Wed ,May 15, 2024

சென்செக்ஸ் 72,987.03
-117.58sensex(-0.16%)
நிஃப்டி22,200.55
-17.30sensex(-0.08%)
USD
81.57

கோயம்புத்தூர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதுங்கி இருந்த பாம்பு - பொதுமக்கள் அதிர்ச்சி!

Baskaran. S July 21, 2023

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் பின்புறம் வாகன நிறுத்துமிடத்தில் உள்ள அறையில் பதுங்கியிருந்த சுமார் 5 அடி நீள சாரைப் பாம்பு தீயணைப்பு மற்றும் மீட்புபணி துறையினரால் பிடிக்கப்பட்டது.   கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். பொதுமக்கள், அலுவலர்கள், மற்றும் பணியாளர்களுக்கென வாகன நிறுத்துமிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் பின்புறம் உள்ளது. அதே இடத்தில் ஒருபுறம் புதர்களும் மண்டி கிடக்கின்றன. எனவே அடிக்கடி இங்கு பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தென்படுகின்றன.   இந்நிலையில் வானக நிறுத்துமிடத்தில் உள்ள அறையில் சுமார் 5 அடி நீள சாரை பாம்பு பதுங்கி இருந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள், ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களிடம் தெரிவித்து பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த தீயணைப்பு மட்டும் மீட்புப்பணி துறையினர் 5 நீள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து சென்றனர்.   மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வரும் நிலையில் அடிக்கடி இப்பகுதியில் பாம்புகள், விஷ ஜந்துக்கள் தென்படுவது அதிர்ச்சியளிப்பதாகவும் மாவட்ட நிர்வாகம், அலுவலக வளாகத்திற்குள் மண்டிக்கிடக்கும் தேவையற்ற செடிகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கோவை மாவட்ட ஆட்சியருக்கு மாமன்னன் படத்தின் டிக்கெட் அனுப்பிய பாமக நிர்வாகி!

Selvarani July 19, 2023

கோவை மாவட்ட ஆட்சியர் மனுவை அமர்ந்து கொண்டே வாங்கியதாகவும் மனு அளிக்க வந்த பொதுமக்கள் நின்று கொண்டே மனு அளிப்பதாகவும், இது மாவட்ட ஆட்சியர் மேலானவர் போலவும் மக்கள் தாழ்வானவர் போலவும் இருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியருக்கு மாமன்னன் திரைப்படத்தின் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்து அனுப்பியதாக பாமக நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.      கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை நாட்களில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் அவர்களது மனுக்களை நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்குவர். இந்நிலையில் கடந்த வாரம் திங்கட்கிழமை People Of Coimbatore என்ற அமைப்பினர் கனிம வளக்கொள்ளை குறித்து மனு அளித்தனர். அப்போது அந்த அமைப்பில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தார். அதில், மாவட்ட ஆட்சியர் மனுவை அமர்ந்து கொண்டே வாங்கியதாகவும் மனு அளிக்க வந்த பொதுமக்கள் நின்று கொண்டே மனு அளிப்பதாகவும், இது மாவட்ட ஆட்சியர் மேலானவர் போலவும் மக்கள் தாழ்வானவர் போலவும் இருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியருக்கு அண்மையில் வெளியான மாமன்னன் திரைப்படத்தின் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்து அனுப்பியதாக அசோக் ஸ்ரீநிதி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இது குறித்தான அவரது ட்விட்டர் பதிவில், " நடிகர் உதயநிதி நடித்த மாமன்னன் படத்திற்கு டிக்கெட் உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன். படத்தின் மையக்கருத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். குறைதீர்க்கும் முகாம் அன்று எங்கள் புகாரை பதிவு செய்ய மணி கணக்கில் நின்று ரசீது பெற வேண்டும். பின்பு ரசீதை வைத்துக்கொண்டு முகாமின் அறை வராண்டாவில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டும். பின்பு உங்களை சந்திக்கும் போது நீங்கள் மேடையில் உட்கார்ந்து இருப்பீர்கள். நாங்கள் உங்கள் முன் நின்று பேச வேண்டும். உங்களை நாங்கள் அன்னார்ந்து பார்க்க வேண்டும்.  நீங்கள் எங்களுக்கு கீழே பார்ப்பது போல மேசை அமைக்கப்பட்டு இருக்கும். உங்கள் செயல் நீங்கள் எங்களை விட மேலானவர் போலவும் உங்களை விட நாங்கள்(மக்கள்) தாழ்வானார் போலவும் இருக்கும். நாங்கள் ஏன் உங்கள் முன்பு நிற்க வேண்டும். நீங்கள் வெறும் அரசு ஊழியர் தான். மக்கள் பிரச்சனையை தீர்ப்பது உங்கள் கடமை. மேடையில் இடமிருந்தும் மக்களை ஏன் நிற்க வைக்க வேண்டும். உங்களின் முன்பு நாங்கள் உட்கார கூடாதா? உடனடியாக இதை சரி செய்யவும் இல்லை என்றால் அடுத்த முறை நான் நாற்காலியுடன் தான் வருவேன் என பதிவிட்டு தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் மக்களை தவறாக நடத்த வேண்டாம் என தமிழக முதல்வரையும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

21 குண்டுகள் முழங்க டிஐஜி விஜயகுமார் உடல் தகனம் - இறுதி மரியாதை செலுத்திய தமிழக டிஜிபி சங்கர்ஜிவால்

Saraswathi July 07, 2023

கோவையில் தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமாரின் உடல், அவரது சொந்த ஊரான தேனியில் 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. கோவை சரக டிஐஜியாக பணியாற்றிவந்த விஜயகுமார், இன்று காலை தனது பாதுகாவலரின் துப்பாக்கியை வாங்கி, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த விஜயகுமாரின் உடலுக்கு ஏடிஜிபி சங்கர் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து, டிஐஜி விஜயகுமாரின் உடல், ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான தேனிக்கு கொண்டுசெல்லப்பட்டது. 

கோவைக்கு விரைவில் மெட்ரோ - தீவிர ஆலோசனையில் நிர்வாகம்!

Abhinesh A.R July 01, 2023

மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது எனவும் வரும் ஜூலை 15ஆம் தேதி திட்ட அறிக்கை அரசிடம் சமர்பிக்கப்படும் எனவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்.. | Coimbatore Power Shutdown Today

Nandhinipriya Ganeshan June 25, 2023

மின்தடை அறிவிப்பு மாதத்திற்கு ஒரு முறை, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அறிவிக்கப்படும். இது எல்லா இடங்களிலும் வெவ்வேறு மணி நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலும், காலை 9 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணி வரைக்குள் பல்வேறு இடங்களில் மின் இணைப்பு ஏற்படும். மின்சார வாரியத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு, மாதந்தோறும் மின்தடை, ஒவ்வொரு மாதமும், ஒரு குறிப்பிட்ட தேதியில் துண்டிக்கப்படுகிறது. இந்த குறிப்பிடப்பட்ட தினத்தில், மின்சாரம் சம்பந்தப்பட்ட வேலைகள் அனைத்தும் திருத்தம் செய்யப்படும். மேலும், இந்த நேரங்களில் பராமரிப்பு பணிகள் செய்யப்படுகின்றன. அதே நேரத்தில், மோசமான வானிலை, அதிக மழை, வெள்ளம், உள்ளிட்ட வேறு சில காரணங்களுக்காகவும் மின்தடை ஏற்படலாம். அதன் படி, குறிப்பிட்ட நேரங்களில் இவை சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் சீராகி வழங்கப்படும். மேலும், அதிகபட்சமாக 2 அல்லது 3 மணி நேரத்திலும் மின் தடை ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ள மின்சாரத் துறையை அணுகலாம். இந்தப் பதிவில், ஒவ்வொரு மாதத்திற்கும், கோயம்புத்தூர் மாநகரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில், எந்தெந்த இடங்களில், எந்தெந்த நாள்களில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது என்பதை இந்தப் பதிவில் காணலாம். கோயம்புத்தூர் மின்தடை பகுதிகள் ஜூலை 2023 பராமரிப்புகள் பணிகள் காரணமாக, கீழே கொடுக்கப்பட்ட பகுதிகள் மற்றும் குறிப்பிடப்பட்ட நாள்களில் காலை 09.00 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிவடைந்தால் மதியம் 4 மணிக்கு முன் மின் விநியோகம் தொடங்கப்படும். சில நேரங்களில், நீட்டிப்பு பணிகள் மாலை 6 மணி வரை நீட்டிக்கப்படலாம். விரைவில் அப்டேட் செய்யப்படும்…. குறிப்பு: இதில் கொடுக்கப்பட்ட விவரங்கள், பல்வேறு இணையதளங்களில் இருந்து பெறப்பட்டதாகும். மின்தடை குறித்த மேலும் சில தகவல்களைத் தெரிந்து கொள்ள அந்தந்த பகுதியின் மின்வாரியங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

கோவையை சேர்ந்த மாணவர் லண்டனில் உயிரிழப்பு! - விசாரணை

Chandrasekar June 25, 2023

கோவை அருகே நரசிம்ம நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த மாணவர் லண்டனில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் நரசிம்ம நாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள சென்ட்ரல் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் ஜீவநாத். இவர் கடந்தாண்டு இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு படிப்புக்காக சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை ஜீவநாத்  இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் கால்வாயில் சடலமாக மீட்க பட்டுள்ளார். இந்த தகவல் ஜீவநாத் பெற்றோர்களுக்கு தெரியவந்ததை அடுத்து சம்பவத்தை கேள்விபட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா திடீர் ராஜினாமா..! - கனிமொழி எம்.பி. சந்திப்பு காரணமா?

Saraswathi June 23, 2023

கோவையின் முதல் தனியார் பெண் பேருந்து ஓட்டுநராக பிரபலமடைந்த ஷர்மிளா, இன்று  திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  திமுக எம்.பி. கனிமொழி, பேருந்தில் ஷர்மிளாவை சந்தித்துப் பேசிய ஒரு சில மணி நேரத்தில் ஷர்மிளா பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் தனியார் பேருந்தின் ஓட்டுநராக இளம்பெண் ஷர்மிளா அண்மையில் பணியில் சேர்ந்தார். இதையடுத்து, அவர் குறித்த செய்திகள் சமூகவலைதளங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகி மிகவும் பிரபலமடைந்தார். இதைத் தொடர்ந்து, கோவை  தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துவந்தனர்.   இந்நிலையில், இன்று திமுக எம்.பி. கனிமொழி, ஷர்மிளாவை பேருந்தில் ஏறி பயணித்தபடியே சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். இந்த சந்திப்பு நிகழ்ந்த ஒரு சில மணி நேரத்தில் பேருந்து ஓட்டுநர் பணியிலிருந்து ஷர்மிளா நீக்கப்பட்டார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஷர்மிளா, திமுக எம்.பி.கனிமொழி, இன்று தன்னை சந்திக்க வருவதை முன்கூட்டியே பேருந்து உரிமையாளரிடம் தெரிவித்துவிட்டதாகவும், அப்போது அவர் எதுவும் பேசாமல் இருந்துவிட்டு, தற்போது விளம்பரத்திற்காக ஆட்களை பேருந்தில் ஏற்றுவதாகக் குற்றம்சாட்டி, தன்னை பேருந்து உரிமையாளர் பணிநீக்கம் செய்திருப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.  திமுக எம்.பி கனிமொழி சந்திப்புக்குபின், ஷர்மிளா பணி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னணி குறித்த தெளிவாக தகவல்கள் இதுவரை வெளியாகவிலை. இருப்பினும், இந்த சம்பவம் கோவையில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாணவி தற்கொலை வழக்கு - ஆசிரியர் மனைவிக்கு நிபந்தனை ஜாமீன்

Baskaran June 16, 2023

கோவையில் பாலியல் துன்புறுத்தலால் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைதான அர்ச்சனாவிற்கு கோவை போக்சோ நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்திரவிட்டுள்ளது. கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி 2021ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்த மிதுன் சக்கரவர்த்தி என்பவர் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் காரணமாக மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்தக் கடிதத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி தவிர, தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, பள்ளியின் தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன், மாணவியின் வீட்டின் அருகில் வசித்து வந்த மனோஜ் ராஜ் மற்றும் முகமது சுல்தான் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வந்தது. விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அரசு தரப்பில் மேலும் சிலரை கைது செய்யப்பட வேண்டி இருப்பதாக கூறி கடந்த மாதம் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்த நிலையில், இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் , ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் மனைவியான அர்ச்சனாவை கைது செய்தனர். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் செல்போன், காவல் துறையினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அதில் டெலிட்டாகி இருந்த ஆடியோ அனைத்தும் தொழில்நுட்ப குழுவினரால் மீட்கப்பட்டதில், பாலியல் துன்புறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவி, ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் நடவடிக்கை குறித்து அவரது மனைவியான அர்ச்சனாவிடம் தெரிவித்து இருப்பதும், தொழில் நுட்ப குழுவினரால் மீட்கப்பட்டது. பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டது,தெரிந்தும் காவல் துறையிடம் தெரிவிக்காததால் அர்ச்சனாவையும் போக்சோ சட்டத்தில் கைது செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கைதான ஆசிரியர் அர்ச்சனா சார்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதை விசாரித்த நீதிமன்றம் அர்ச்சனாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 15 நாட்களுக்கு ஒருமுறை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த வழக்கில் கைதான அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவை ரயில் நிலையம் அருகே ஆண்சடலம் மீட்பு - போலீசார் விசாரணை

Baskaran June 16, 2023

கோவை: வடகோவை ரயில்வே தண்டவாளம் அருகே கிடந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீசார் மீட்டனர். கோவை ரயில் நிலையத்தில் இருந்து வடகோவை செல்லும் ரயில்வே தண்டவாளம் அருகே போடப்பட்டிருந்த ராட்ச குழாய் உள்ளே நிர்வாண நிலையில் இறந்த ஆண் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ரயில்வே தண்டவாளம் அருகே மாநகர காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் சடலம் கண்டறியப்பட்டதால் அவர்கள் ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் ஆய்வு மேற்கொண்ட போது, குழாயின் உள்ளே நிர்வாண நிலையில் சடலம் இருந்தது தெரியவந்தது. மேலும் அவரது உடைகள் குழாய் அருகேயும், ரயில்வே மின் கம்பத்திலும் மீட்கப்பட்டது. இதையடுத்து அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த நபர் கோவை அரசு மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்று வந்த தடயங்கள் இருந்ததாகவும், கடந்த சில நாட்களாகவே அந்த நபர் இரவு நேரங்களில் அங்கு அவர் தங்கியிருந்தது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் இறந்தவர் யார்? எதற்காக வந்தார்? இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுந்தராபுரத்தில் கிடங்கு பொருட்கள் உரிமையாளருக்கு தெரியாமல் விற்பனை - 5 பேர் மீது வழக்கு

Baskaran June 16, 2023

கோவை: சுந்தராபுரத்தில் உள்ள தனியார் கிடங்கிலிருந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்களை உரிமையாளருக்கு தெரியாமல் விற்பனை செய்த 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை ராம்நகர் சரோஜினி வீதி பகுதியை சேர்ந்தவர் ஹைதர் என்பவரின் மகன் மனைவி ரஷிதா (46). இவரும் அவரது நண்பரும் சேர்ந்து கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் பவர் டூல்ஸ் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இதற்கான கிடங்கு சுந்தராபுரம் மதுக்கரை சாலையில் அமைந்துள்ளது. இவர்களுக்கு சொந்தமான மூன்று கடைகள் கோவை நஞ்சப்பா சாலை பகுதியில் அமைந்துள்ளது . கடந்த சில மாதங்களாக கிடங்கு இருப்பில் உள்ள உதிரி பாகங்களுக்கும், கடையில் உள்ள உதிரி பாகங்களின் பட்டியலுக்கும் நிறைய வித்தியாசம் இருந்து வந்தது. இந்த சமயத்தில் நிறுவனத்தில் வேலை பார்த்த நந்தினி மற்றும் சிராஜ் ஆகியோர் வேலையிலிருந்து நின்று வேறு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தனர். தொடர்ந்து கிடங்கிலிருந்த பொருட்கள் கணக்கு குறைவாக இருந்ததால் ரக்சிதா ஏற்கனவே வேலை செய்த ஊழியர்களான நந்தினி மற்றும் சிராஜ் ஆகியோரை அழைத்துள்ளார். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் போலி ஆவணங்கள் மூலம் கிடங்கிலிருந்த பொருள்களை மற்றும் உதிரிபாகங்களை எடுத்து வேறு நிறுவனத்திற்கு விற்றது தெரியவந்தது. இதன் மூலம் சுமார் ரூ.25 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரக்சிதா போத்தனூர் போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வாங்கிய பாத்திமா, ரோசட் பொருட்களை விற்ற நந்தினி, சிராஜ் ,ஜாகீர் ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.