குறித்து ஒரு சிறு பார்வை. கதை ராஜா ஒரு ஏழை குடும்பத்து இளைஞன். நன்கு படித்தால் கஷ்டங்கள் நீங்கிவிடும் நல்ல வேலை கிடைத்தால் சம்பாத்யம் உயர்ந்து குடும்ப கஷ்டம் குறையும் என அதை நோக்கியே ஓடும் ஒரு குடும்பம். கௌரி எனும் பணக்கார குடும்பத்து இளம்பெண் ராஜாவைப் பார்த்து காதலில் விழுகிறாள். அவனை எப்படியாவது அடைய வேண்டும் என உறுதியாக இருக்கிறாள். ஆனால் ராஜாவோ அவளைக் கண்டு ஓடுகிறான். விலகி நிற்கிறான். எதனால் இப்படி செய்கிறான் ராஜாவுக்கு ஏன் தன்னை பிடிக்கவில்லை என்பது தனக்கு நிச்சயம் தெரிய வேண்டும் என நினைக்கிறாள் கௌரி. ராஜா தன்னுடைய நண்பன் சந்துருவின் கதையைக் கூறுகிறான். அவன் சாந்தி எனும் ஒரு பெண்ணை காதலித்திருக்கிறான். ஆனால் இந்த காதல் சக்ஸஸ் ஆகவில்லை. இதனால் மனமுடைந்த சந்துரு மரணத்தைத் தேடிக் கொண்டான். அதிலிருந்து இவன் காதலை வெறுக்கிறான். காதல் என்றாலே மரணத்தில் முடியும் என நினைக்கிறான். அதன்பிறகு ஒரு கட்டத்தில் ராஜாவுக்கு கௌரியை பிடித்துப் போக அவர்கள் காதலிக்கிறார்கள். இந்த விசயம் கிராமத்துக்கு தெரிய அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனை எதிர் கொண்டு ராஜா - கௌரி இருவரும் சேர்ந்தார்களா இல்லையா என்பதே கதை. ராஜா கதாபாத்திரத்தில் விஜய்யும், சந்துரு கதாபாத்திரத்தில் அஜித்தும் நடித்திருப்பார்கள். இந்திரஜா கௌரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அஜித் காதலிக்கும் பெண்ணாக காயத்ரி நடித்திருப்பார். இவர் ரோஜா சீரியலில் வரும் மருமகள் கேரக்டர். வடிவேலு, கனகராஜ், வடிவுகரசி, சத்யப்பிரியா, சாருஹாசன், குமரிமுத்து உள்ளிட்ட இன்னும் பலர் நடித்திருந்த இந்த படம் கடந்த 1995ம் ஆண்டு வெளியானது.
முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு கொண்டு வரப்படும் தாயை இழந்த ரகு, அம்மு என்ற இரு யானைக்குட்டிகளை பாசத்தை காட்டி வளர்த்து வருகிறார்கள் பொம்மன் - பெல்லி இருவரும். யானைக்குட்டிகள் ஏன் ஆதரவற்ற நிலையில் இதுபோன்ற முகாம்களுக்கு கொண்டு வரப்படுகின்றன. வயதான பொம்மன்- பெல்லி தம்பதிக்கு இடையிலான காதல், யானைகள் மீது அவர்கள் காட்டும் பாசம். கடைசியில் என்ன ஆகின்றது என்பதை அழகாய் காட்சிப்படுத்தியுள்ளனர். காட்டில் அணில் சாப்பிடுவது, ஆந்தை எட்டி பார்க்கும் , ஓணான் படுத்திருக்கும் காட்சி என படத்தின் ஆரம்பத்திலேயே நம்மை கவரும் வகையில் ஒளிப்பதிவு செய்திருப்பது நம்மை மேற்கொண்டு படத்தை காண ஆர்வத்தை தூண்டுகிறது. காட்டை மிக அழகான காட்சிகளுடன் சுற்றிக் காட்டுகிறார்கள். யானை ரகுவின் செல்ல சேட்டைகளையும் படமாக்கித் தந்திருக்கிறார்கள். குடிசையிலிருந்து வந்து குளிக்கும் காட்சி, புல் சாப்பிடும் காட்சி என அனைத்தும் நமக்கு அருகிலிருந்து பார்க்கும் உணர்வைத் தருகிறது. இன்னும் பல சுவாரஸ்யமான காட்சிகளும் படத்தில் இருக்கின்றன. அனைத்தையும் கூறிவிட்டால் நீங்களே கற்பனை செய்துகொண்டு அதனை பார்க்கும் அனுபவத்தை இழந்துவிடுவீர்கள். படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த திரைப்படம் இப்போது ஆஸ்கர் ரேஸில் இருக்கிறது.