Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 73,399.78
-845.12sensex(-1.14%)
நிஃப்டி22,272.50
-246.90sensex(-1.10%)
USD
81.57
Exclusive

வடக்கு வாழ்கிறது.. மேற்கு தேய்கிறது .. குமுறும் கோவைவாசிகள்!!

Sekar August 03, 2022 & 13:47 [IST]
வடக்கு வாழ்கிறது.. மேற்கு தேய்கிறது .. குமுறும் கோவைவாசிகள்!!Representative Image.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் நிலையில், தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பெரிய அளவில் வளர்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதில்லை என்ற மனக்குமுறலை, தற்போதைய ஒரு அறிவிப்பு அதிகரித்துள்ளது.

தலைநகர் சென்னையில் மீனம்பாக்கத்திற்கு அடுத்த படியாக இரண்டாவதாக ஒரு சர்வதேச விமான நிலையம் அமைக்க சமீபகாலமாக திட்டமிடப்பட்டு வந்த நிலையில், அதை சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பரந்தூரில் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது புதிய மெட்ரோ வழித்தடங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் என சென்னையின் வளர்ச்சி பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றன. இது சென்னை மட்டுமல்லாது அதை ஒட்டியுள்ள மாவட்டங்களையும் வளர்த்து வருகிறது.

இப்படி வளர்ச்சி முழுவதும் வடக்கிற்கே சென்றுவிட்டால் மேற்கும், தெற்கும் என்ன செய்வது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. கோவை, மதுரை, திருச்சி, ஓசூர் என இரண்டாம் நிலை நகரங்களிலும் வளர்ச்சி திட்டங்கள் வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கான முன்னெடுப்புகள் தொடங்கியுள்ள போதிலும், அவற்றை விரைவுபடுத்த வேண்டும் என்றும், புதிய திட்டங்கள் வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

இதே தொழில் வளர்ச்சி மிகுந்த கோவையை எடுத்துக் கொண்டால், தற்போது மிகவும் குறுகிய அளவியிலே பன்னாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக கோரப்பட்டும், அதற்கான பணிகள் மிகவும் மந்தமாக நடந்து வருகிறது. தற்போது இது நிலம் கையகப்படுத்தும் நிலையில் இருக்கிறது.

மேலும் கோவையின் மிகப்பெரிய கனவாக இருக்கும் மெட்ரோ ரயில் திட்டமும் பல கட்ட கோரிக்கைகளுக்கு பிறகு தற்போது தான் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் நிலைக்கு நகர்ந்துள்ளது. இது 9,424 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் என்றும், மார்ச் 2027ல் பயன்பாட்டிற்கு வரும் என்றும் ஒரு ஆர்டிஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகளவில் பஞ்சாலைகளைக் கொண்டு தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை பின்னர் உற்பத்தித் துறையில் கால் பதித்து, எம்எஸ்எம்இ நிறுவனங்களின் மையமாக மாறியது. பெங்களூரை ஒத்த காலநிலையைக் கொண்டுள்ளதால், இங்கு தற்போது அதிகளவில் ஐடி நிறுவனங்களும் குவிந்து வருகின்றன.

மேலும் மத்திய அரசு டிபென்ஸ் காரிடாரை அமைத்து கோவையை பாதுகாப்புத் துரையின் கேந்திரமாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இருந்தாலும் அவை எதிர்பார்த்த வேகத்தில் நடக்கவில்லை என்பதே கோவையில் பலரின் கருத்தாக உள்ளது. மேலும் திருப்பூர் மட்டுமல்லாது கொங்கு மண்டலம் முழுவதும் சாயப்பட்டறை கழிவுநீரை ஆற்றில் விடும் பிரச்சினைக்கு இன்னும் நிரந்தர தீர்வு எட்டிபாடில்லை எனக் கூறப்படுகிறது.

தமிழக அரசின் தலைமை இடமாக சென்னை இருப்பதால், அதற்கு அதிக முக்கியத்துவம் கிடைப்பது வழக்கமானது தான் என்பதை கோவைவாசிகள் ஏற்றுக் கொண்டாலும் கூட, தமிழகத்தின் வருவாயில் பெரும்பகுதியைக் கொடுக்கும் கொங்கு மண்டலத்தின் வளர்ச்சித் திட்டங்களில் அரசு தொடர்ந்து சுணக்கமாக செயல்படுவது "வடக்கு வாழ்கிறது மேற்கு தேய்கிறது" எனும் எண்ணத்தையே இங்குள்ளவர்களிடம் ஏற்படுத்தியுள்ளதாக குமுறுகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்