Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து இயக்கம்!

Baskaran Updated:
நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து இயக்கம்! Representative Image.

நெல்லை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் முழுமையடைந்ததால், 5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் வழியாக பேருந்துகள் இயக்கப்பட்டன. 

நெல்லை மாநகரின் இதயப்பகுதியாக விளங்கும் சந்திப்பு பேருந்து நிலையம் பேருந்து போக்குவரத்து, பயணிகள் நடமாட்டம் என்று எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.965 கோடி செலவில் நெல்லையில் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டது.  

இதில் நெல்லை 4.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட சந்திப்பு பேருந்து நிலையத்தையும் முழுமையாக இடித்துவிட்டு புதிதாக கட்டுவதற்கு ரூ.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நெல்லை சந்திப்பு பேருந்து நிலைய கட்டுமான பணி பல்வேறு காரணங்களால் சுமார் 5 ஆண்டுகளை தொட்ட பிறகும் இதுவரை முழுமையாக நிறைவடையாமல் நிற்கிறது.  

இதனால் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்த முடியாமல் பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே இந்த பேருந்து நிலைய பணிகள் முழுமையாக முடிவடையும் வரை காத்திருக்காமல் வியாபாரிகள், பொதுமக்கள், ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் ஆகியோரின் நலன் கருதி தற்காலிகமாக பேருந்து நிலையத்தை சுற்றியாவது பேருந்துகள் இயக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.  

இதையடுத்து கடந்த 10 நாட்களாகவே மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் பேருந்து நிலைய பகுதிகளில் தொடர் ஆய்வு மேற்கொண்டு கட்டுமான பணிக்காக சுற்றிலும் அடைக்கப்பட்டிருந்த தகரங்களை உள்ளே தள்ளி வைத்து விட்டு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்தனர். 
 
அதேநேரத்தில் முதல்கட்டமாக மாநகர பகுதிக்குள் இயக்கப்படும் டவுன் பேருந்துகள் மற்றும் விரிவாக்க பகுதிகள், புதிய பேருந்து நிலையங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளை மட்டுமே சந்திப்பு பேருந்து நிலையம் வழியாக இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ராஜா பில்டிங் சாலையில் பயணிகள் வசதிக்காக 5 இடங்களில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டது.  
 
தற்காலிகமாக பேருந்துகளை இயக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்த நிலையில் இன்று காலை 6 மணி முதல் அந்த வழியாக பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இதில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

பின்னர் கலெக்டர் கார்த்திகேயன் கூறுகையில், நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் இன்னும் 60 நாட்களில் திறக்கப்படும். சந்திப்பு பேருந்து நிலையத்தை சுற்றிய சாலைகளும் விரைவில் அமைக்கப்படும் என்றார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்