Sat ,Jul 20, 2024

சென்செக்ஸ் 80,604.65
-738.81sensex(-0.91%)
நிஃப்டி24,530.90
-269.95sensex(-1.09%)
USD
81.57

கதைகள்

27 நட்சத்திரங்களுக்கு உகந்த மரங்கள்...! | 27 Natchathiram Trees in Tamil

Priyanka Hochumin August 31, 2023

மொத்தம் இருக்கும் 27 நட்சத்திரங்களுக்கு ஒவ்வொரு தெய்வீக மரம் உகந்ததாக இருக்கும். அவற்றுள் எந்தந்த மரம், எந்தந்த ராசிக்கு என்பதை பற்றி பார்க்கலாம்.

கருங்காலி மாலை இவங்கல்லாம் அணிய கூடாது...மீறினா என்ன நடக்கும் தெரியுமா? | Karungali Malai Uses in Tamil

Priyanka Hochumin August 31, 2023

பெற்றோர்கள் சொல்வதை கூட கேட்காமல் இருப்பார்கள், ஆனால் ஒருவருக்கு பிடித்த பிரபலங்கள் என்ன செய்தலும் அதை அப்படியே திரும்ப செய்யும் கோஷ்டிகள் நிறைய இருக்கின்றனர். அந்த வகையில், சமீப காலமாக தமிழ் திரையுலகின் பிரபலங்கள் பலரும் கருங்காலி மாலையை அணிந்துள்ளனர். அதனை பார்த்து தாங்களும் கருங்காலி மாலை அணிந்தால் அவர்களைப் போல் பிரபலமாகி விட்டுவோம் என்ற நம்பிக்கையில் பலரும் அணிந்து வர தொடங்கியுள்ளனர். ஆனால், நிஜமாகவே கருங்காலி மாலையை அணிந்தால் நல்லது நடக்குமா? என்பதைப் பற்றி பார்க்கலாம்.

விநாயகர் சதுர்த்தி 2023 எப்போது? பூஜை செய்ய உகந்த நேரம்.. | Vinayagar Chaturthi 2023 Date and Timings

Nandhinipriya Ganeshan August 24, 2023

இறைவழிபாட்டில் முதல் வழிபாட்டு உரியவரும், காணாபத்தியத்தின் முழுமுதற் கடவுளாக விளங்குபவர் விநாயகப் பெருமான். இவருக்கு பிள்ளையார், கணபதி, ஆனைமுகன், லம்போதரன், மூத்தோன், கந்தபூர்வசர், ஓங்காரன், பிரணவன், வேழமுகன், கஜமுகன் என் பல பெயர்கள் உள்ளன. விநாயகப் பெருமானுக்கு உரிய சிறந்த விரத நாட்களில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று. விநாயகர் சதுர்த்தி 2023 எப்போது? அனைத்து தெய்வங்களுக்கும் முதல்வனாக வழிபடும் விநாயகப் பெருமான் பிறந்த நாளையே 'விநாயகர் சதுர்த்தி' என்று ஆண்டுதோறும் ஆவணி - புரட்டாசி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளில் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் செப்டம் 18 ஆம் தேதி திங்கட்கிழமையும், வடமாநிலங்களில் செப்டம்பர் 19 ஆம் தேதி செவ்வாய் கிழமையும் கொண்டாடப்படுகிறது. பூஜைக்கு உகந்த நேரம் என்ன? இந்து நாட்காட்டியின்படி, விநாயக சதுர்த்தி 2023 செப்டம்பர் 18, திங்கட்கிழமை மதியம் 12:39 மணிக்குத் தொடங்கி செப்டம்பர் 19 செவ்வாய்கிழமை இரவு 8:43 மணிக்கு முடிவடையும். மேலும், விநாயகர் சதுர்த்தி பூஜை முஹுரத்தம், செப்டம்பர் 19, செவ்வாய்கிழமை காலை 11:01 மணிக்கு தொடங்கி பிற்பகல் 01:28 வரை நீடிக்கும். முக்கியமாக, விநாயகர் சதுர்த்திக்கு ஒரு நாள் முன்னதாக நிலாவை பார்ப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

செல்வ செழிப்பை தரும் வரலட்சுமி பூஜை எளிமையான முறையில் செய்வது எப்படி? உகந்த நேரம்.. | Varalakshmi 2023 Pooja Procedure in Tamil

Nandhinipriya Ganeshan August 24, 2023

ஈசனின் சொற்படி அன்னை பார்வதி திருமகள் லட்சுமி தேவியை நினைத்து விரதம் இருந்த திருநாளே இந்த வரலட்சுமி விரதமாகும். இந்த விரதம் எப்படி இருக்க வேண்டும்? அதன் பலன்கள் என்னென? மற்றும் வழிபாட்டு முறைகள் பற்றி விரிவாக இப்பதிவில் காணலாம். வரலட்சுமி விரதம் 2023 பலன்: வரலட்சுமி விரதம் என்றாலே நமக்கு தெரிந்தது பெண்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், செல்வம் செழிக்க செய்யும் வழிபாடு என்று நினைத்து கொண்டு இருப்போம். ஆனால் இந்த விரதம் எண்ணற்ற பல நன்மைகளை அளிக்கும் விரதமாகும். முக்கியமாக பதினாறு வகை செல்வங்களையும் அளிக்கும் விரதம் இந்த வரலட்சுமி ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று பின்பற்றப்படும். காலம் காலமாக நம் முன்னோர்கள் பின்பற்றி வரும் இந்த விரத முறை, முதன் முதலில் அன்னை பார்வதி தேவி திருமகளான லட்சுமி தேவிக்கு விரதம் இருந்ததால், முருக அவதாரம் தோன்றியதாக புராணக் கதைகளும் உண்டு. மிகவும் சுபிட்சமான இந்த விரதத்தை நாம் கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம் ஆகும். வரலட்சுமி விரத முறை: வரலட்சுமி நாளுக்கு முந்தின நாளே வீட்டை சுத்தம் செய்துவிட வேண்டும். பின்னர், வரலட்சுமி விரதன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜையறையில் சாமிக்கும்பிட்டு விட்டு விரதத்தை துவங்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் உணவு உட்கொள்ளக் கூடாது. தண்ணீர் குடித்துக்கொள்ளலாம். முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் இடையில் பால், பழம் சாப்பிட்டுக் கொள்ளலாம். வரலட்சுமி பூஜைக்கு தேவையான பொருட்கள்: கலசம், மஞ்சள், குங்குமம், சந்தனம், நெல், பச்சரிசி, பூ, எலுமிச்சை பழம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம் (மற்ற பழ வகைகளும் சேர்த்து கொள்ளலாம்), வாழை இலை, நோன்பு கயிறு மற்றும் தீபாராதனை பொருட்கள் (கற்பூரம், சாம்பிராணி, ஊதுபத்தி போன்றவை). வரலட்சுமி பூஜை முறை: முதலில் வீட்டில் கிழக்கு திசையில் (ஈசானி மூலையில்) ஒரு உயரமான மரபலகை வைத்துக் கொள்ளவும். பலகையின் மேல் கோலமிட்டு கொள்ளவும். அம்மனுக்கு சிவப்பு கலர் உகந்தது என்பதால், சிவப்பு துணி ஒன்றை அதை பலகையில் விரித்துவிடுங்கள். பின்னர், அந்த துணியின் மீது வீட்டில் இருக்கும் லட்சுமி தேவியின் புகைப்படத்தை வைத்துக் கொள்ளவும். அதன்பிறகு, ஒரு கிண்ணத்தில் மஞ்சள், சந்தனம் போன்றவற்றை பன்னீர் விட்டு கலக்கிக்கொள்ளவும். இப்போது சாமி படத்திற்கு மஞ்சள் குங்குமம் வைத்து, வண்ண மலர்களால் அலங்கரித்துக் கொள்ளுங்கள். இன்னொரு பலகையை அந்த படத்திற்கு முன்புறமாக வைத்து அதன்மீது கோலமிட்டு வாழை இலை வைத்து அதில் பச்சரிசி அல்லது நெல் போட்டுக்கொள்ளவும். பிறகு, மஞ்சளால் ஒரு விநாயகர் செய்து வைக்கவும். இப்போது பச்சரிசியிட்ட இலையில் ஒரு வெள்ளி அல்லது செம்பு கலசம் வைத்து, அதை மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர், கலசத்திற்குள் சிறியளவு பச்சரிசி, விரளி மஞ்சள், எலுமிச்சம்பழம், ஏலாக்காய், கிராம்பு, ஜாதிக்காய், ஒன்பது நாணயம் அல்லது ஒரு தங்க நாணயம் மற்றும் கதோள கருகுமணி போட்டுக்கொள்ளவும்.  அந்த கலசத்திற்கு சிவப்பு கலர் துணியைக் கொண்டு அலங்கரித்து கொள்ளவும். இறுதியாக மஞ்சள் பூசிய தேங்காய் மற்றும் மாவிலையைக் கலசத்தின் உச்சத்தில் வைக்க வேண்டும். இந்த தேங்காயின் மேல் நோன்பு கயிறுகளை வைத்துக்கொள்ளவும். அதன்பிறகு, உங்களால் முடிந்த நைவேத்தியம் ஒன்றையும் படைத்துக் கொள்ளுங்கள். வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய் வைத்து கொள்ளவும். விளக்கேற்றி, தீப ஆராதனை செய்து குடும்பத்தில் பெரியவர்களிடம் ஆசி பெற்று கொண்டு, அந்த நோன்பு கையிற்றை திருமணமான பெண்கள் கழுத்திலும், திருமணமாகாத பெண்கள் வலது கையில் கட்டிக் கொள்ளலாம். இந்த பூஜை காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் செய்யலாம். நீங்கள் எப்போது பூஜையை முடிக்கின்றீர்களோ அதன்பிறகு உணவருந்தி விரதத்தை முடித்துக் கொள்ளலாம். பூஜை செய்ய உகந்த நேரம்: வெள்ளிக்கிழமை அன்று 25.08.2023 அன்று காலை 09:00 மணி முதல் 10:00 மணி வரை மற்றும் மாலை 06:00 மணிக்கு மேல் பூஜை செய்து வழிபாடு செய்யலாம்.

ஓணம் பண்டிகை 2023 கொண்டாடப்படுவதற்கான காரணம் இதுதான்.. | Onam 2023 Story in Tamil

Nandhinipriya Ganeshan August 21, 2023

ஓணம் பண்டிகை கேரளா மாநிலத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. மகாபலி சக்கரவர்த்தி என்ற அரசர் பக்த பிரகலாதனின் பேரன். என்ன தான் அசுர குலத்தில் பிறந்திருந்தாலும், தர்ம செய்வதில் சக்கரவர்த்தி. மலையாள தேசம்தான் மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு வந்த பகுதியாக இருந்தது. முப்பத்து முக்கோடி தேவர்களும் அதிசயப்படும்படியும், பொறாமை கொள்ளும் வகையிலும் நல்லாட்சி செய்தார் மகாபலி. அவரின் ஆட்சியின் கீழ் நாடு செழிப்பாகவும், மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தனர். மகாபலியின் புகழ் பலதிசை எங்கும் பரவியது. யாராவது இல்லை என்று வந்து நின்றால் அவர்களுக்கு கேட்டதைக் கொடுக்கும் வள்ளல் தன்மை கொண்டவர். அவரை அசுர குரு சுக்கிராச்சாரியார் வழிநடத்தி வந்தார். இருப்பினும் மகாபலிக்கு கர்வமும் அதிகம் இருந்தது. மகாபலி உலகத் தலைமை பதவி வேண்டி ஒரு யாகம் செய்ய விரும்பினார். அந்த யாகம் நிறைவேறிவிட்டால், இந்திரனின் பதவிக்கே ஆபத்து வந்துவிடும். இதையறிந்த தேவர்கள் மகாபலி சக்கரவர்த்தியுடன் போரிட்டனர், இதில் மகாபலி வென்றார். இதனால் அச்சமடைந்த தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். தேவர்களை காப்பது தனது கடமை என கருதிய மகாவிஷ்ணு, வாமன அவதாரம் எடுத்தார். மண்ணுலகில் விஷ்ணுவின் 5வது அவதாரமாக காஸ்யப முனிவர், திதி தம்பதிக்கு மகனாக அவதரித்திருந்தார். மகாபலி சக்கரவர்த்தி தன் வேள்வி நிறைவு செய்யும் விதமாக, மக்களுக்கு தான, தர்மங்கள் செய்ய தொடங்கினார். இதில் தான தர்மங்கள் செய்து முடிக்கும் போது வாமனன் அங்கு வந்தார். வாமனனைப் பார்த்ததும், மகாபலி தாமதமாக வந்துவிட்டீர்களே. இப்போது தான் தானம் கொடுப்பதை நிறைவு செய்தேன் என்றார். அதற்கு வாமனனோ, நானோ மூன்றடி உயரம் கொண்ட சிறுவன். நான் பெரிதாக எதையும் கேட்க மாட்டேன், என் உயரத்தைப் போலவே மூன்றடி நிலம் மட்டும் கொடுத்தால் போதும் என்றார். அப்போது அசுர குரு சுக்ராசாரியார், இவர் விஷ்ணுவின் அவதாரமாக தோன்றுகிறது. அவருக்கு தானம் அளிப்பதற்கு முன் சற்று யோசியுங்கள் என்றார். ஆனால் மகாபலி சக்கரவர்த்தியோ, மகாவிஷ்ணுவே என்னிடம் தானம் பெற வந்துள்ளார் என்றால் எந்தளவிற்கு, நான் சிறந்தவன். நான் தானம் கொடுத்தே தீருவேன் என்றார். உடனே வாமனனாக வந்த பகவான், ஓங்கி உயர்ந்து ஓர் அடியால் பூமியையும், மற்றுமோர் அடியால் விண்ணையும் அளந்து முடித்து, மூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்று கேட்டார். அதற்கு மகாபலி தன் தலை மீது வைக்குமாறு சொன்னார். மகாபலியின் தலையில் வாமனன் கால் வைத்ததும், மகாபலி பாதாளலோகம் சென்றார். அசுரராக இருந்தாலும், மக்களுக்கு நல்லனவற்றை செய்த மகாபலிக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டார். அப்போது மகாபலி 'வருடம் ஒரு முறை இதே நாளான திருவோணத்தில், நான் இந்த பூமிக்கு வந்து எல்லா மக்களும் மகிழ்ச்சியோடு வாழ்வதை பார்த்து செல்ல வேண்டும்' என்னும் வரத்தை கோரினார். எம்பெருமானும் வரத்தை அருளினார். மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு தோறும் மக்களை காண வரும் இந்த நாளே 'ஓணம் பண்டிகை' ஆக போற்றி கொண்டாடுகிறார்கள். அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துக்கள்!!

நாகபஞ்சமி 2023 விரதம் இருப்பது எப்படி? வழிபாட்டு முறைகள் & நேரம் குறித்த முழுத்தகவல்கள்.. | Naga Panchami 2023 Viratham

Nandhinipriya Ganeshan August 16, 2023

ஆவணி மாதத்தில் வரும் மிக முக்கியமான விரத மற்றும் வழிபாட்டு நாட்களில் ஒன்று நாக பஞ்சமி. பொதுவாக, பாம்புகளை தெய்வமாக வழிபடும் வழக்கம் நம்மிடையே இருந்து வருகிறது. வாசுகி, ஆதிசேஷன், காலிங்கன் என பல பெயர்களால் அழைக்கப்படும் நாகங்களை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாளே இந்த நாக பஞ்சமி. அன்றைய தினம் விரதமிருந்து நாகங்களை வழிபடுவதால் செல்வ வளம் அதிகரிக்கும். விருப்பங்கள் நிறைவேறும். மேலும், நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், நாக தோஷத்தால் திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், மண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள், பாம்புகளால் பிரச்சனைகளை சந்திப்பவர்கள், பாம்புகள் அடிக்கடி கனவில் வருபவர்களும் ஆகியோர் இந்த நாளில் விரதம் இருந்து வேண்டிக் கொள்ளலாம். இதனால் பாம்புகளால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து நிரந்தர நிவாரணம் கிடைக்கும். நாகபஞ்சமி திதி மற்றும் நல்ல நேரம்: ஆவணி மாதம் வளர்பிறை பிறையில் வரும் பஞ்சமி திதியை நாக பஞ்சமியாக கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு நாக பஞ்சமி ஆகஸ்ட் 21 ம் தேதி வருகிறது. பஞ்சமி திதியானது ஆகஸ்ட் 21 ஆம் தேதி பகல் 12.21 மணிக்கு துவங்கி, ஆகஸ்ட் 22 ஆம் தேதி பகல் 2 மணி வரை உள்ளது. நாகபஞ்சமி விரதம் 2023 இருப்பது எப்படி? அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிடுங்கள். பால் ஒரு டம்ளர் மட்டும் குடித்துவிட்டு விரதத்தை தொடங்கவும். மாலை 5 மணியளவில் வீட்டின் பூஜையறையில் புற்று அல்லது நாகத்துடன் இருக்கக்கூடிய கடவுள் படங்கள் இருந்தால் சுத்தம் செய்து பூக்களால் அலங்கரித்துக் கொள்ளவும். பின்னர், வடை, பாயசம், முக்கியமாக கொழுக்கட்டையோ அல்லது பால் கொழுக்கட்டையோ செய்து பூஜைசெய்து, தேங்காய் உடைத்து வைத்து, பழம், வெற்றிலை, பாக்குடன் நைவேத்யம் செய்ய வேண்டும். மஞ்சள் சரடு 10 எடுத்து அவற்றை முடி போட்டு, அவற்றை படத்தின் வலது பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும். பூஜை செய்யும் போது அம்மனுக்கு ஒரு சரடு மட்டும் சாற்ற வேண்டும். பூஜை முடிந்ததும் அந்த சரடை அனைவரும் வலது கையில் கட்டிக் கொள்ளலாம். அருகில் பாம்பு புற்று இருந்தால் சிறிது, பால், பழம், கொழுக்கட்டை எடுத்துக் கொண்டு போய், புற்றில் பால்விட்டு, பழம், கொழுக்கட்டை வைத்து விட்டு வரலாம். அருகில் புற்று ஏதும் இல்லையென்றால் வீட்டில் பூஜையில் வைத்திருக்கும் அம்மன் படத்தின் மேலேயே சிறிது பால் அபிஷேகம் செய்துக் கொள்ளலாம். இந்த நோன்பு கூடப் பிறந்த சகோதரர்களின் நலத்தையும் வளத்தையும் கோரும் நோன்பாகும். அதனால் அவர்களை வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போட்டு பணமோ அல்லது துணிகளோ வைத்து, தாம்பூலம் கொடுத்து, பெரியவர்களாக இருந்தால் நமஸ்கரித்து ஆசி பெற வேண்டும். சிறியவர்களாக இருந்தால் ஆசீர்வாதம் செய்ய வேண்டும்.

கருட பஞ்சமி எதற்கு கொண்டாடப்படுகிறது? வியக்க வைக்கும் வரலாறு.. | Garuda Panchami 2023 History in Tamil

Nandhinipriya Ganeshan August 10, 2023

ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி, அதாவது ஷ்ராவண மாதத்தில் (ஜூலை-ஆகஸ்ட்) வளர்பிறை (சுக்ல பக்ஷா) 5வது நாள் 'கருட பஞ்சமி' என அழைக்கப்படும். தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், இந்த நாள் நாக சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. விஷ்ணு பகவானின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடன் பிறந்த தினமே கருட பஞ்சமி. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். கருடனைப் போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய தாய்மார்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர். தற்போது கருட பஞ்சமி தினத்திற்கான புராண கதை என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம். கருட பஞ்சமி புராண கதை! பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு மனைவிகளுள் கத்ரு, வினதை என்ற இரு சகோதரிகளும் இருந்தார்கள். இவர்களில் வினதை அருணன் மற்றும் கருடனையும், கத்ரு பாம்புகளையும் பெற்றெடுத்தனர். கத்ருவுக்கு வினதையைப் பிடிக்காது. அதனால், அவளை தனக்கு அடிமையாக்க நினைத்து, தந்திரமாக போட்டிக்கு அழைப்பு விடுத்தாள். அக்கா! நமக்குள் ஒரு போட்டி. பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட, உச்சைஸ்ரவஸ் என்ற குதிரை என்ன நிறம் தெரியுமா? என்றாள். இதிலென்ன சந்தேகம்; அது வெள்ளை நிறம் என்றாள் வினதை. இல்லையில்லை, அதன் வால் மட்டும் கருப்பு என்று கத்ரு கூற, வினதை அதை மறுத்தாள். இந்த விவாதம் வளர்ந்து போட்டியில் வந்து நின்றது. சரி! நாம் ஒரு பந்தயம் கட்டுவோம். யார் சொல்வது தவறோ, அவர் ஜெயிப்பவருக்கு அடிமையாக வேண்டும் என்றாள் கத்ரு. வினதையும் இதற்கு ஒப்புக் கொண்டாள். கத்ரு, ரகசியமாக தன் பாம்பு குழந்தைகளில் கருப்பானவற்றை அழைத்து, நீங்கள் போய் குதிரையின் வாலில் சுற்றிக் கொள்ளுங்கள் என உத்தரவு போட்டாள். பாம்புகளும் அவ்வாறே குதிரையின் வாலில் சுற்றிக் கொண்டன. போட்டியின் முடிவில் வினதை தோல்வியுற்று அடிமையானாள். அவளோடு அவள் பெற்ற அருணனும், கருடனும் அடிமைகளானார்கள். கருடன் கத்ருவுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் வாகனம்போல் ஆனான். இதனால் கருடன் மனம் வருந்தித் தனது தாயை எப்படியாவது அடிமை வாழ்க்கையிலிருந்து மீட்க வேண்டும் என்று சபதம் கொண்டான். உடனே கருடன், சின்னம்மா கத்ருவிடம் சென்று, என் தாயை விடுதலை செய்ய நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்க, கத்ருவோ கடுமையான நிபந்தனை ஒன்றை விதித்தாள். கத்ரு கருடனிடம், தேவலோகம் சென்று இந்திரனிடமிருந்து அமிர்தக் கலசத்தைக் கொண்டுவந்து தந்தால், அடிமைத்தனத்திலிருந்து மூவருக்கும் நிரந்தரமான விடுதலை தருவதாகச் சொன்னாள். கருடன், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வழி பிறந்ததே என்று மகிழ்ச்சியடைந்து, தன் தாயை வணங்கித் தேவலோகம் சென்றான். தேவலோகத்தில், காவல் புரிந்துகொண்டிருந்த தேவர்களுக்கும், கருடனுக்கும் இடையில் கடும் போர் நடந்தது. இறுதியில், கருடன் வெற்றி பெற்று, தேவேந்திரனை வணங்கி, அவனிடமிருந்து அமிர்தக் கலசத்தைப் பெற்றுவந்து கத்ருவிடம் கொடுத்தான். அப்போது, குதிரையின் வாலில் சுற்றியிருந்த கருப்பு பாம்புகள், அமுதத்தை குடிக்கும் ஆசையில் கீழே இறங்கின. வால் கருப்பாக மாறியதன் ரகசியம் வெளிப்பட்டு விட்டதால் அதிர்ந்துப்போனாள் கத்ரு. இருந்தாலும், வினதை அவளை மன்னித்தாள். மூவருக்கும் ஏற்பட்டிருந்த அடிமை வாழ்வு நீங்கி, ஆனந்தமாக வாழ தொடங்கினார்கள். பின்னர், எதிரிக்கும் அன்பு செய்த வினதைக்கும், கருடனுக்கும் திருமால் காட்சி தந்து, தாயைக் காத்த தனயனை, தன் வாகனமாக ஏற்றார். அந்த கருடன் பிறந்த தினமே இந்த 'கருட பஞ்சமி' ஆகும். கருட பஞ்சமி வழிபாடு: இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில் கருட பகவானை வழிபட்டால் விஷ்ணு பகவானின் முழு அருளையும் பெறலாம். மேலும், கருட பஞ்சமி நாளன்று நாகர்களை வழிபாடு செய்வதன் மூலம் சகோதர்களின் ஆயுள் நீடிக்கும். ஏனென்றால், நாகர்களும், கருடனும் ஒரு தந்தை (தாய் வேறு வேறு) பிள்ளைகள், அதாவது சகோதரர்கள் தானே. அதனால் தான் இந்த நாளை கருட பஞ்சமி அல்லது நாக பஞ்சமி என்று அழைக்கிறார்கள். இத்தகைய கீழ்கண்ட காயத்ரி மந்திரங்களைச் சொல்லி கருட பகவானை வழிபாடு செய்தால் கூடுதல் நன்மை கிட்டும். கருட காயத்ரி மந்திரம்: 1. தத்புருஷாய வித்மஹே ஸுவர்ண பக்ஷாய தீமஹி தந்நோ கருட ப்ரசோதயாத் 2. ஓம் ககோத்தமாய வித்மஹே வைணதேயாய தீமஹி தன்ன தார்ஷ்ய ப்ரசோதயாத்

ஆயுளை நீட்டிக்கும் நாக பஞ்சமி வரலாறும் சிறப்புகளும்! | Naga Panchami 2023 Story in Tamil

Nandhinipriya Ganeshan August 09, 2023

ஒவ்வொரு வருடமும் ஆடி அல்லது ஆவணி மாதம் வளர்பிறையில் (சுக்லா பக்ஷா) வரும் பஞ்சமியை 'நாகபஞ்சமி' என்பார்கள். இந்த நாள் 'கருட பஞ்சமி' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விஷேசமான நாளில் விரமிருந்து கோயிலில் உள்ள நாக தெய்வங்களையோ அல்லது வீட்டில் நாக பொம்மையை வைத்தோ வழிபாடு செய்வதன் மூலம் நாக தோஷம் நீங்குவதோடு, சகோதரர்களின் ஆயுள் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. நாக பஞ்சமி புராண கதை! நாக பஞ்சமிக்குப் பின்னால் பல்வேறு புராணக் கதைகள் உள்ளன. மகாபாரதத்தின் படி, யமுனை நதியில் காளியா என்ற பெரிய விஷப்பாம்பு வசித்து வந்தது. இது ஆற்றங்கரையோரம் வாழ்ந்து வந்த கிராம மக்களை துன்புறுத்தி வந்தது. பாம்பு மிகவும் பெரியதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இருந்ததால், கிராம மக்கள் ஆற்றுக்குள் செல்லவே பயந்தனர். ஒரு நாள், பகவான் கிருஷ்ணரும் அவரது நண்பர்களும் ஆற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​பந்து ஆற்றின் உள்ளே விழுந்தது. அதை எடுப்பதற்காக கிருஷ்ணர் ஆற்றில் குதித்தார். அப்போது ஆற்றில் இருந்த பெரிய நாகம் காளியா கிருஷ்ணரை தாக்கியது. அப்போது கிருஷ்ணர் பாம்பை பிடித்து சண்டை போட ஆரம்பித்தார். காளியா உடனே கிருஷ்ணரின் சக்தியை உணர்ந்து அவரை விஷ்ணுவின் அவதாரம் என்பதை தெரிந்துக்கொண்டது. எதிர்காலத்தில் கிராம மக்களை துன்புறுத்தமாட்டேன் என்று உறுதியளித்து கிருஷ்ணருக்கு வாக்குக்கொடுத்தது. விஷப்பாம்பை கிருஷ்ணர் தனது சக்தியால் வென்ற அத்தகைய தினமே நாக பஞ்சமி என்று கொண்டாடுகிறார்கள். சகோதரர் - சகோதரியின் பாசம்! இந்த நாக பஞ்சமி அனுசரிக்கப்படுவதற்கு பின்னால் மற்றொரு கதையும் உள்ளது. இது சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அன்பையும் பிணைப்பையும் உணர்த்துகிறது. மதுராபுரிப்பட்டினத்தில் மதுரேஸ்வர ராஜு என்ற ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஏழு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். எட்டு பேரில் அங்கம்மா தான் மூத்தவள். அவர்கள் 8 பேரும் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர்கள். எனவே, இந்த 7 சகோதரர்களும் தங்களது அக்காவை நன்றாக கவனித்துக் கொண்டனர். தங்கள் வாழ்வாதாரத்திற்காக, சகோதரர்கள் விவசாய நிலங்களில் வேலை செய்து வந்தனர். அங்கம்மா, தன் சகோதரர்களுக்கு தினமும் உணவு சமைத்து, அவர்களுக்கு உணவளிக்க பண்ணைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தாள். ஒரு நாள், நாக பஞ்சமி அல்லது கருட பஞ்சமி என்று தெரியாமல், வழக்கம் போல் உணவு சமைத்து, தன் சகோதரர்களுக்கு எடுத்துச் சென்றாள். அந்த நாளில் தான் கருடன் தனது கொக்குகளில் பாம்பை பிடித்து சண்டையிட்டார். அப்போது பாம்பு விஷத்தை வெளியேற்றியது. இந்த விஷம் அங்கம்மாவுக்கு தெரியாமல் அவள் கொண்டு சென்ற உணவில் விழுந்தது. அது தெரியாமல் அவள் தனது சகோதரர்களுக்கு உணவளித்தபோது, ​​​​அவர்கள் அனைவரும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் மயங்கி விழுந்து இறந்தனர். என்ன நடந்தது என்று தெரியாமல் அலறி துடித்தவள், அதே உணவை சாப்பிட்டு அவளும் இறக்க முயன்றாள். சிவபெருமானும் பார்வதி தேவியும் ஒரு வயதான தம்பதியின் உருவம் எடுத்து பூமிக்கு வந்து அங்கம்மாவை சந்தித்தனர். தனது சகோதரர்களின் இறப்பை தாங்கிக்கொள்ளாமல் கடும் மனவேதனையில் இருந்த அங்கம்மாவை, பார்வது தேவி "ஏன் என் குழந்தை அழுகிறாய்?" என்று கேட்டார். "உன்னிடம் என் இதயத்தின் பாரத்தை அவிழ்த்தாலும், என் இதயத்தில் துளைக்கும் வலி குணமாகுமா? என் பிரச்சனையை உங்களால் தீர்த்து வைக்க முடியுமா?" என்று அங்கம்மா கேட்கிறாள். அதற்குப் பதிலளித்த பார்வதி தேவி, தெய்வீகப் புன்னகையுடன், "உலகின் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பவர்கள் நாங்கள்", எங்களிடம் உன் பிரச்சனையை கூறு என்று சொல்ல அங்கம்மா நடந்தவற்றை விளக்கினாள். நான் எனது பெற்றோரை இழந்து, தற்போது ஏழு சகோதரர்களையும் இழந்து நிற்கதியாக நிற்கிறேன்; இந்த சாபத்தை எங்கள் மீது கொண்டு வந்தது எது? என்று கூறி அழுகிறாள். நீ உன் முன்ஜென்மத்தில் கருட பஞ்சமி சடங்குகளைச் சரியாகச் செய்யாததுதான் உன் வேதனைக்குக் காரணம் என்று பார்வதி தேவி விளக்கினார். 'நீ என்ன பூஜை செய்ய வேண்டும், அதன் முறைகள் மற்றும் தேவையான விஷயங்களை நான் விளக்குகிறேன். அது முடிந்ததும், தேவிக்கு அர்ச்சனை செய்து பாம்பு குழியின் அடிப்பகுதியில் இருந்து சிறிது புனிதமான சேற்றையும், அக்ஷதாவையும் (மஞ்சள் கலந்த பச்சை அரிசி), பூக்களையும் எடுத்து இறந்த உடன்பிறந்தவர்களின் மேல் வைத்துவிடு, எல்லாம் நல்லபடியாக நடக்கும்' என்று பார்வதி தேவி கூற அங்கம்மாவும் வழிமுறைகளைப் பின்பற்றினாள். அதன்பிறகு, அங்கம்மாவும் அவளுடைய இறந்த சகோதர்களை உயிருடன் திரும்ப பெற்றாள். அத்தோடு இழந்த செல்வத்தையும் செழிப்பையும் திரும்பப் பெற்றனர்.

சகல செல்வங்களையும் பெற ஆடி கிருத்திகையில் இதை செய்ய மறந்துடாதீங்க.. | Aadi Krithigai 2023 Viratham

Nandhinipriya Ganeshan August 08, 2023

ஒவ்வொரு தமிழ் மாதமும் சிறப்பு வாய்ந்தவை தான். இருப்பினும், அவற்றில் சில மாதங்கள் மட்டுமே இறைவனுக்கு உகந்த மாதமாக இருக்கின்றன. அப்படி இறைவனுக்கு உகந்த மங்களகரமான மாதம்தான் இந்த ஆடி மாதம். இந்த மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் மிகவும் விஷேசமானதாக கருதப்படுகிறது. தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் என முருகப் பெருமானை வழிபடுவதற்கு வருடத்தில் எத்தனையோ நாட்கள் இருந்தாலும், மாதந்தோறும் வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்கள் என்றால் சஷ்டி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் தான். மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும் தை, கார்த்திகை, ஆடி மாதங்களில் வரும் கிருத்திகை மிகவும் விஷேசம். அந்தவகையில், இந்த வருடம் ஆடி கிருத்திகை ஆகஸ்ட் 9 ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் விரதமிருந்து முருகப் பெருமானை வணங்கினால், திருமண தடை, கடன் தொல்லை, வீடு - மனை சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். வாழ்க்கையில் செல்வ செழிப்பு ஏற்படும். செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். ஆடி கிருத்திகை விரதம் இருப்பது எப்படி? ஆடி கிருத்திகை தினத்தன்று அதிகாலை வேளையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு முருகனை மனதில் நினைத்துக் கொண்டு விரதத்தை தொடங்க வேண்டும். இடையில் தண்ணீர் அருந்திக்கொள்ளலாம். சாப்பிட்டாக வேண்டிய நிலையில் இருப்பவர்கள் அந்நாள் முழுவதும் உப்பு சேர்க்கப்படாத உணவை உண்டு எளிமையான விரதம் இருக்கலாம். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் பூஜையறையில் முருகனின் படத்திற்கு முன்பு அரிசி மாவில் அறு கோண கோலம் இட்டுக் கொள்ளவும். பின்பு முருகப் பெருமானின் படத்திற்கு செவ்வரளி, செம்பருத்தி போன்ற சிவப்பு நிற மலர்கள் அல்லது வாசனை மிகுந்த வெள்ளை நிற மலர்களால் அலங்கரித்துக் கொள்ளவும். அதன்பிறகு, படத்தின் இருபுறமும் நெய் தீபமேற்றி, வாழை பழம் நிவேதனம் வைத்து தீப, தூர ஆராதனை காட்டிய பிறகு 'ஓம் சரவணபவ' என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபட வேண்டும். அதன்பிறகு, அருகாமையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.

ஆடி கிருத்திகையில் முருகனை வழிபட உகந்த நேரம் எது? | Aadi Krithigai 2023 Date and Timing

Nandhinipriya Ganeshan August 08, 2023

அம்மனுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தெய்வங்களையும் வழிபட மிகவும் அற்புதமான மாதம் தான் இந்த ஆடி மாதம். அப்படி இந்த மாதத்தில் வரும் சிறப்பான நாட்களில் ஒன்று 'ஆடி கிருத்திகை'. 27 நட்சத்திரங்களில் 3வது நட்சத்திரமான கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த நட்சத்திரம் என்பதால், அந்த நாள் மிகவும் முருகப் பெருமானை வழிபாடு செய்ய உகந்த நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும் கார்த்திகை, தை, மற்றும் ஆடி ஆகிய மாதங்களில் வரும் கார்த்திகை நட்சத்திரம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அந்தவகையில், ஆடி கிருத்திகை நாளில் முருகப் பெருமானை வழிபாடு செய்வதால் செவ்வாய் தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும், கடன் பிரச்சனைகளும் விலகும். நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கைக்கூடி வரும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நாள் இந்த ஆண்டு எப்போது வருகிறது என்பதை பற்றி பார்க்கலாம். ஆடி கிருத்திகை 2023 எப்போது? இந்த வருடம் ஆடி கிருத்திகை ஆகஸ்ட் 9 ஆம் தேதி (புதன்கிழமை) வருகிறது. அன்றைய தினம் காலை 07.33 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 10 ஆம் தேதி காலை 07.44 மணிக்கு முடிவடைகிறது. மேலும், காலை 09.15 முதல் 10.15 வரை நல்ல நேரம் என்பதால் புதன்கிழமை காலை 9 மணியிலிருந்து 11 வரை முருகப் பெருமானுக்கு பூஜை செய்து வழிபாடு செய்யலாம்.